இ ந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குங்கள் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினால் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனால் எழுதி அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 20 வருடங்களாக சிறைவாசம் அனுபவிக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமையை அறிந்து மிகவும் கவலையும் வேதனையும் அதிர்ச்சியும் ஈழத்தமிழர்களும் உலகத்தமிழர்களும் அடைந்துள்ளோம். சொல்லொணா துன்பங்களும் சோதனைகளும் வதைகளையும் சந்தித்த ஈழத்தமிழர் நாம் கடந்த 61 வருடங்களாக அடிமையாகவே வாழ்கின்றோம். இலட்சக்கணக்கான உயிர்களை இழந்து உடமைகளை பறிகொடுத்து அல்லும் பகலும் எப்போதும் நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என்று ஏங்கி தவிக்கின்றோம். இந்த ஏக்கத்துக்கு விடிவு கிடைக்க எமது தொப்புள் கொடி உறவாக இருக்கும் பாரத நாடு எமக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கை ஈழத்தமிழர்கள் மனங்களில் இருந்து இன்னும் அகலவில்லை. இந்நிலையில் தற்போது எமது உடன் பிறப்புக்களான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் மரண தண்டனை செய்தி எம்மை மிகவும் சோகத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்த உயர் தண்டனையான மரண தண்டனையை மன்னிப்பு வழங்கி இந்த மூவரையும் மரண தண்டணையில் இருந்து விடுதலை பெற பாரத பிரதமராகிய உங்களாலே முடியும். இன்று உலகத் தமிழினமே உங்களிடம் மண்டியிட்டு இந்த மூவருக்கும் மன்னிப்பு வழங்குமாறு பணிவாக வேண்டுகின்றனர். கருணை உள்ளம் கொண்டு மனம் இரங்கி இந்த வேண்டுதலை நிச்சயம் ஏற்றுகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் ஈழத்தமிழர் சார்பாக இரந்து கைகூப்பி கெஞ்சிக் கேட்கின்றேன்' என மேற்படி கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’