ஐ.நா. மனித உரிமைப் பேரவை அங்கத்தவர்களிடம் இலங்கையில் தலையிடுமாறு வலியுறுத்த வேண்டுமென நினைப்பதாக தென்னாபிரிக்க மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ஆயர் டெஸ்மண்ட் டுட்டு கூறியுள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆழமான விளக்கமும், மிகுந்த ஆராய்வும் தேவையான இலங்கை விவகாரத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அங்கத்தவர்கள் தலையிட வேண்டுமென நீங்கள் கருதுவது மனவருத்தத்துக்கு உரியதாகும் என ஆயர் டுட்டுவுக்கு எழுதிய கடிதத்தில் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார். 'இலங்கையில் நடக்கும் விடயங்கள் பற்றி நாம் சர்வதேசத்துக்கு விளக்கமளித்து வருகின்றோம். அண்மையில் நாம் தொடங்கியுள்ள தேசிய மனித உரிமைகள் வேலைத்திட்டம், நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளுடன் ஒத்துப்போகும் பல திட்டங்கள் அடங்கியுள்ளன. மனித உரிமைகள் பேரவை, இத்தருணத்தில் தலையிட்டு இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்துமானால் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான நல்லிணக்க முயற்சிகள் தடைப்பட்டுப்போகும். உலக நாடுகளில் நடப்பவற்றை அவதானிக்கும் போது சர்வதேச சமுதாயத்தின் தலையீடுகள் உள்நாட்டு பிரச்சினைகளை மோசமாக்கியுள்ளதை காணமுடிகிறது. இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு சர்வதேச சமுதாயம் உதவுவதற்கு அதிசிறந்த வழி, இலங்கை அரசாங்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபாரிசுகளை அமுலாக்க போதிய நேரத்தையும் வாய்ப்பையும் வழங்குவதே ஆகும்' என அமைச்சர் பீரிஸ், தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’