ஆண்பாவம்... முப்பதுகளைத் தாண்டிய தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை, நினைத்த மாத்திரத்தில் பரவசப்படுத்தும் எளிய... ஆனால் மகா இனிமையான படம்.
பாண்டியராஜன் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கிய இரண்டாவது படம். வெறும் ரூ 16 லட்சத்தில் உருவாகி, கோடிகளில் வசூலைக் குவித்த நிஜமான பிளாக்பஸ்டர்.
விகே ராமசாமி எனும் அசாதாரண திறமையாளருடன் அன்றைய புதுமுகங்கள் பாண்டியராஜன், சீதா மற்றும் பாண்டியன் - ரேவதி இணைந்து ஒரு அசலான கிராமத்துக் காதல் கவிதையைப் படைத்திருந்தனர். இந்தப் படத்துக்கு உருவம் கொடுத்தவர் பாண்டியராஜன் என்றால், அதற்கு உயிராய் இசை வார்த்தவர் இசைஞானி இளையராஜா.
அந்தப் பின்னணி இசையைக் கேட்டாலே... படத்தை காட்சிவாரியாக சொல்லிவிடலாம். அத்தனை அற்புதமான பாடல்கள் மற்றும் பின்னணி இசை. இத்தனை பெருமைக்கும் உரிய ஆண்பாவம் வெளியாகி 25 ஆண்டுகள் ஓடிவிட்டன. இதனைக் கொண்டாடும் விதத்தில் சமீபத்தில் ஒரு விழா எடுத்தார் பாண்டியராஜன்.
அவரது குரு பாக்யராஜும், சக இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி, சேரன் போன்றோரும் விழாவுக்கு வந்து பாண்டியராஜனின் ஆண்பாவ நாட்களை நினைவு கூர்ந்தனர்.
பாண்டியராஜன் பேசும்போது, "இந்தப் படத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நேரில் போய் பத்திரிகை தர ஆசைப்பட்டுப் போனேன். இந்தப் படத்தில் நடித்த சிலர் இன்று உயிருடன் இல்லை. படத்தின் இன்னொரு ஹீரோ பாண்டியன், முக்கிய வேடத்தில் நடித்த விகேஆர், கொல்லக்குடி கருப்பாயி... ஆனா ஒருமாசம் அலைஞ்சி மத்தவங்களெல்லாம் எங்கிருக்காங்கன்னு கண்டுபிடிச்சி பத்திரிகை கொடுத்தேன். வரவழைச்சி கவுரவப்படுத்தியதில் மனசுக்கு நி்றைவா இருக்கு.
இசைஞானி இளையராஜாதான் இந்தப் படத்தோட ஜீவன். இந்த விழாவுக்கான பத்திரிகையை அவருடைய காலடியில் வைத்தபோது என்னையுமறியாமல் அழுதேன். என் தோளில் தட்டிக் கொடுத்த இசைஞானி, 'யார் உதவியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து சாதிச்சவன்யா நீ' என்று அந்த நாள் நினைவுகளை பகிர்ந்துகொண்டார். ராஜா சாரோட அம்மா அவரை சென்னைக்கு அனுப்பிய அந்த நாளையும் அப்போ என்கிட்டே சொன்னார். 'வீட்டில் இருந்த ரேடியோவை 400 ரூபாய்க்கு வித்துதான் எங்கம்மா என்னை அனுப்பினாங்க. அதில ஒரு ஐம்பது ரூபாயை என்னிடம் கொடுத்திட்டு போன்னு கூட கேட்கலை.. அந்த மாதிரி ஆத்மாக்களோட ஆசீர்வாதம்தான் இதெல்லாம்' என்று அவர் சொன்னபோது என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதுட்டேன்.... அவரோட அந்த ஈர மனசுதான் இந்தமாதிரி இசைக்கு அடித்தளம்.
"ஆண்பாவம் ரிலீஸ் ஆனப்ப நல்ல மழை. இந்த விழாவில் நடந்த மாதிரியேதான் அன்னைக்கும். அரங்கத்தில் கூட்டமே இல்லை. நேரம் செல்ல செல்ல அரங்கத்தை விட்டு வெளியே நிற்கிற அளவுக்கு கூட்டம் . ஆண்பாவமும் அப்படிதான். முதல் ஷோவுக்கு ஆளே இல்லை. போக போக டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்கிற அளவுக்கு போனது... வெள்ளிவிழா கொண்டாடுச்சி" என்றார் பாண்டியராஜன்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’