நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி நிலையானது நீடித்திருக்கும் என்பதில் எவருக்குமே நம்பிக்கையில்லை என நல்லிணக்கத்திற்கான வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றியம் தெரிவித்தது.
இன்று மாலை கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வில் சாட்சியமளித்த ஒன்றிய உறுப்பினர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.
வடக்கு கிழக்கு சர்வமத ஒன்றிய உறுப்பினர்களிலிருந்து இந்து சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி மனோகர குருக்களும் ஈ.கே. மகேந்திரனும் இஸ்லாம் சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மௌலவி யூ.எல்.எம்.மக்கியும் அஷ்ஷெய்க் ஐயூப் அஷ்மியும் பௌத்த சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வண. ரண்முத்துகல சங்கரத்ன தேரரும் வண. விமல தேரரும் கிறிஸ்தவ சமயத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வண. ரெஜினோல்ட் பிரான்சிஸும் வண.தேவகுமாரும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தனர்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த சர்வமத ஒன்றிய உறுப்பினர்கள்,
"பல வருடங்கள் நீடித்த நிச்சயமற்ற தன்மை சுதந்திர நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு கடந்த 18 மாதங்களாக அமைதியான சூழல் நிலவி வருகின்றது. இதற்காகவேண்டி நாங்கள் அனைரும் நன்றியுடையவர்களாக இருக்கிறோம்.
எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்காலிக அமைதி நிலையானது நீடித்திருக்கும் என்பதில் எவருக்குமே நம்பிக்கையில்லை.
உண்மை, நீதி, கருணை, சமாதானம் போன்றவை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கிய கூறுகள் என நம்பப்படுகின்றது.
அரசியல் சாசன மாற்றம் மூலமாகவே அல்லது அரசியல் தீர்வு மூலமாகவே மாத்திரம் கருணையிலிருந்து மன்னிப்பு என்ற நிலைக்கு மாற்றம் பெற்று செழிப்புறுவதற்கு சாத்தியமில்லை.
இலங்கையில் உள்ள பல்வேறு சமூகங்களிடையில் நல்லிணக்க சூழலை உருவாக்குவதே எமது ஒன்றியத்தின் நிலைப்பாடாகும்" என்றனர்.
இச்சாட்சியமளிப்பில் வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் தமிழில் சாட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’