வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 10 ஜனவரி, 2011

சீமானை சந்தித்தார் வைகோ-அதிமுக ஆதரவாக பிரசாரம் செய்ய சீமான் முடிவு

திமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது தேர்தல் வெற்றிக்கான காய்களை படு வேகமாக நகர்த்தத் தொடங்கியுள்ளார். அதில் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை தன் பக்கம் இழுத்துள்ளார் -வைகோவின் மூலமாக
.ஈழத்தில் போர் முடிவடைந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்தவர் சீமான். முதலில் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி ஈழத் தமிழர் ஆதரவு பிரசாரத்தை வேகமாக முன்னெடுத்தார். அவரது அனல் வேகப் பேச்சால் பலரையும் ஈர்த்தார். இதன் விளைவாக 2 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையும் சென்றார். சமீபத்தில் அவர் விடுதலையானார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை தன் பக்கம் இழுத்துள்ளது அதிமுக. சீமானை அதிமுக கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளை வைகோவிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா.
இதன் விளைவாக இன்று மதிமுக தலைமைக் கழக அலுவலகம் சென்று வைகோவை சந்தித்துப் பேசினார் சீமான்.
ஒன்றரை மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,
நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம்.
வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ. தொகுதியில் போட்டியிட வேண்டும்.
கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொன்னீர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்,
இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரசுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி என்றார் அவர்.
முதல்வர் கருணாநிதியை எதிர்த்துப் போட்டியிட்டு உங்களால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்க வில்லையா? அதே போல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம் என்றார் சீமான்.

வலுவான வஜ்ராயுதமாக சீமான் இருப்பார்-வைகோ

வைகோ பேசுகையில்,

தமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது.
சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் நானும், நெடுமாறனும் சீமானை சந்தித்தோம். அப்போது எந்த தவறும் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு கொலைக்காக 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் தம்பிகளையும் பார்த்தேன். சீமானை கைது செய்தது சட்டவிரோதம் என்று கோர்ட்டு விடுவித்துள்ளது.
விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததற்கு 1200 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற சட்டசபை தேர்தல் தமிழர்களின் தன்மானத்திற்கு விடும் அறை கூவல். தமிழ்நாட்டில்
பள்ளி குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமாக தொழில் செய்ய பாதுகாப்பு இல்லை. வரப்போகும் தேர்தலில் விலைவாசி உயர்வு, மணல் திருட்டு, வாழ்வாதார சீரழிவு பற்றி தெருத் தெருவாக பிரசாரம் செய்வோம்.
தேர்தல் களத்தை சந்திக்க சீமான் தயார். வலுவான வஜ்ராயுதமாக சீமான் இருப்பார். கலையுலகில் இருக்கும் தமிழ் இன உணவாளர்களும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்றார் வைகோ.

அதிமுக கூட்டணியில் காங். இல்லை!

சீமானின் பேட்டியின் மூலம் இன்னொரு விஷயமும் தெளிவாகியுள்ளது. அது - அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் சேரவில்லை என்பது.
தற்போதைய சூழ்நிலையில் திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் ஆகியவை ஒரு கூட்டணியாகவும், அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் ஆகியவை ஒரு கூட்டணியாகவும் போட்டியிடும் என்று தெரிகிறது. பாமக, திமுக பக்கம் போகலாம். அதேசமயம், தேமுதிகவின் நிலை தெளிவாகத் தெரியவில்லை. பாஜக, குட்டிக் கட்சிகளை சேர்த்துக் கொண்டு வழக்கம் போல தேறாத ஒரு கூட்டணியை அமைக்கக் கூடும் என்று தெரிகிறது.

கருணாநிதிக்கு எதிராக அதிமுக ஆதரவுடன் சீமான் போட்டி?

அதிமுக கூட்டணி சார்பில் முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவருக்கு எதிராக சீமான் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலில் ஒரு வாக்கைக் கூட வீணடிக்காமல் அள்ளி விட படு தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார்.
கிறிஸ்தவர்களை ஐஸ் வைக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டார்.
நேற்று நாடார் சமுதாயத்தினரைக் கவரும் வகையில், அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்குச் சென்று பேசினார்.
இப்போது ஈழத் தமிழ் ஆதரவாளர்களின் வாக்குகளை அள்ள அவர் சீமானை வளைத்துள்ளதாக தெரிகிறது.
ஈழத்தில் போர் உக்கிரமடைந்த போது கடைசிக்கட்டத்தில்தான் ஈழத் தமிழர்களுக்காக குரல்கொடுத்தார் ஜெயலலிதா. அதேசமயம், லோக்சபா தேர்தல் முடிந்த அடுத்த நிமிடமே ஈழத்தைப் பற்றிப் பேசுவது கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் அவருக்காக சீமான் ஆதரவு கோரி பிரசாரம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’