வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 27 டிசம்பர், 2010

ஐ.நா. நிபுணர் குழுவின் தலைமை அதிகாரி அடுத்த வாரம் இலங்கை வருகிறார்

லங்கையின் போர்க்குற்றம் தொடர்பிலான ஐ.நா. சபையின் நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் இன்னும் முடிவாகவில்லை. எனினும், குறித்த நிபுணர் குழுவின் தலைமையதிகாரியான ரிச்சட் பென்னட் அடுத்த வாரத்தில் இலங்கை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று "சண்டே டைம்ஸ்'செய்தித் தாள் தெரிவித்துள்ளது.
போர்க் குற்றம் தொடர்பில் இலங்கைக்கு தொடர்ந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்தே பான் கீ மூன், இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் தமக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு ஒன்றை நியமித்தார்.
இந்தக் குழு கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தமது பணிகளை ஆரம்பித்து இந்த மாத இறுதிக்குள் தமது விசாரணைகளை முடித்துக் கொள்ளவுள்ளது. இந்த நிலையிலேயே குழு இலங்கைக்கு வருவதற்கான முனைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிபுணர் குழுவின் இலங்கை விஜயத்துக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கீகாரம் வழங்கியுள்ளார். எனினும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் நிலைப்பாட்டுக்கு மாறுபட்ட கருத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அந்தக் குழுவுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய அவசியம் இல்லை என ஜி.எல். பீரிஸ் கூறி வருகிறார். அத்துடன் இலங்கைக்குள்ளும் அரசியல் ரீதியில் அரசாங்கத்தின் சார்புக் குழுக்கள், ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கைக்கு வருவதற்கு தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இதனையடுத்து தமது குழு இலங்கைக்கு செல்வது தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமையன்று தகவல் தர முடியும் என பான் கீ மூனின் பேச்சாளர் பர்ஹான் ஹக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஐ.நா.வின் நிபுணர் குழு இலங்கை வந்தால் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை மாத்திரமே சந்திக்கலாம் என அறிவிப்பை இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் நியூயோர்க் பிரதிநிதி பாலித கோஹன ஊடாக பான் கீ மூனுக்கு தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே ஐ.நா.வின் நிபுணர் குழுவின் தலைமையதிகாரி தற்போதைய பிரச்சினையை தீர்ப்பதற்காக அல்லது நிபுணர் குழுவின் விஜயத்தை ஒழுங்கு செய்வதற்காக எதிர்வரும் வாரத்தில் இலங்கைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்கு வந்தால் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவை மாத்திரம் சந்திக்காது ஏனையவர்களையும் சந்திக்கும் என்ற நிலைப்பாடு வலுப் பெற்று வருகிறது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகமும் இந்த நிலைப்பாட்டையே வலியுறுத்தியிருந்தது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’