வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 4 ஜனவரி, 2012

வன்னி சமூகவிரோத செயல்களை தடுத்து நிறுத்துமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் களவு மற்றும் சமூக விரோதச் செயல்களை தடுத்து நிறுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தின் முழு விபரம் பின்வருமாறு :- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்படாத எல்லைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ காவலரனைத் தாண்டி பொதுமக்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆயினும், சமூக விரோதிகள் இந்தக் காவலரனில் உள்ள இராணுவத்தினருக்குச் சாராயம், சிகரெட், கையடக்கத் தொலைபேசி முற்கொடுப்பனவு அட்டைகள் போன்றவற்றைக் கொடுத்து, இப்பகுதிக்குள் சென்று பாடசாலைத் தளபாடங்கள், வீட்டுத் தளபாடங்கள், கதவுகள், யன்னல்கள் உள்ளிட்ட பொருட்களையும்; மக்களால் கைவிடப்பட்ட இரும்புப் பொருட்களையும் கொள்ளையடித்துச் செல்கின்றனர். அத்துடன், மக்கள் குடியேறிய இடங்களில் இரவு நேரங்களில் குடிபோதையில் கும்மாளத்திலும் ஈடுபடுகின்றனர். இதனால் பாதுகாப்பற்ற தற்காலிகக் கூடாரங்களில் வசிக்கும் மீள்குடியேறிய மக்கள் பெரிதும் துன்பப்படுகின்றனர். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இத்தகைய செயற்பாடுகளால் பெரிதும் சிரமப்பட்ட மக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். அப்பகுதிக்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தையும் சமூக விரோதிகளையும் பெட்டியுடன் இழுத்துச் சென்றுள்ளனர். பின்னர் எதுவித நடவடிக்கையும் இன்றி அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுதலையாகிவந்த மேற்படி நபர்கள், 'நாங்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு ரூ.10,000 கொடுத்து வெளியில் வந்துவிட்டோம். நீங்கள்தான் தகவல் கொடுத்தீர்கள் என்பதையும் பொலிஸார் எங்களுக்குச் சொல்லிவிட்டனர்' என்று புகார் கொடுத்தவரின் வீட்டிற்கு நேரடியாகச் சென்று அவர்களை மிரட்டியுள்ளனர். தினமும் நான்கைந்து வாகனங்களில் இத்தகைய களவுப் பொருட்கள் ஏ - 9 வீதியினூடாகக் கொண்டு செல்லப்படுகின்றன. கடத்தலிலும் களவுகளிலும் ஈடுபடுபவர்கள் சில சந்தர்ப்பங்களில் பாதுகாப்பு அமைச்சில்; தங்களுக்குச் செல்வாக்கு இருப்பதாகக் கூறி தப்பிவிடுகின்றனர். ஆகவே, தாங்கள் இந்த விடயத்தில் நேரடியாக கவனம் செலுத்தி, பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் துணையுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய களவுகளையும் சமூக விரோதச் செயல்களையும் தடுத்து நிறுத்துவதற்கு ஆவனம் செய்து, மீள்குடியேறிய மக்கள் அச்சமின்றி வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி பொதுமக்களின் எஞ்சிய சொத்துக்களைப் பாதுகாத்து அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுங்கள்' என்று அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’