இலங்கை விவகாரம் தொடர்பிலõன ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவை அழைத்து வருவதில் அரசாங்கத்துக்குள் குழப்பநிலை ஏற்பட்டிருப்பதாக ஐ.தே.கட்சி தெரிவித்துள்ளது.
நிபுணர்கள் குழுவின் இலங்கை வருகைக்கு சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்வதாக அறிவித்த வெளிவிவகார அமைச்சு தற்போது அந்த குழுவின் நோக்கத்தை வெளிநாடொன்றில் நிறைவேற்றவிருப்பதாக தனது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருப்பதாகவும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
கொழும்பு கேம்பிரிஜ் டெரஸில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐ.தே.கவின் மேல்மாகாண சபை உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவரின் சந்திப்பின்போதே லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்,
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான நிபுணர்கள் குழு இலங்கை வரவிருப்பதான அறிவிப்பினையும் அதற்கான அரசாங்கத்தின் ஏற்பாடுகள் குறித்தும் எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அந்தக் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதாக வெளிவிவகார அமைச்சே முன்னர் அறிவித்திருந்தது. ஆனாலும் இன்று (நேற்று) அதன் இணையத்தளத்தில் மேற்படி குழுவானது இலங்கை வராத அதேவேளை பிரிதொரு நாட்டுக்கு அழைக்கப்பட்டு அங்கு இலங்கை தொடர்பான அதன் எதிர்பார்ப்புகள் குறித்து பேச்சு நடத்தவிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தற்போது நிபுணர் குழுவை இலங்கைக்கு அழைத்து வருவதா இல்லையா என்றும் பிறிதொரு நாட்டுக்கு அழைத்து வந்து பேச்சு நடத்துவதா என்பது தொடர்பிலும் தீர்மானங்களை எடுக்க முடியாத அளவில் அரசாங்கம் குழம்பிப் போய் நிற்கின்றது.
அரசாங்கத்தின் கூட்டுக் கட்சியினருக்கும் எதிர்த்தரப்பினருக்கும் பதில் கொடுக்க முடியாத நிலையில் அரசு இன்று தெளிவற்று காணப்படுவதை அறிய முடிகின்றது. போர்க்குற்ற விவகாரம் தொடர்பில் இந்நாட்டின் கௌரவத்தையும் இறைமையையும் பாதுகாப்பதற்கான ஒரே நபர்தான் யுத்த வீரனான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆவார். எனவே அவரை அந்த குழுவின் முன்னிலையில் ஆஜர்படுத்த வேண்டும் என்றே நாம் கேட்கிறோம் என்றார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’