வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளுக்கு இராணுவத்தினரின் மனிதவளம் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது எனவும் இராணுவத்தினரால் வடபகுதியைக் கட்டியெழுப்ப முடியும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணத்தில் இன்று தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை யாழ். தெல்லிப்பளை, மகாஜனா கல்லூரிக்கான 3 மாடிகளைக் கொண்ட கட்டடத் தொகுதியை பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ திரைநீக்கம் செய்து வைத்து உரையாற்றும் போதே இவ்விதம் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், '30 மில்லியன் ரூபாவிற்கு மேலதிகமாக செலவிடப்படவிருந்த தெல்லிப்பளை மகாஜனா கல்லூரிக்கான கட்டடத் தொகுதி இராணுவத்தினரின் மனிதவளுவின் உதவியோடு 21.9 மில்லியன் ரூபாவில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தினரின் உதவியோடு வடபகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகிறன. தெல்லிப்பளை பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்துள்ள மக்களுக்கும், பிரதேசத்திற்கும் இராணுவத்தினர் அதிக சேவைகளைச் செய்து வருகின்றனர். குறிப்பாக வீடுகள் இல்லாத மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுத்து வருகின்றனர். அத்தோடு மனிதாபிமான பணிகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’