சி.பீ. கிண்ண முக்கோண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி 9 ஓட்டங்களால் வென்றது.
இதன் மூலம் இத்தொடரின் இறுதிப்போட்டிகளுக்கும் இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. மெல்பேர்னில் மிக பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 238 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 49.1 ஓவர்களில் 229 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. 239 ஓட்ட இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 3 ஆவது ஓவரில் மாலிங்கவின் பந்துவீச்சில் டேவிட் வார்னரையும் (6) 4 ஆவது ஓவரில் மத்தியூ வாட்டையும் (9) இழந்தது. 6 ஆவது ஓவரில் பீற்றர் பொரெஸ்ட் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது அவுஸ்திரேலியா கடும் நெருக்கடிக்குள்ளானது. பின்னர் ஷேன் வட்ஸன், மைக் ஹஸி ஆகியோரின் துடுப்பாட்டத்தினால் அவ்வணி 25 ஆவது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வேளையில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு காணப்பட்டபோதிலும் 41 ஆவது ஓவரில் 178 ஓட்டங்கள் பெற்றிருந்தவேளையில் 7 ஆவது விக்கெட்டையும் இழந்தது. அவ்வணி மேலும் 9 ஓட்டங்களைப் பெற்றபோது கிளின்ட் மெக்கி(6) ரன் அவுட்டானார். கடைசி 3 ஓவர்களில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் கைவசமிருந்த நிலையில் 23 ஓட்டங்கள் தேவைப்பட்டன. ரங்கன ஹேரத் வீசிய 47 ஆவது ஓவரின் முதல் பந்தில் டேவிட் ஹஸி சிக்ஸர் ஒன்றை அடித்தபோது போட்டியின் போக்கு மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு சாதமாகும் சாத்தியம் தோன்றியது. கடைசி 12 பந்துகளில் அவ்வணிக்கு 14 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன. லஷித் மாலிங்க வீசிய 48 ஆவது ஓவரில் 2 ஆவது பந்தில் தில்ஷானிடம் பிடி கொடுத்து ஷேவியர் டொஹெர்த்தி ஆட்டமிழந்தார். இறுதி ஓவரில் அவுஸ்திரேலியாவுக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் நுவன் குலசேகர பந்துவீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்துவீச்சிலேயே டேவிட் ஹஸி ஆட்டமிழந்ததால் இலங்கை அணியின்வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. அவ்வணியின் சார்பில் டேவிட் ஹஸி 74 ஓட்டங்களையும் அணித்தலைவர் ஷேன் வட்ஸன் 65 ஓட்டங்களைப் பெற்றனர். இலங்கை பந்துவீச்சாளர்களில் லஷித் மாலிங்க 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நுவன் குலசேகர 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கையின் சார்பில் 75 ஓட்டங்களைப் பெற்ற தினேஷ் சந்திமால் இப்போட்டியின் சிறப்பாட்டக்காராகத் தெரிவானார். இத்தொடரின் முதல் சுற்றில் ஒவ்வொரு அணியும் தலா 8 போட்டிகளில் விளையாடிய நிலையில் அவுஸ்திரேலியா, இலங்கை ஆகிய அணிகள் தலா 19 புள்ளிகளைப் பெற்று இறுதிப்போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. இந்திய அணி 15 புள்ளிகளை மாத்திரமே பெற்றது. அவுஸ்திரேலிய - இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட இறுதிப்போட்டித் தொடர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’