பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் ஜனாதிபதியை அங்கு அழைத்துச் சென்ற காரண கர்த்தாவை கண்டறிய வேண்டும் என்று ஐ.தே.க. எம்.பி. யான தயாசிறி ஜயசேகர அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதிக்கு பிரிட்டனில் ஏற்பட்ட அவமானத்தை ஐ. தே.க . மீதும் ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. மீதும் சுமத்தாமல் அமைச்சரவையில் கலந்துரையாட வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
பாராளுமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வரலாற்றை புரட்டி சபையின் நடுவே போட்டு நாற்றமெடுக்க விடாது வரலாற்றில் கற்றுக் கொண்ட பாடத்தை அடிப்படையாகக் கொண்டு நல்ல தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
முன்னாள் ஜனாதிபதி கொலைகாரனுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார். அது தவறு என்றாலும் ஜனாதிபதியினால் பலருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும். பேச்சு சுதந்திரம் அன்று இல்லை. தணிக்கை அதிகாரி இருந்தும் அது தவறானது. ஆனால் பாற்சோற்றை கொடுத்து இன்று மாற்றுகின்றனர்.
சரத் பொன்சேகாவை அழைத்து சென்ற அதிகாரிகளில் இருவர் விசாரணைகள் இன்றியே கடமையிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். இவை தொடர்பில் புதிய அமைச்சர் தேடியறிய வேண்டும்.
ஜனாதிபதி எங்கள் ஜனாதிபதி அவருக்கு எதிரான செயற்பாட்டிற்கு எதிராக குரல் கொடுக்க நாமும் தயார். எனினும் கட்டணத்தை அதிகரித்து தருமாறு கோரி பிரித்தானியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கும் இக் காலத்தில் ஜனாதிபதியை அங்கு அழைத்து சென்றமைக்கான காரண கர்த்தா யார்? என்று கண்டறிய வேண்டும்.
அமைச்சரவையிலும் கலந்துரையாட வேண்டும். அவமானத்தை மறைப்பதற்கு அதன் குற்றத்தை ஐ.தே.க. வின் மீதோ, ஜயலத் எம்.பி.யின் மீதோ திணிக்க வேண்டியதில்லை.
பிரதியமைச்சர் அப்துல் காதர் மீதான வழக்கில் மூலப் பிரதியை காணவில்லை எனக் கூறி அந்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் வாபஸ் பெற்றுக் கொண்டது. அமைச்சர் ஹக்கீமுக்கு கண்டியில் ஐ.தே.க. இடம் கொடுத்தமையினால் காதர் எம்.பி. கட்சியுடன் கோபித்துக் கொண்டார். இன்று இவர்கள் இருவரும் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அடங்கலாக மூவரும் கண்டியிலேயே இருக்கின்றனர். _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’