தேங்காய்க்கும் வரி விதித்து மக்கள் மீதான சுமையை எதிர்வரும் காலங்களில் அரசாங்கம் மேலும் அதிகரிக்கப் போகின்றது என்று ஐ.தே. க. எம்.பி ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் சம்பளம் அதிகரிக்கப்படாமையை எதிர்த்து எதிர்வரும் 22 ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு கொழும்பு மருதானையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜோசப் மைக்கல் பெரேரா எம்.பி இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
"அரசாங்க ஊழியர்கள் இன்று மூன்று மணித்தியாலங்களும் 20 வினாடிகள் மட்டுமே சேவையாற்றுகின்றார்கள் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த நிலைமை ஏற்படக் காரணம் என்ன?
உறுதியளிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரித்து அவர்கள் வாழ நெருக்கடிகளை சந்திக்கின்றனர். எனவே அவர்களது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்காக சேவைகளை வழங்குவதில் பின்னிற்கின்றனர்.
இவ்வாறான நிலைமை ஏற்படுமென பலமுறை நாங்கள் தெரிவித்தோம். அத்தோடு நஷ்டம் பெறும் அரச கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு ரூபா 1000 போனஸும் லாபம் பெறும் கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு ரூபா 10000 போனஸும் வழங்கப்படுமென அரசாங்கம் அறிவித்துள்ளது. இது நியாயமற்ற அநீதியான செயலாகும்.
அரச கூட்டுத்தாபனங்கள் நஷ்டமடைவதற்கு அரசாங்கமே காரணமாகும். திறமையற்ற அரசியல் கையாட்களை உயர் பதவிகளில் நியமித்தமையே நஷ்டத்திற்கு காரணமாகும். அரசாங்கத்தின் பிழையை அரசாங்க ஊழியர்கள் மீது சுமத்தக் கூடாது. எனவே லாபமோ, நஷ்டமோ அனைத்து கூட்டுத்தாபன ஊழியர்களுக்கும் குறைந்தது ரூபா 10000 போனஸ் வழங்கப்பட வேண்டும்.
அரசாங்கம் இன்று ஆட்டம் கண்டுள்ளது. கடந்த பொதுத் தேர்தலில் 11 இலட்சம் வாக்குகள் குறைந்துள்ளன. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு மக்களுக்கு வாழ முடியாத சூழ்நிலையால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளனர்" என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’