தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது கட்சியை வளர்ப்பதற்காகவே வெளிநாட்டு பயணங்களில் ஈடுபட்டுள்ளது. இந்த பயணத்தின் மூலம் தமிழ் மக்களுக்கு எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லையென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கூறியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இன்று வியாழக்கிமை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். செட்டிபாளையம் மகா வித்தியாலய அதிபர் த.அருள்ராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பட்டிருப்பு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம், பிரதிக்கல்வி பணிப்பாளர்களான வே.மயில்வாகனம், எம்.குருகுலசிங்கம் உட்பட அதிதிகள் பலரும் கலந்துகொண்டனர். இங்கு மேலும் உரையாற்றிய முதலமைச்சர், "அமெரிக்கா, கனடா மற்றும் லண்டன் ஆகிய பகுதிகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர். இவர்கள் அங்கு சென்றதன் நோக்கம் இதுவரை தெரியவில்லை. அத்துடன் இந்த குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இணைத்துக்கொள்ளப்படவில்லை. இதனை நாங்கள் தெரிவித்தால் பிரதேசவாதம் பேசுவதாக கூறுகின்றனர். இந்த குழுவில் அவர்கள் நினைத்திருந்தால் செல்வராசா அண்ணனையாவது கூட்டிச்சென்றிருக்க முடியும். அவர்கள் அங்கு சென்று யாருடன் பேசுகின்றார்கள்? அந்த நாட்டின் உயர் மட்டத்தினருடன் பேசுவதாக கூறுகின்றனர். அங்கு அவர்கள் எந்த உயர் மட்டத்தினருடனும் பேசவில்லை. அப்படியானால் அவர்கள் அமெரிக்க வெளிவிவகார செயலாளர் ஹலாரி கிளின்டனை சந்தித்து பேசியிருக்கவேண்டும். ஆனால் அவரை தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்கவில்லை. இதேபோன்றுதான் கனடாவிலும் அங்கு எந்தவித உயர் அரசியல் தலைவர்களும் அவர்களை சந்திக்கவில்லை. அவர்கள் இங்குள்ள தமிழர்களை குழப்புவதற்காகவே வெள்ளமாளிகையின் முன்பாக இருந்து புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பி அதனை முன்பக்கம் பிரசுரிக்க செய்துள்ளன. யார் நினைத்தாலும் வெள்ளை மாளிக்கைக்கு முன்பாக இருந்து புகைப்படம் எடுக்கலாம். இது எல்லாம் இங்குள்ள மக்களை ஏமாற்ற எடுக்கும் முயற்சி. இதனை மக்கள் நம்பி குழம்பிவிடவேண்டாம். அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது அங்குள்ள தமது உறவினர்கள் நண்பர்களை காணவும்,தமது கட்சிக்கு நிதிவசூப்பு செய்வதற்கும் ஆகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும" என்றார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் குணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’