வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

வெளிநாடுகளுக்குப் போவது வீண்வேலை: முரளிதரன்


வெளிநாடுகளுக்குப் போவது என்பது ஒரு வீண்வேலை. அவற்றை எல்லாம் விடுத்து நம் நாட்டில் நன்றாக சுயதொழில்களை மேற்கொள்ளலாம். நம்மவர்கள் எதிலும் கௌரவம் பார்ப்பவர்களாகத்தான் உள்ளார்கள். வெளிநாட்டுக்குப் போயும் இங்கு கஷ்டப்படுவது போல்தான் அங்கேயும் பல கஷ்டங்களைப்படுகின்றனர்' என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்தில் இலங்கைக்கான தேசிய சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் தேசிய இளைஞர் சேவை மன்றத்தினால் நேற்று வியாழக்கிழமை நடத்தப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கான சைக்கிள்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், '30 வருடகாலம் சண்டை பிடித்தோம். அதில் எந்த பிரயோசனமும் இல்லை. அதனால் அந்த யுத்தத்தினை நான் தான் நிறுத்தினேன். இல்லையேல் தற்போது பச்சை ரீசேட் போட்டுள்ளவர்கள் இன்னுமொரு பச்சை ரவுசரை போட்டுக்கொண்டு ஆளுக்கொரு துவக்கோடு நின்றிருப்போம். இது எல்லாவற்றையும் பார்த்துவிட்டு இந்த யுத்தம் வேண்டாம் என்று நானே கூறினேன். தற்போது இருக்கின்ற பாரிய பிரச்சினை என்னவென்றால் வேலைவாய்ப்பு பிரச்சினையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் சுமார் 1,800 பட்டதாரிகள் உள்ளனர். கிழக்கில் 2,800 இற்கும் மேலும் வடகிழக்கில் 8,000 பட்டதாரிகளும் உள்ளனர். இதனைவிட க.பொ.த. சாதாரண, உயர்தரம் படித்தவர்கள் அநேகம்பேர் வேலை இல்லாமல் உள்ளனர். இவைகள் அனைத்தும் கடந்த 30 வருடகால யுத்தம் தந்த சுமைகளாகும். கடந்த யுத்தத்தில் பல பெறுமதியான உயிரிழப்பு, சொத்து இழப்பு, எத்தனையோ பிள்ளைகள் தந்தை, தாய் இல்லாமல் தவிக்கின்றார்கள். இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்றெல்லாம் பாரிய பிரச்சினைகளையே எமது மக்கள் எதிர்நோக்குகின்றார்கள். இவற்றை எல்லாம் மையப்படுத்தித்தான் வவுணதீவுப் பிரதேசத்தினைத் தெரிவு செய்து 120 இலட்சம் ரூபா நிதி செலவில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கனரக வாகன ஓட்டுனர் பயிற்சி, கணினிப் பயிற்சி போன்றவற்றுக்கு இவ் அமைப்பு முக்கியத்துவம் கொடுத்து இளைஞர், யுவதிகளை ஊக்கப்படுத்தியுள்ளார்கள். சாதாரணமாக கனரக வாகன சாரதிகள் 40 தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வேதனம் மாதாந்தம் பெறுகின்றார்கள். தற்போது எழுந்துள்ள வேலையில்லாப் பிரச்சினைக்கு இதுபோன்ற கைத்தொழில்களையும் சுயதொழில்களையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் அரசாங்கத்திடம் அனைவருக்கும் தொழில் வழங்குவதற்கு பணம் இல்லை. பணம் இருந்தாலும் ஒரே நேரத்தில் அனைவருக்கும் தொழில் வழங்க முடியாது. அதனைக் கட்டம் கட்டமாகத்தான் மேற்கொள்ளமுடியும். மட்டக்களப்பில் அனைத்து அரசசார்பற்ற நிறுவனங்களையும் ஒன்றிணைத்து நான்தான் செயற்பட்டு வருகின்றேன். அதில் மக்கள் மத்தியில் சுயதொழில், கைத்தொழில் போன்றவற்றை ஊக்கப்படுத்தும் நடைமுறைகளை மேற்கொள்ளவுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது விவசாயம் மேலோங்கி காணப்படுகின்றது. மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, சுற்றுலாத்துறை என்பன வளர்ச்சியடைந்துள்ளன. தற்போது 2,000 இளைஞர்கள் பாசிக்குடா, கல்குடா போன்ற பகுதிகளில் சுற்றுலாத்துறையை மையப்படுத்தி வேலை செய்கின்றார்கள். நம்மவர்கள் எதிலும் கௌரவம் பார்ப்பவர்களாகத்தான் உள்ளார்கள். வெளிநாட்டுக்குப் போயும் இங்கு கஷ்டப்படுவதுபோல் தான் அங்கேயும் பல கஷ்டங்களைப்படுகின்றார்கள். வெளிநாடுகளுக்குப் போவது என்பது ஒரு வீண்வேலை. அவற்றையெல்லாம் விடுத்து நம் நாட்டில் நன்றாக சுயதொழில்களை மேற்கொள்ளலாம். யுத்த காலத்தில் வவுணதீவுப் பாலத்தினால் போகமுடியாது. இளைஞர்கள், யுவதிகள் நடமாட முடியாது. தொழிலுக்குப் போனவர்கள் திரும்பி வரமாட்டார் என பல கஷ்டங்களை நம்மக்கள் அனுபவித்தனர். இவைகள் தற்போது இல்லை. நமக்கு என்று ஓர் அரசியல் அதிகாரம் உள்ளது. அதற்காக காணி அதிகாரம், பொலிஸ் அதிகாரம் நமக்கு எதற்குத் தேவை? நம் மக்களுக்கு அபிவிருத்தித்தான். நீங்கள் யோசிப்பீர்கள் 'என்னடா அம்மான் காணி பொலிஸ் அதிகாரங்கள் தேவையில்லை என்று அறிக்கைகள் விடுறார்' என்று. அது கிடைக்கப் போவதுமில்லை. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எல்லாம் தற்போது கத்துவார்கள். இதனால் எந்தவித பயனுமில்லை. காணி என்றால் அது உரிய பிரதேச செயலாளருக்குத்தான் சொந்தம். நமது தமிழ் பிரதேசத்தில் தமிழ் பிரதேச செயலாளர்கள் தான் உள்ளார்கள். அவரிடம் கூறினால் அவர் யாருக்கும் காணியை கொடுக்கமாட்டார். இதனை விடுத்து நமது இளைஞர், யுவதிகளுக்கு தொழில்வாய்ப்பு சுயதொழில்கள் பற்றி யாரும் கதைக்கின்றார்களா. இல்லை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆறரைக் கோடி ரூபா செலவில், 22 பாடசாலைகள் புனரமைக்கப்படுகின்றன. கடந்த 2011ஆம் ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கினோம். இவ்வருடத்தில் மாவட்டத்தில் 95 சதவீதத்திற்கு மக்களின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவுள்ளளோம். 11 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் வவுணதீவில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை நிறுவியுள்ளோம். இதனால் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைகின்றார்கள். சைல்ட் பண் நிறுவனம் மட்டக்களப்பில் கடந்த 6,7,வருடகாலமாக மிகவும் திறம்பட இயங்கிக்கொண்டு வருகின்றது. வவுணதீவுப் பிரதேசத்தில் 7 சதவீதமானவர்கள்தான் அரசாங்கத் தொழிலில் உள்ளனர். ஏனையவர்கள் கூலித்தொழிலிலும் விவசாயத்திலும் ஈடுபடுகின்றனர். அரசாங்கம் என்னிடம் அபிவிருத்திக்குழு தலைவராக நான் வகிக்கக்கூடிய இடத்தினைத் தெரிவுசெய்து தருமாறு கோட்டபோது அதற்கு நான் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பிரதேசங்களைத்தான் தெரிவுசெய்தேன். ஏனெனில், இந்தப் படுவான்கரைப் பிரதேசம் கடந்த காலங்களில் மிகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசமாகும். இதனை அனைவரும் இணைந்து கட்டியெழுப்ப வேண்டும். இந்த அபிவிருத்திகள் கட்டம் கட்டமாகத்தான் நடைபெற்று வருகின்றன. தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதிகள் புனரமைப்பு, பாலங்கள் கட்டுதல், வீட்டுத் திட்டங்கள், போக்குவரத்து வசதிகள், வைத்தியசாலைகள் புனரமைப்பு இவைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 30 வருடகால இழப்பை மிகக் குறுகிய காலத்தில் அபிவிருத்தி செய்துவிட முடியாது. கடந்த இரண்டு வருடத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பாரிய அபிவிருத்தியைக் கண்டுள்ளது. அரசு வட கிழக்கிற்குத்தான் அதிகளவு நிதியினை ஒதுக்கியுள்ளது. இதனைப் பயன்படுத்தி நமது பகுதியை அபிவிருத்தியடையச் செய்வோம்' எனக் கூறினார். இந்நிகழ்வில் இளைஞர் சேவை மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.ஜே.கபூர், பிரதேச செயலாளர், என்.வில்வரெத்தினம், இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் மட்டக்களப்பு பிராந்தியப் பணிப்பாளர் வேணாட் பிரகாஸ் கிராம சேவை அதிகாரிகள், இளைஞர், யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’