வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 18 ஜூன், 2011

கிழக்கு மாகாண முதலமைச்சரின் கருத்துக்கு விமலவீர அதிருப்தி

கி ழக்கு மாகாண ஆசிரியர் இடம்மாற்றங்களை எதிர்வரும் டிசெம்பர் மாதத்தின் பின்னரே மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை தீர்மானமொன்றை எடுத்துள்ளபோதும், இந்த இடமாற்றங்களை தற்போது அமுல்படுத்த வேண்டுமென முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஏன் கூறியுள்ளார் என்று தமக்குப் புரியவில்லை என கிழக்கு மாகாணக் கல்வியமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

சாய்ந்தமருது 'சீ பிரீஸ்' ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார்.
கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தைக் கண்டித்து அம்பாறை மாவட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுவரும் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிடும் பொருட்டு, இன்றைய தினம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட குழுவினர் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தினை அடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே கல்வியமைச்சர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்தாவது,
'வருட நடுப்பகுதியில் இவ்வாறானதொரு இடமாற்றம் இடம்பெறுவதால் ஐந்தாமாண்டு புலமைப் பரிசில், க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றும் மாணவர்களின் கல்வியில் மோசமான தாக்கங்கள் ஏற்படும். ஆகவே, இந்த இடமாற்றத்தினை எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குப் பின்னர் மேற்கொண்டால் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது.

எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் உறுப்பினர் புஷ்பராஜா கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றங்களை டிசெம்பர் மாதம் மேற்கொள்ள வேண்டுமெனக் கோரும் பிரேரணையொன்றினைக் கொண்டுவரவுள்ளார். அந்தப் பிரேரணையில் இடமாற்றங்களை உரிய முறையிலும், ஒரு குழுவொன்றினை அமைத்து ஆராய்ந்தும் வழங்க வேண்டுமெனக் கோரப்படும்.

குறிப்பிட்ட பிரேரணை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் - அதை ஆளுநருக்கு நாம் வழங்குவோம். சிலவேளை ஆளுநர் அதை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக இருந்தால், நிச்சயமாக நாம் சபைப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோம்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒரு கடற்படை அதிகாரி. அவருக்கு பொதுமக்களின் விருப்பு வெறுப்புகள் பற்றித் தெரியாது. ஏனைய மாகாணங்களிலும் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.

ஆனால், கிழக்கில் மட்டும் ஏன் இந்த இடமாற்றங்களை மேற்கொள்வதற்கு ஆளுநர் அவசரப்படுகின்றார்? கிழக்கு மாகாண ஆளுநர் வேண்டுமென்றே இந்த மாகாணத்தின் கல்வியினைச் சீரழிக்க முயல்கின்றார். இந்த இடமாற்றத்தை பிள்ளைகள், ஆசிரியர், பெற்றோர் என யாரும் விரும்பவில்லை. அப்படியென்றால் இந்த இடமாற்றம் யாருக்காக?' என்றார்.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் - கிழக்கு மாகாண கல்வியமைச்சின் கீழ் கடமையாற்றுவோராக இருந்தும், இந்த இடமாற்றம் தொடர்பில் அமைச்சரின் தீர்மானங்களை அல்லது விருப்பங்களை மீறி ஏன் செயற்படுகின்றனர் என இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியொன்றினை எழுப்பினார். இதற்கு அமைச்சர் பதிலளிக்கையில், 'தனக்கும் இதற்கான விடை தெரியவில்லை' என்று குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’