ச ட்டவிரோத ஆயுதக்குழுக்களை நிராயுதபாணிகளாக்க வேண்டும் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆணைக்குழு விஜயம் செய்தபோது வழங்கப்பட்ட பல சாட்சியங்களின்படி, இத்தகைய சட்டவிரோத ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது எனவும் இடம்பெற்றததாக கூறப்படும் பல கடத்தல்கள், தவறான சிறைவைப்புகள், கப்பம் வசூலித்தல் போன்ற செயற்பாடுகளால் மக்களின் வாழ்வதற்கான உரிமை உட்பட அடிப்படை உரிமைகள் பாதிக்கப்பட்டன எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டவிரோத ஆயுதக் குழுக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இக்குழுக்களின் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு முடிவுகட்டவும் வேண்டும். இல்லாவிட்டால் தற்போது மேற்கொள்ளப்படும் நல்லிணக்கச் செயற்பாடுகளுக்கு பாரதூரமான தடையை ஏற்படுத்திவிடும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழு அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: "பாரதி என்பவர் கிழக்கு மாணத்தில் பல கடத்தல், கப்பம் வசூலித்தல் முதலான பல குற்றங்களை புரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு ஆணைக்குழு கொண்டுவந்தபோதிலும் தவறிழைத்ததாக கூறப்படுபவருக்கு எதிராக எவ்வித அர்த்தமுள்ள நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதில் ஆணைக்குழு கவலை கொள்கிறது. கிழக்கு மாகாணத்தில் சுமார் 600 பொலிஸார் சகிதம் கடத்தப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர், அச்சம்பவத்தில் கருணாவினதும் ஏனைய எல்.ரி.ரி.ஈ. தலைவர்களாலும் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு குறித்து கூறினார்கள். ஆயுதங்களை கீழே வைத்து சரணடைய உத்தரவிடப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை குறித்து அவர்கள் தெரிவித்தனர். கருணா எனும் முரளிதரனிடம் ஆணைக்குழு இது தொடர்பாக கேள்வி எழுப்பியது. அவர் இக்கொலைகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை நிராகரித்தார். எனினும் மேற்படி 600 பொலிஸ் உத்தியோகஸ்தர்களின் கொலை குறித்து இதுவரை விசாரணை மேற்கொள்ளப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டுவதில் ஆணைக்குழு கவலைகொள்கிறது. இக்கொலைகளின் தன்மை மற்றும் நல்லிணக்கத்தில் அது கொண்டுள்ள தன்மை காரணமாக இவ்விடயம் முழுமையான விசாரணைக்குரியது என ஆணைக்குழு கருதுகிறது. ஈழமக்கள் ஜனநாயக் கட்சியின் (ஈ.பி.டி.பி) அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கப்பம் வசூலித்தல் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. ஈபிடிபிக்கு எதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில் இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு கருதுகிறது. விசாரணை இல்லாவிட்டால் தண்டனைப் பயமற்ற உணர்வை ஏற்படுத்தி விடும். மேஜர் சீலன் என்பவர் தொடர்பாக கடத்தல், கப்பம் வசூலித்தல், பாதுகாப்புப் படைகளின் சாதனங்களைப் பயன்படுத்தி கொள்ளைடித்தமை போன்ற பல குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் கவனத்துக் கொண்டுவரப்பட்டன. இதை தொடர்பாக அப்பகுதி பிரதிப் பொலிஸ் மா அதிபரின் கவனத்துக்கு ஆணைக்குழு கொண்டுவந்தபின் மேஜர் சீலனின் சகா ஒருவர் கைதானார். எனினும் குறித்த பிரதான குற்றவாளி இன்னும் கைது செய்யப்படாமல் உள்ளார். இவ்விடயதில் ஆணைக்குழுவானது சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் தொடர்பாக தெரிவித்த தனது இடைக்கால சிபாரிசுகளை முழுமையாக வினைத்திறனாக்குவது குறித்து ஆணைக்குழு மீள வலியுறுத்துகிறது."
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’