அங்கவீனமான படைவீரர் ஒருவர் தொடுத்த வழக்கில் இராணுவத் தளபதிக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்றும் அறிவித்தல் விடுத்துள்ளது.
தவறுதலாக தனக்கு மேலதிகமாக வழங்கப்பட்ட கொடுப்பனவை மீளப் பெறும் நோக்குடன் தனது ஓய்வுதியக்கொடுப்பனவை இடைநிறுத்தியமைக்கு எதிராக நிட்டம்புவையைச் சேர்ந்த அசோக தயாரட்ன எனும் இப்படைவீரர் வழக்குத் தொடுத்துள்ளார்.
இராணுவத் தளபதி லெப். ஜெனரல் ஜகத் ஜயசூரிய, சம்பள மற்றும் ஆவணப்படுத்தல் பணிப்பாளர் பிரிகேடியர் டபிள்யூ,ஆர். பலிகஹார, அத்தனகல்ல பிரதேச செயலாளர், சட்டமா அதிபர் ஆகியோர் இவ்வழக்கில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
1972 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த மனுதாரர், வில்பத்துவில் நடைபெற்ற நடவடிக்கையொன்றின்போது காயமடைந்ததாகவும் அவரின் வலது கை துண்டிக்கப்பட்டதாகவும் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஜி.டி. குலதிலக்க கூறினார்.
அப்படை வீரர் 1987 ஆம் ஆண்டு அங்கவீனமானவராக கருதப்பட்டு அவருக்கு அங்கவீனமான படைவீரருக்குரிய கொடுப்பனவு வழங்கப்பட்டு வந்தது. 03.01.2009 ஆம் திகதி அவர் 55 வயதை அடைந்தபின்னரும் இந்த ஓய்வூதியத்தை பெற்றுவந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம், அப்படை வீரருக்கு மேலதிகமாக 539,932 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அப்பணம் மீளப்பெறப்பட வேண்டியுள்ளதாகவும் இராணுவத்தினால் அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்பணத்தை மீளப்பெறுவதற்காக அவருக்கான ஓய்வூதியத்தை இடைநிறுத்தும்படி பிரதேச செயலாளருக்கு பிரிகேடியர் பலிகஹார அறிவித்திருந்தார்.
இதற்கு எதிராக அங்கவீனமான மேற்படி படைவீரர் வழக்குத் தொடுத்துள்ளார்.
அங்கவீனமான படைவீரர்களுக்குரிய ஓய்வூதியம் அப்படைவீரர் இறக்கும்வரை வழங்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய வாக்குறுதி குறித்த பத்திரிகை செய்தியொன்றையும் மனுதாரரின் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’