2012ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை அங்கு வருகை தந்த முன்னாள் போராளிகளில் சுமார் 100பேர், ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே இடம்பெற்ற வாதப் போரினைக் கண்டுகளித்தனர்.
இதன்போது நீதி தொடர்பில் பின்பற்றப்படும் நடைமுறைகள் மற்றும் சிறைச்சாலைகளில் நிலவும் குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர் டீ.எம்.ஜயரத்ன தலைமையிலான ஆளும்கட்சி உறுப்பினர்கள் பதிலளித்து வந்ததையும் முன்னாள் உறுப்பினர்கள் நன்றாக அவதானித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இந்த விவாவத்தின் போது குறுக்கிட்ட நாடாளுமன்றக் குழுக்களின் குழுத் தலைவர் முருகேசு சந்திரகுமார், பொது கெலரியில் முன்னாள் போராளிகள் அமர்ந்திருப்பது தொடர்பில் அறிவித்ததை அடுத்து அவர்களுக்கு எம்.பி.க்கள் சார்பில் கைதட்டல்கள் வழங்கப்பட்டன. இதன்போது கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆயுதம் தாங்கி போராட்டம் நடத்தியவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு ஜனாநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளமைக்கு இவர்களே சிறந்த உதாரணம் என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், பிரச்சினைகளுக்கு ஜனநாயக நீரோட்டத்தின் மூலம் தீர்வு காணலாம் என்பதைக் கண்கூடாகப் பார்த்த நீங்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதான எண்ணங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அமைச்சர் ஹக்கீம் முன்னாள் போராளிகளிடம் தெரிவித்தார். இதனையடுத்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், சிவில் ஆடைகளின்றி சீருடைகளில் இவர்களைப் பார்ப்பதில் வருந்துவதாகவும் அவர்களை சாதாரண மக்களைப் போல் நடத்தியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், இவர்கள் நமது பிள்ளைகள். போராளிகள் அல்லர். அதனால் அவர்களை முறையாக நடத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அவரது கருத்துக்கு பதிலளித்த சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர, விஜயகலா எம்.பி. இது குறித்து வருந்தக் கூடாது என்றும் அவர்களின் போராட்டமே துன்பகரமான வாழ்க்கைக்கு வழிவகுத்தது எனவும் தற்போது இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிட்டார். ஒரு காலத்தில் இவர்களின் வாழ்க்கை பதுங்கு குழிகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தது. ஆனால் இன்று இவர்கள் திறமையான இளைஞர் சமுதாயமாக மாற வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இவர்களில் பலரும் எதிர்காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர்களாக சாதனை படைக்க முடியும். இவர்களில் பலர் பல்கலைக்கழக மாணவர்களாக இருந்தவர்கள். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர்களை பலவந்தமாக இணைத்துக்கொண்டதால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாக மாற்றிவிட்டது என்றும் அமைச்சர் கஜதீர தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’