தென்கொரியாவில் நடைபெறும் உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளின் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டத்தில் ஜமைக்கா வீர் உசைன் போல்ட் தங்கப்பதக்கம் வென்றார்.
100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனையாளராக உசைன் போல்ட் விளங்குகிறார். எனினும் இம்முறை உலக மெய்வன்மை சம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 100 மீற்றர் இறுதிப்போட்டியில் உரிய நேரத்திற்கு முன்பே ஓட ஆரம்பித்தால் அவர் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.
எனினும் இன்று சனிக்கிழமை நடைபெற்ற 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் அவர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக்கொண்டார். இப்போட்டியில் உசைன் போல்ட் 19.40 விநாடிகளில் ஓடி முடித்தார். அமெரிக்காவின் வால்டர் டிக்ஸ் 19.70 விநாடிகளில் ஓடி வெள்ளிப்பதக்கத்தையும் பிரான்ஸின் கிறிஸ்டோப் லெமைட்றே 19.80 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கதையும் வென்றனர்.
இதற்குமுன் 2009 ஆம் ஆண்டு பேர்லினில் நடைபெற்ற உலக மெய்வன்மைச் சம்பியன்ஷிப் போட்டிகளிலும் 100 மீற்றர் 200 மீற்றர் ஓட்டத்தில் உசைன்போல்ட் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். 1987 ஆம் ஆண்டு கல்வின் ஸ்மித் இரண்டாவது தடவையாகவும் 200 மீற்ற்ர் ஓட்டத்தில் சம்பியனாகியதன் பின்னர், தொடர்ச்சியாக இரு தடவை 200 மீற்றர் உலக சம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் வீரர் உசைன் போல்ட் ஆவார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’