வட மாகாணத்திலிருந்து கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மீண்டும் அங்கு செல்லும் போது ஏன் வந்தீர்கள் என சில கேட்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி பர்சானா ஹனீபா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இன்றைய அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சட்டமும் சமூகமும் என்ற அமைப்பினால் வட மாகாணத்திலிருந்து புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் நியமிக்கப்பட்ட மக்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட இணைப்பாளர் என்ற வகையில் கலாநிதி பர்சானா ஹனீபா ஆணைக்குழுவின் அறிக்கையை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் சமர்ப்பித்து சாட்சியமளித்தார்.
அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,
இந்த ஆணைக்குழுவின் முன்னால் வந்து தமிழ் சமூக தலைவர்களும் அரச அதிகாரிகளும் வட மாகாண முஸ்லிம்களை மீளக்குடியேற்ற வேண்டும் என கூறுகின்றார்கள்.
எனினும் கடந்த 20 வருடங்களாக தமிழர்கள் மாத்திரம் வட பகுதியில் வாழ்ந்ததனால், அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள் என்று தெரியாதவர்கள் அங்கு மீளக்குடியமர செல்லும் முஸ்லிம்கள் அனுதாபம் காட்டவில்லை என அவர்கள் உணர்கின்றனர்.
வட பகுதியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் தற்போது புத்தளத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இன்று வரை பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இம்மக்களின் மூலம் புத்தளத்தில் வாழும் முஸ்லிம்களும் நிறைய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது.
1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் இன்று யாரும் பேசுவதாகவும் இல்லை. அவர்களுக்கு உதவி செய்வதாகவுமில்லை.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது 90% மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் இதில் வடமாகாண முஸ்லிம்கள் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பலர் தாங்கள் மீண்டும் குடியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கின்றார்கள். இவர்களின் மீள்குடியேற்றத்திற்கு இந்த ஆணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும்.
அத்துடன் அவர்களின் வாழ்வாதரத்தை கட்டியெழுப்பவும், வீடுகள் கட்டிக்கொடுக்கவும் இவ்வணைக்குழு சிபாரிசு செய்ய வேண்டும் என கலாநிதி பர்சானா ஹனீபா கேட்டுக்கொண்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’