வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 20 ஜூன், 2011

கனிமொழியை ஜாமீனில் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு

தி முக ராஜ்யசபா எம்.பியும், திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனுவை இன்று உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது. இதனால் கனிமொழியால் சிறையிலிருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி மற்றும் பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த மனுவை விசாரித்ததால் பரபரப்பும், பதைபதைப்பும் திமுக வட்டாரத்தில் நிலவியது.
ஆரம்பத்தில் கனிமொழியின் ஜாமீன் மனுவை நீதிபதிகள் சதாசிவம், பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென நீதிபதிகள் இருவரும் விலகிக் கொள்ளவே, சிங்வி தலைமையிலான பெஞ்சுக்கு வழக்கு மாற்றப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.
கனிமொழியின் ஜாமீன் மனு தொடர்பாக சிபிஐ தரப்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் குற்றவாளிகள். செல்வாக்கு உடையவர்கள். சினியுக் நிறுவனத்திடமிருந்து கலைஞர் டிவி வாங்கிய ரூ. 214 கோடி கடன் அல்ல, லஞ்சப் பணமே. இந்த நிலையில் இவர்களை விடுவித்தால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், ஆதாரங்களை அழித்து விடுவார்கள் என்று ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இன்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், கலைஞர் டிவி நிர்வாகத்திற்கும் கனிமொழிக்கும் தொடர்பே இல்லை. கலைஞர் டிவியின் அன்றாட செயல்பாடுகளில் அவர் எந்த வகையிலும் தொடர்பு கொண்டிருக்கவில்லை. எனவே அவரை இந்த வழக்கில் சேர்த்தது தவறு.

மேலும் கனிமொழி அவரது சிறு வயது மகனை விட்டுப் பிரித்து வைத்திருப்பது நியாயமில்லை. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதத்திற்குப் பின்னர் நீதிபதிகள் தங்களது உத்தரவைப் பிறப்பித்தனர். அதில் கனிமொழி மற்றும்ச ரத்குமார் ரெட்டி ஆகியோரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர்கள் இருவரும் அந்த நீதிமன்றத்தையே ஜாமீன் கோரி அணுகலாம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

2ஜி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவது ஜூலை 2வது வாரத்தில் இருந்து தொடங்கும் என்று தெரிகிறது. அதில் கனிமொழி மீது ஆகஸ்டு முதல் வாரத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படலாம். எனவே கனிமொழி இன்னும் 45 நாட்களுக்கு மேல் சிறையில் இருக்க வேண்டியிருக்கும் என்று தெரிகிறது.

இதனால் கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் இப்போதைக்கு சிறையிலிருந்து வெளி வரும் வாய்ப்பு மங்கிப் போய் விட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை ஆரம்பத்திலிருந்தே விசாரித்து வருபவர் நீதிபதி சிங்வி. மேலும் 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் சிபிஐ விசாரணையையும் அவர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். எனவே கனிமொழி மீதான வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கனிமொழியும், கலைஞர் டிவி நிர்வாக இயக்குநரான சரத் குமார் ரெட்டியும் கூட்டுச் சதியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’