பெரும் பொருட் செலவில் சன் பிக்சர்ஸ் சார்பில் உருவாக்கப்படவுள்ளதாக கூறப்படும் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசைஞானி இளையராஜாவை இசையமைக்க வைக்க மணிரத்தினம் தீர்மானித்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது
.பொன்னியின் செல்வன் படம் உருவாகப் போவதும், அதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதும், மணிரத்தினம் இயக்கப் போவதுமே இன்னும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் தற்போது இசைஞானியின் பெயரும் இதில் அடிபடுவது குறிப்பிடத்தக்கது.
திரையுலகின் பிதாமகர்கள் எல்லாம் பரீட்சித்துப் பார்த்த விஷயம்தான் இந்த பொன்னியின் செல்வன். கல்கியின் சாகாவரம் பெற்ற காவியம் இது. இப்படத்தை தற்போது மணிரத்தினம் இயக்கப் போவதாகவும், அதற்கு சன் பி்க்சர்ஸ் துணை நிற்கப் போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இது எதுவுமே உறுதியாகவில்லை.
இந்த நிலையில் இப்படத்திற்கு இசையமைக்க இளையராஜாவைத் தவிர வேறு யாராலும் முடியாது என்ற முடிவுக்கு வந்துள்ளார் மணிரத்தினம் என்கிறார்கள். இதுதொடர்பாக விரைவில் இளையராஜாவை மணிரத்தினம் அணுகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இளையராஜாவும், மணிரத்தினமும் இணைந்த கடைசிப் படம் தளபதி. உலகின் தலை சிறந்த 10 பாடல்களில், நான்காவதாக தளபதி படத்தில் இடம் பெற்ற ராக்கம்மா கையைத் தட்டு பாடல் பிபிசி கருத்துக் கணிப்பில் தேர்வானது நினைவிருக்கலாம்.
பெரும் மனஸ்தாபம் காரணமாகவே இளையராஜாவும், மணிரத்தினமும் பிரிந்ததாக அப்போது கூறப்பட்டது. அதை விட முக்கியமாக இளையராஜாவிடமிருந்து பிரிந்த மணிரத்தினம் அறிமுகப்படுத்தியவர்தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே மணிரத்தினத்துடன் மீண்டும் இளையராஜா இணைவாரா என்பது முதலில் பெரிய கேள்விக்குறியாகும்.
இதுவரை தன்னிடமிருந்து பிரிந்த யாருடனும் மீண்டும் இணைந்ததில்லை ராஜா. அவருடைய மிக மிக நெருங்கிய நண்பரான பாரதிராஜாவுடன் கூட அவர் இணைந்ததில்லை -இடையில் ஒரு முறை இணைந்ததைத் தவிர.
இந்த நிலையில் மணிரத்தினம், இளையராஜாவை அணுகவுள்ளதாக கூறப்படும் செய்தியை எந்த அளவுக்கு நம்புவது என்று தெரியவில்லை. ஒரு வேளை இணைந்தால், அது மணி ரத்தினத்தை விட பொன்னியின் செல்வன் என்ற மாபெரும் காவியத்திற்கு கெளரவம் சேர்ப்பதாக அமையும்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’