பாதுகாப்பிற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வில்லை. மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலை தூக்கி விட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரான் விக்கிரம ரட்ன குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பில்லை. நாட்டில் பொது மக்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறானதொரு மோசமான ஜனநாயக விரோத சூழலிலேயே நாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே ஹிரான் விக்கிரமரட்ண எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களால் செயற்பட முடியாது உள்ளது. கடந்த திங்கட் கிழமை வரவு செலவுத் திட்ட சமர்ப்பிப்பின்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் முன்னிலையிலேயே அவர்களது அமைச்சர்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர். இதனை உள் நாட்டு மக்கள் மாத்திரமல்ல அனைத்து உலகமுமே பார்த்தது. ஆளும் தரப்பு சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு ஏனையோரை அடக்கியாள்கின்றது. இலங்கையில் ஜனநாயகம் என்ற பெயருக்கே இடமில்லாமல் போயுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு கூடிய நிதியை ஒதுக்கியுள்ள போதிலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலை தூக்கிவிட்டது. பொது மக்களை மிக மோசமான முறையிலேயே அரசு ஏமாற்றி வருகின்றது. வரவு செலவுத் திட்டத்தில் நிவாரணம் என்ற போர்வையில் வெறும் கொள்ளையடிப்புகளே இடம் பெற்றுள்ளன என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’