(சிரேஷ்ட ஊடகவியலாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் நம்பர் 6 ஆம் திகதி வெளிவந்த டெய்லிமிரர் ஆங்கில பத்திரிகைக்காக எழுதியகட்டுரையின் தமிழாக்கம் இது)
மு முல்லைத்தீவு மாவட்டத்தின் வடக்கிலிமைந்த கரைதுறைப்பற்று உதவி அரசாங்க அதிபர் பிரிவில் தொடராக நடந்த யுத்தத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளினால் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 2009 இல் திட்டவட்டமாக நிர்மூலமாக்கப்பட்டனர்.
எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது சிரேஷ்ட பிரதித்தலைவர்கள், தளபதிகள், ஆகியோருடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். இத்தோடு பெருமளவிலான பொதுமக்களும் பலியாகினர்.
பத்தாயிரத்துக்கு மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பாதுகாப்பு படைகளிடம் சரணடடைந்தனர். இவர்கள் விசேட முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டனர். இவர்களில் சில ஆயிரம்பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளோர் கட்டங்கட்டமாக விடுவிக்கப்படுவர். ஆயிரம் வரையிலான வைரித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மே 29 இல் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பிரதான விளைவு சண்டை முடிவுக்கு வந்துள்ளமையாகும். புலிகளின் பாணியிலான வன்முறைகள் இலங்கையில் அற்றுப்போயுள்ளமை விசேட கவனத்துக்குரியதாகும்.
கடந்த 18 மாதங்களாக இலங்கையின் எந்தப் பக்கத்திலும் எல்.ரீ.ரீ.ஈ. செய்வித்த வன்முறை இடம்பெறவில்லை. புலிகளின் வன்முறை காணப்படாமை, மற்றும் யுத்தத்தின் வடுக்கள், புண்களை ஆற்ற மேற்கொள்ளப்படும் நத்தைவேக நடவடிக்கைகளையிட்டு நாட்டு மக்கள் ஆறுதல் பெருமூச்சு விடும் இவ்வேளையில், தற்போதுள்ள அமைதி நிரந்தரமானதா அல்லது இடைவேளை மட்டும்தானா என்ற கேள்வி பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.
இன்னும் சிறிது காலத்தில் புலிகளின் மீள் வருகையினால் வன்முறைகள் மீண்டும் தொடங்கக் கூடும் என்ற பயமும், விளக்கமும் இந்த கேள்வியின் ஆதார சுருதியாக உள்ளன.
பொதுவாக நாட்டிலும், குறிப்பாக தமிழர் வாழும் பிரதேசங்களிலும் காணப்படுகின்ற, மெதுவாக, ஆனால், தொடர்ந்து வரும் வழமை நிலை நோக்கிய நகர்வை எல்.ரீ.ரீ.ஈ. வன்முறையின் மீட்சி குழப்பிவிடக் கூடும் என்பது கவலையளிப்பதாக உள்ளது. நிலையான சமாதானம், உண்மையான இணக்கப்பாடு நோக்கிய மட்டுப்படுத்திய முன்னேற்றம் பின்னடைவைக் காணும்.
இப்படி நடக்குமிடத்து இதனால் இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்படக் கூடிய நிலைமை மிகவும் பயப்பட வேண்டியதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் தசாப்தங்களாக நடத்தப்பட்ட யுத்தம் தமிழ் மக்களை அடித்து நொறுக்கி உருக்குலையாகச் செய்துள்ளது. இவர்கள் சாம்பலிலிருந்தும் தூசியிலிருந்தும் எழுந்து தம்மைத் தாதே மீட்க படும் பாடு பரிதாபகரமானது.
எல்.ரீ.ரீ.ஈ. இனால் முன்னெடுக்கப்படும் அரசியல் வன்முறை மீண்டும் தொடங்குவது நிலைமையை மோசமடைய செய்யலாம். இலங்கை அரசாங்கம் நிச்சயமாக கடும் நடவடிக்கை எடுப்பதுடன் மீண்டும் இரும்புக்கர ஆட்சிக்கு திரும்பும். வழமைக்கும் திரும்பும் செயற்பாடு பின்னடைவதற்கு, அப்பால், அரசு வடக்கு கிழக்கின் தற்போதைய சனத்தொகையமைப்பை மாற்றும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
இருப்பினும் அடிநிலை யதார்த்தம், புலிகளின் மீள்வருகைக்கு எதிராகவே காணப்படுகிறது. வடக்கு, கிழக்கில், பாதுகாப்பு இயந்திரம் சேதாரமின்றி காணப்படுவதும், அந்தப் பகுதிகளில் ஆயுதப்படைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு குறிப்பிடத்தக்களவுக்கு திருந்தியிருப்பதாலும் புலிகளின் மீள்வருகைக்கான வாய்ப்பு மிக சொற்பமே.
அத்துடன் மக்களின் விருப்புத் தெரிவுகள், வன்முறையை மீண்டும் தொடங்குவதாக அல்லாமல், புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், பொருளாதார நிலைமைகளை முன்னேற்றுதல், என்பனவாகவே உள்ளன. தம்மை அழிவுக்கு இட்டுச்சென்ற ஆயுத போராட்ட தசாப்தங்களுக்குப் பின்பு பலவீனப்பட்டுப்போன தமிழ் மக்கள், சில பொறுப்பற்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆவேசப் பேச்சுகளின் மத்தியிலும் வன்முறையை ஏற்கும் மனநிலையில் இல்லை.
புலம்பெயர்ந்தோர் பாத்திரம்
இருப்பினும் புலம்பெயர்ந்தோரின் பாத்திரம் கவலை தருவதாக உள்ளது.
எல்.ரீ.ரீ.ஈ இலங்கையில் மரண அடி வாங்கினாலும் அதன் வெளிநாட்டு அமைப்புகள் பாதிக்கப்படவில்லை. அதன்கிளைகள், முன்னணிகள், தொழில்கள், ஊடக அமைப்புகள் வழமை போல இயங்கின. தமக்குள் சச்சரவுகள் காணப்படினும், புலிகளும் புலிகளுக்கும் சார்பான புலம் பெயர்ந்தோரும் தமிழ் ஈழ இலட்சியத்தை ஆதரிப்பதோடு இயன்ற போதெல்லாம் புலிக்கொடியை பறக்க விடுகின்றனர்.
ஏமாற்றும் முயற்சியாக, புலிக்கொடி எல்.ரீ.ரீ.ஈ யின் கொடியல்ல, அது தமிழ் ஈழத்தின் கொடி என கூறப்படுகின்றது. வெளிநாட்டிலுள்ள பிரதான ஊடகங்களுக்கும், தமிழ் பேசாத தமிழ் இளைஞர் தலைமுறைகளுக்கும், உறுமும் புலி, தமிழ் தேசியக்கொடி என பிழையாகக் கூறப்படுகின்றது.
எல்.ரீ.ரீ.ஈ. யும் எல்.ரீ.ரீ.ஈ. சார்பான சக்திகளும் 2009 இல் புலிகளின் இராணுவ ரீதியான தோல்வியின் பின் கணிசமான வலுவையும் செல்வாக்கையும் இழந்துள்ளனர். உட்பூசல்களும், குழுக்களாகப் பிரிந்தமையும் இயக்கத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான கண்ணிற்படும் உதாரணமாக, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதம மந்திரி என தனக்குத் தானே பெயர் சூட்டிய விசுவநாதன் ருத்ரகுமாரன் மீது, ஒரு காலத்தில் புலி ஊடகங்களின் தலைமைக் காப்பாளராக இருந்த 'தமிழ்நெற்' வெட்ட வெளிச்சமாக காட்டி வரும் கசப்புணர்வைக் கூறலாம்.
ஆயிரக்கணக்கான கொடிபிடிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒரு குறுகியகால அறிவித்தலில் அணித்திரட்ட இப்போது எல்.ரீ.ரீ.ஈ யால் முடியாது. அந்தக் காலம் போய்விட்டது. பெரும் எண்ணிக்கையிலான எல்.ரீ.ரீ.ஈ. ஊடகங்கள் இப்போது இயங்குவதில்லை.
நிதி சேகரிப்பு முற்றாக நின்றுவிடவில்லை. ஆனால், நிச்சயமாக குறைந்து விட்டது. எல்.ரீ.ரீ.ஈ யிற்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை, வர்த்தக முயற்சிகளை வைத்திருப்பது அல்லது முகாமைத்துவம் செய்த பல 'பினாமிகள்' அவற்றை தமது சொந்த தேவைக்குப் பயன்படுத்த அல்லது விற்றுக்கொண்டு பணத்துடன் ஓடத் தொடங்கிவிட்டனர்.
உயர்கல்வித் தகைமை அல்லது வாண்மைத் தகைமையுடன் கூடிய, 'படித்த' எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்களின் இரவோடிரவான மாற்றமும் நகைப்புக்குரியதாக உள்ளது. மாற்றுக் கருத்துடையோரை கொலை செய்தல் உட்பட புலிகளின் ஒவ்வொரு செயலையும் நியாயப்படுத்திய இவர்கள்; இப்போது மனித உரிமைகளின் பாதுகாவலர்களாகிவிட்டனர். இவர்கள் வெட்கமில்லாமல், சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்குழு போன்ற புகழ்பெற்ற மனித உரிமை நிறுவனங்களுடன், இணைந்துக்கொண்டு மனித உரிமைகள் பற்றி பேசுகின்றனர்.
இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ இன் மறைவுக்குப் பின்னர். வெளிநாடுகளில் தோற்றம் பெற்றுள்ள இன்னொரு வகைப் புலி 'இணையப் போராளிகள்' ஆவர். பலவகையான இணையம் தளங்களும், ஈமெயில் குழுக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இணையத்தளங்கள், இலங்கையில் காணப்படும் நிலைமை பற்றி கட்டுக்கதைகளையும் பச்சைப் பொய்களையும் தான் அநேகமாக வெளியிடுகின்றன. ராஜபக்ஷ ஆட்சியின் வீழ்;ச்சி, புலிகளின் மீள்வருகை, என்பவற்றையிட்டு நம்பிக்கை கொண்டு அவைக்காக ஏங்கிக்கொண்டு ஈமெயில் போராளிகள் தமக்குள்ளே ஆவேசமான நீண்ட கடிதங்களை பரிமாறிக்கொள்கின்றனர்.
இவர்களது வேடிக்கை விளையாட்டுக்கள் போலவே புலிகளின் மீள்வருகை, வன்முறைகள் மீண்டும் தொடங்குதல் என்பவற்றை மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகள் இலேசான விடயனெக் கருதி உதாசீனம் செய்யாமல், புலம் பெயர்ந்தவர்களின் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நடவடிக்கைகளில் ஏதோவொரு விடயம் இருக்கக் கூடும் எனக் கவலைப் படுவதுடன் எல்.ரீ.ரீ.ஈ மீண்டும் வன்முறையை தொடங்கக் கூடும் எனவும் கவலைப்படுகின்றன.
மீண்டும் தொடங்குதல்
இந்த மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகள் புலி வன்முறைகள் மீண்டும் தொடங்குவதால் எந்த ஒரு பெறுமதியான நோக்கமும் நிறைவேறபோவதில்லை என்றும் அவை இலங்கை அரசால் ஈவிரக்கமின்றி நசுக்கப்படும் என்றும் கருதுகின்றன. இருந்தாலும் அவ்வாறான வன்முறைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கில்லை. இவ்வாறான வீண்முயற்சிகள் வழமை நிலைக்கு திரும்பும் தொடர்செயற்பாட்டின் மீது ஏற்படுத்தக் கூடிய தாக்கம்பற்றிய கவலையும் அவர்களுக்கு இருக்கிறது.
மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் அமைப்புகளின் புலிகளின் மீள்வருகைப் பற்றிய கவலையை இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கொண்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவொன்று சில வாரங்களுக்கு முன் இலங்கை அதிகாரிகளுடன் பேசுவதற்காக இலங்கைக்கு வந்திருந்தது. இங்கு பேசப்பட்ட முக்கிய விடயமாக எல்.ரீ.ரீ.ஈ. மீண்டும் அணித்திரளுதலும், வன்முறை வெடித்தலும் இருந்தன.
இந்திய தூதுக்குழுவினர், கே.பி. என அழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனுடனும் கொழும்பில் நீண்ட நேரம் பேசினர். முன்னாள் புலிகளின் இராணுவத்தளவாட கொள்வனவாளராக இருந்தவரும், தற்போது இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவருமான இவரிடம் புலிகளின் மீள்வருகையின் சாத்தியம் பற்றியும் புலிகள் சார்பான புலம்பெயர்ந்தோரின் பாத்திரம் பற்றியும் கேள்விகள் நிறையக் கேட்கப்பட்டன. இந்தியா, இந்திய மண் , இவ்வாறான முயற்சிகளுக்கு பயன்படுத்துவதையிட்டு மிகுந்த கவனம் செலுத்துவதாகத் தெரிகிறது. கே.பியுடனான இந்த உரையாடலின்போது இலங்கை அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்தியாவில் புலிகள் மீதான தடையை நீடிப்பது பற்றியதாக தற்போதைய சட்ட நடவடிக்கைகள் உள்ளன. இந்த தடை 1992 இலிருந்து அமுலில் உள்ளது. இது இரண்டு வருடத்துக்கொரு தடைவை புதுப்பிக்கப்பட்டு வந்தது. இந்த முறை புலி ஆதரவுக் குழுக்கள் தடையை நீடிப்பதற்கு எதிராக நீதிமன்றங்களால் கடுமையாக போராடி வருகின்றன. இந்தியாவில் புலிகள் அணிதிரண்டு மீண்டும் செயற்பாட்டுக்கு வரலாம் என்ற நியாயமான பயத்தைக் கொண்டுள்ள மத்திய, மாநில அரசுகள் புலித் தடையை நீடிக்க வேண்டுமென உறுதியாக வாதாடுகின்றன.
இருப்பினும் எல்.ரீ.ரீ.ஈ இல் மீள்வருகை சாத்தியமாதல் பற்றிய விடயத்தில் மேற்கத்தைய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் முக்கிய ஒரு வேறுபாடு உண்டு.
மேற்கத்தைய நாடுகளும் ஐக்கிய, பிரிபடாத இலங்கை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால், தமிழ் புலம்பெயர்ந்தோரின் நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியாக, வன்முறையற்றதாக இருக்கும் பட்சத்தில், இவர்களின் தமிழ் ஈழத்துக்கான பரப்புரையை தமது மண்ணில் சகித்துக்கொள்பவையாக இவை உள்ளன. உதாரணமாக, எல்.ரீ.ரீ.ஈ. அமெரிக்காவில் வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என்ற வகையில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும், நாடு கடந்த தமிழீழ அரசு, பிடடெல்பியா, நியூயோர்க் ஆகிய இடங்களில், பகிரங்க மாநாடுகளை நடத்தியுள்ளது.
ஆனால், இந்தியாவை பொறுத்தவரை இது வித்தியாசமானது. கடந்தகால கசப்பான அனுபவங்களின் பின்னணியில், எல்.ரீ.ரீ.ஈ. க்கோ அல்லது அதன் அனுதாபிகளுக்கோ சகிப்புத் தன்மை காண்பிக்கப்படுமென்பது அநேகமாக சாத்தியமற்றதே. சட்டத்தில் எங்காவது ஒரு பலவீனம் காணப்படினும், தமிழ்நாட்டில், உள்ள அரசுக்கெதிரான போக்கை கொண்டுள்ளவர்களும் தீவிரவாத, பிரிவினை ஆதரவுக் குழுக்களும் இழந்துபோன தமது செல்வாக்கை மீட்க இதைப் பயன்படுத்துவர். மேலும் மணிப்பூர் தீவிரவாதிகளுக்கு பயிற்சியையும் ஆயுதங்களையும் முட்டாள்தனமாக புலிகள் வழங்கியமையை இந்தியா கவனத்தில் எடுக்காமல்விட முடியாது. எனவே ஜனநாயக ரீதியாக, வன்முறை சாராத தமிழ் ஈழத்துக்கான ஆதரவைக்கூட குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் அனுமதிக்கும் சாத்தியம் இல்லை.
எல்.ரீ.ரீ.ஈ. யின் மீள்வருகை அதனை தொடர்ந்து வரக்கூடிய வன்முறை பற்றி சில மேற்கத்தைய நாடுகளிலும் கவலையும், சந்தோசமும், இப்போதைய நிலைமையில் பொருத்தமானதா இல்லையா என்பது பற்றி எதுவும் உறுதியாக கூறமுடியாது. உலகளவில் இடம்பெயர்ந்த தமிழர்களிடையே எல்.ரீ.ரீ.ஈ எவ்வளவு தூரம் வலுப்பெற்றுள்ளது, இலங்கையில் புலிகள் மீண்டும் வன்முறையை அவிழ்த்துவிடும் வாய்ப்பு எந்தளவு உள்ளது?
வெளிநாடுகளில் உள்ள புலி மற்றும் புலி ஆதரவு அமைப்புகளை, பொதுவில் இரண்டு வகைகளுக்குள் அடக்கலாம். இந்த இரண்டு வகையில் முதல் வகையில், புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள், மற்றும் புலிகளின் வெளிப்படையாக இயங்கும் அமைப்புகள் அடங்குகின்றன. எல்.ரீ.ரீ.ஈ அநேகமான மேற்கத்தைய நாடுகளில் தடை செய்யப்பட்டிருப்பதாலும், இலங்கையில் எல்.ரீ.ரீ.ஈ. நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாலும் இந்த அமைப்புகள் இப்போது எல்.ரீ.ரீ.ஈ. ஐ வெளிப்படையாக ஆதரிப்பதில்லை. சிலர் தாம் புலிகளுடன் இல்லை என்பதுபோல வெளியில் காட்டினாலும் இரகசியமாக புலிகளுக்கு விசுவாசமாக உள்ளனர்.
ருத்ரகுமாரன்
முதலாவது வகைக்குள் அடங்கும் நிறுவனங்களில் மூன்று பிரிவினர் உள்ளனர். இவர்கள் முதலாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் (TGTE) அதன் அமைப்புகளாகும். ஊடகங்களும், தனிநபர்களும், இதனுடன் சேர்ந்துள்ளனர். நியூயோர்க்கில் தொழிற்படும் வழக்குரைஞரான, ருத்ரா என அறியப்படும் விசுவநாதன், ருத்ரகுமாரன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை இயக்குபவராவார். முன்னர் ருத்ரா எல்.ரீ.ரீ.ஈ. யின் சர்வதேச செயலகத்திற்கு சட்ட ஆலோசகராக இருந்தார். இவர் நோர்வே ஒழுங்கு செய்த அரசாங்க – எல்.ரீ.ரீ.ஈ. சமாதான பேச்சுவார்த்தைகளின்போது எல்.ரீ.ரீ.ஈ. தூதுக்குழுவுக்கு வளவாளராக செயற்பட்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE) 'பிரதமர்' ஆக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்ட ருத்ரா, அண்மையில் நாடுகடந்த அமைச்சரவையையும் ஆக்கியுள்ளார். இதில் மூன்று பிரதி பிரதம மந்திரிகளும், ஏழு அமைச்சர்களும் பத்து பிரதி அமைச்சர்களும் உள்ளனர். இதில் இரண்டு அமைச்சர்களும், மூன்று பிரதி அமைச்சர்களும் பெண்கள் ஆவர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் (TGTE)சட்ட சபையில் ஒரு (ஆண்) சபாநாயகரும் (பெண்) பிரதி சபாநாயகரும் உள்ளனர். ருத்ரா (செனட்) மேலவை ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறார்.
'பிரதமர்' ருத்ரகுமாரனும் அவரது அமைச்சர்களும், பிரதி அமைச்சர்களும் கோமாளித்தனமான மன ஆறுதலை வழங்கிவரும் வேளையில், மேற்கத்தைய நாட்டு சிரேஷ்ட அதிகாரிகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கருவை ஏற்புடையதாகக் கருதுகின்றனர். இவ்வாறான ஜனநாய செயற்பாடுகள் மனவெழுச்சிக்கு ஆட்படும் புலம்பெயர்ந்தோர் சிலரை வன்முறை நாட்டத்திலிருநது பிரித்தெடுக்கக் கூடுமென இந்த அதிகாரிகள் எண்ணுகின்றனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில அங்கத்தவர்கள் தமது முக்கியத்துவம் பற்றியும் அந்தஸ்து பற்றியும் மாயைகளை கொண்டுள்ளனர். ஓர் ' அமைச்சர்' இந்திய வெளிநாட்டு அமைச்சரான எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு சமமாக ராஜபக்ஷ அரசாங்கத்தின் அரசவிருத்தினராக கொழும்பு செல்வதற்காக உத்தியோக பூர்வ அழைப்பை எதிர்பார்த்துக்கொண்டுள்ளார். ஏனையவர்கள் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு அழைக்கப்படுவர் என எதிர்பார்த்துக்கொண்டுள்ளனர்.
யதார்த்தம் என்னவெனில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனங்காணப்பட்ட சகல அங்கத்தவர்களும் இலங்கை அரசாங்கத்தின் கறுப்புப் பட்டியலில் உள்ளவர்கள் என்பதே. இந்த அமைப்பை சமமான பேச்சுவார்த்தைப் பங்காளராக அரசாங்கம் நடத்தும் சாத்தியம் ஏதுமில்லை. இருந்தும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள், தம்மையும் தமது ஆதரவாளர்களையும் இப்படியான பிரம்மைகள் மூலம் ஏமாற்றிவருகின்றனர்.
மேற்கத்தைய அதிகாரிகள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அதிகாரிகளை கௌரவமாக நடத்த விரும்புகின்றனர். ருத்ரகுமாரனின் ஏற்பாட்டை தீங்கற்ற பகிடியாகவும், உள்ளவற்றில் ஆகக் குறைந்தளவில் தீங்கானது எனவும் இவர்கள் கருதுவதனால், குறைந்த மட்டத்திலான உத்தியோகரீதியான பேச்சுவார்த்தைகளை இவர்களுடன் நடத்தவும் கூடும்.
மேற்கத்தைய பாதுகாப்பு என்ற பார்வையில் கூடிய தீங்கான விடயமாகக் காணப்படுவது நெடியவனால் கட்டுப்படுத்தப்பட்டு வழிப்படுத்தபடும் அமைப்புகளே ஆகும். நெடியவனின் செல்வாக்கு மண்டலத்தினுள் உள்ளவையாக, பல எல்.ரீ.ரீ.ஈ. கிளைகளும், உலக தமிழ் அரங்கமும் (றுவுகு) இதற்குள் அடங்கும். பல்வேறு நாடுகளிலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட மக்கள் முன்னணிகளும் தேசிய மன்றங்களும் உள்ளன.
உலக தமிழ் அரங்கம் பல்வேறு நாடுகளில் உள்ள 14 நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இவற்றுள் முக்கியமானவையாக பிரித்தானிய தமிழ் அரங்கமும் (BTF) கனடாவில் உள்ள கனேடிய தமிழ் காங்கிரஸும் உள்ளன. பிரித்தானிய தமிழ் அரங்கம் (BTF) உற்சாகமாக தொழிற்படுகிறது. அது பல பிரித்தானிய அரசியல்வாதிகளுடனும், ஊடக முக்கியஸ்தர்களுடனும் உயர்மட்ட தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது.
கனேடிய தமிழ் காங்கிரஸ் நன்றாக இயங்கவில்லை. இந்த அமைப்பின் பேச்சாளரும் வெளியில் அறியப்பட்டவருமான டேவிட் பூபாலபிள்ளையின் அறிவிப்புகளும் பேச்சுக்களும் கனேடிய தமிழ் காங்கிரஸ் அமைப்பினை (CTC) பலமுறை தர்மசங்கடமான நிலைக்கு தங்கியுள்ளது. பூபாலபிள்ளை புளொட் அமைப்பின் முன்னாள் பிரதி தலைவரான வாசு தேவாவினதும் பத்திரிகையாளரான (தராக்கி) சிவராமினதும் மைத்துனராவார்.
நெடியவன்
உலக தமிழ் அரங்க (GTF) அங்கத்துவ அமைப்புகள் சில தனித்தியங்கும் சுதந்திரத்தை அனுபவிக்கின்றன. முக்கிய பிரச்சினைகளில் முரண்பாடான நிலைப்பாட்டையும் எடுக்கின்றன. அங்கத்துவ அமைப்புகளுக்குள்ளும் பிரிவுகள் உண்டு.
உலக தமிழ் அரங்கத்தின் (GTF) தலைவராக முன்னாள் யாழ்ப்பாணம் மறை மாவட்டத்தின் கத்தோலிக்க மாகாண முதல்வராகவிருந்த வண.பிதா. எஸ்.ஜே. இமானுவெல் உள்ளார். இவர் இப்போது ஜேர்மனியில் நிலை கொண்டுள்ளார். இவர் நிதானமாக, மெதுவாக, ஒரு குருவானவருக்குரிய பக்குவத்துடன் பேசுவார். இவர் தமிழ்தேசியம் என்னும் போது இறுக்கமான ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் போக்கை கொண்டவர் என்பதும் நெடியவனுக்கும் அவரது அடியாட்களுக்கும் 'தொட்டப்பா'வாக உள்ளார் என்பதும் நன்கு பிரசித்தமாக விடயம்.
பேரின்பநாயகம் சிவபரன் என்னும் சொந்த பெயர் கொண்ட இவரைப் பற்றி இப்பத்தியில் நிறைய எழுத்தப்பட்டுள்ளது. இவர், புலிகளின் வெளிநாட்டு செயற்பாடுகளுக்கு பொறுப்பாகவிருந்த எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் மணிவண்ணன் அல்லது கஸ்ட்ரோவினால் எல்.ரீ.ரீ.ஈ. யின் வெளிநாட்டு கிளைகளின் இணைப்பாளராக முன்பு நியமிக்கப்பட்டவர்.
கஸ்ட்ரோவின் மரணத்தின் பின் எல்.ரீ.ரீ.ஈ.யின் வெளிநாட்டு கிளைகளின் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவர் உயரமானவர் எனப்பொருள்ப்படும் இயக்கப் பெயரை வெற்றிக்கொண்டார். சொற்ப காலத்தின் முன் இதை நெடியோன் என மாற்றிக்கொண்டார். இதுவும் உயரமானவர் எனப்பொருள் படினும் செந்தமிழாகவும் மரியாதைக்குரியதாகவும் உள்ளது.
34 வயதான நெடியவன் 18 வயதில் எல்.ரீ.ரீ.ஈ. யில் சேர்ந்தார். இவரை எல்.ரீ.ரீ.ஈ உயர்க்கல்விக்காக ரஷ்யாவுக்கு அனுப்பியது. ஆனால் இவர் அங்கு பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை போல தெரிகிறது.
நெடியவன் எல்.ரீ.ரீ.ஈ இன் அரசியல் பிரிவில் வேலைசெய்தார். எல்.ரீ.ரீ.ஈ. யின் அரசியல் பிரிவுத் தலைவர் சுப்பையா பரமு தமிழ்செல்வனுடன் தாய்லாந்தில்; நடந்த நாலாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றார். பின்னர் இவர் ஐரோப்பாவில் நிலைக்கொண்டார்.
2002-2005 காலப்பகுதியில் சமாதான பேச்சு இடம்பெற்ற சமயத்தில் எல்.ரீ.ரீ.ஈ. பல செயற்பாட்டாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியுள்ளது. இவர்களில் அநேகமானவர்கள் அரசியல் அல்லது உளவுப்பிரிவைச் சேர்ந்தவர்கள். நெடியவன் நோர்வேயுக்குச் சென்று அங்கு வசிக்கலானார்.
நெடியவன், சிவகௌரி சாந்த மோகன் என்னும் பெண்ணை திருமணம் செய்தார். இவருடைய தந்தை சகோதரன் ஞானேந்திர மோகன் அல்லது ரஞ்சன் லாலா ஆவார். ஞானேந்திர மோகன் எல்.ரீ.ரீ.ஈ. இன் ஆரம்பகால உறுப்பினரும் பிரபாகரனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவருமாக இருந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தபோது இராணுவம் இவரை சுட்டுக்கொன்றது.
திருமணபந்தம், எல்.ரீ.ரீ.ஈ. க்குள் நெடியவனின் செல்வாக்கை வலுப்படுத்தியது. கஸ்ட்ரோ வழிவந்த அதிகாரத்தின் மூலம் இவர், கே.பி. உலக புலி பிரதானியாக வருவதற்கு எதிரான செயற்பாடுகளை தொடங்கி முன்னெடுத்தார்.
கடந்த ஆகஸ்டில் கே.பி. மலேஷியாவில் பிடிப்பட்டதன் பின் இவர் எல்.ரீ.ரீ.ஈ.இன் வெளிநாட்டு கிளைகள் மீது கூடிய கட்டுப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டார்.
நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) என்ற எண்ணக்கரு கே.பி.யின் மூளையிலேயே முதலில் உருவாகியது. கே.பி. சுதந்திரமாக இருந்த காலத்திலேயே நாடுகடந்த தமிழீழ அரசு என்ற திட்டத்தை முன்னெடுக்கும் பொறுப்பு கே.பி. விசுவாசியான ருத்ரகுமாரனிடம் கொடுக்கப்பட்டது. கே.பி. பிடிப்பட்டதுடன் கேபிக்கும் ருத்ரகுமாரனுக்குமிடையிலான தொடர்புகள் அறுந்து போயின. ருத்ரகுமாரன் இத்திட்டத்தை முழுமையாகப் பொறுப்பேற்று தனது திறமை, நேரம் என்பவற்றை இத் திட்டத்தை செயற்படுத்துவதிலேயே அர்ப்பணித்தார்.
நெடியவனின் சதிக்கூட்டம் ருத்ரகுமாரனையும் நாடுகடந்த தமிழீழ அரசையும் கே.பியின் எறியங்களாகவே பார்த்தனர். இந்தக் கூட்டம் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை பல வகைகளிலும் குழப்ப முயன்றது. அதில் ஒன்றுதான் நாடு கடந்த தமிழ் நிறுவனங்கள் அடுத்தது வண. பிதா இமானுவலின் செல்வாக்கைப் பயன்படுத்தி உலக தமிழ் அரங்கத்தின்மீது நெறிப்படுத்தும் அதிகாரத்தை கைப்பற்றியதாகும்.
தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் நாடுகளில் நிறுவனங்களின் வலைமைப்பை நெடியவன் அணி ஏற்படுத்தியது. இவை மக்கள் பேரவை அல்லது தேசிய மன்றங்கள் என அழைக்கப்பட்டனர். ஒவ்வொரு நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஜனநாயக ரீதியான தேர்தல்களை நடத்தியது போலவே நெடியவனின் வலையமைப்பும் தேர்தல்களை நடத்தியது.
ஜெயானந்தமூர்த்தி
இவ்வாறான போட்டி முயற்சிகள் காணப்பட்ட போதும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற எண்ணக்கரு பரந்துப்பட்ட மக்களின் மனதைப் பற்றியதுடன் உயர்கணிப்பு பெற்ற முக்கியஸ்தர்களின் உள்ளத்தையும் கவர்ந்தது.
இதனால் நெடியவன் அணி உத்தியை மாற்றிக் கொண்டது. அது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரிவுகளுக்குள் ஊடுருவத் தொடங்கியது. முன்னாள் மட்டக்களப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயானந்தமூர்த்தியை ருத்ரகுமாரனுக்கு போட்டியாளராக கொண்டுவந்து ருத்ரகுமாரனை கவிழ்க்கும் வெளிப்படையான முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டது. ஜெயானந்தமூர்த்தி, ருத்ரகுமானுடன் நின்றுபிடிக்க முடியாதவராகையால் அந்த முயற்சி மோசமான தோல்வியை கண்டது.
ருத்ரகுமாரனை வெல்லமுடியதாதெனக் கண்ட நெடியவன் சதிக்குழு தனது அணுகுமுறையை மீண்டும் மாற்றியமைத்தது. இது பிரதம அமைச்சர் என்ற ரீதியில் ருத்ரகுமாரனின் அதிகாரத்தை குறைக்க அல்லது மட்டுப்படுத்த சதி செய்ததது. இந்த முயற்சியும் இதனால் நெடியவன் அணி இனி என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டுள்ளது.
பரஸ்பரம் அழிவைக் கொண்டுவரக் கூடிய இந்த இரண்டு அணியினருக்கும் இடையிலான பகைமை சிறிது கவலை தருவதாகவும் உள்ளது. மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் இதை பாரதூரமான விடயமாகக் கருதவில்லை. பல்வேறு நாடுகளில் இரண்டு அணியினரதும் ஆதரவாளர்கள் மற்றும், தொழிற்படுநர்களிடையிலும் மோதல் ஏற்பட்ட சம்பவங்கள் பல உள்ளன. நியூயோர்க்கில் நடந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கூட்டமொன்றில் வில்லுக்கத்திகளுடன் இரண்டு வன்குழுக்கள் காணப்பட்டன.
இவ்வாறான வெளிப்பாடுகள் காணப்பட்ட போதும், சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் சட்டம் ஒழுங்குப் பிரச்சினை பற்றிய பயமின்றி உள்ளன. உண்மையில் சில அதிகாரிகள் தமிழ் அணிகளுக்கு இடையிலான இந்த 'போட்டியை' தமிழ் புலம்பெயர்ந்தோரிடையேயான மலர்ந்து வரும் உள் ஜனநாயகத்தின் ஆரோக்கியமான போட்டியாகக் காண்கின்றனர். உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மரதன் நடைகள், கொடும்பாவி எரிப்புகள் என்பன ஜனநாயக ரீதியான மாற்றுக்கருத்து மற்றும் எதிர்ப்பு என்பவற்றின் சட்டபூர்வமான வடிவங்களாக கருதப்படுவதனால் இவர்கள் இவற்றை வெறுப்போடு பார்ப்பதில்லை.
வெளிப்படையாக இயங்கும், பொறுப்புக் கூறவேண்டிய நிலையில் உள்ள தனிச்சிறப்பு அமைப்புகளின் எதிர்ப்புகள், ஆர்ப்பாட்டங்கள் பாதகமானவை எனக் கருதப்படாதபோதும், அதிகம் வெளித்தெரியாத, பொறுப்புக் கூறும் நிலையில் இல்லாத சில இரகசிய செயற்பாடுகள் பற்றி அதிக கவலை காணப்படுகிறது. எல்.ரீ.ரீ.ஈ. இன் மீள்வருகை, இலங்கையில் வன்முறைகள் மீண்டும் தொடங்குதல் இவற்றினால் வெளிநாடுகளில் வரக்கூடிய தொடர் நடவடிக்கைகள், மறைமுகமான தாக்கங்கள் என்பவை பற்றியே ஆகக் கூடிய பயம் உள்ளது.
அண்மைக் காலத்தில் மேற்கத்தைய நாடுகளில், தமது மண்ணை, இலங்கை உட்பட எந்தவொரு நாட்டிலும் மேற்கொள்ளவுள்ள 'பயங்கரவாதத்துக்கு' நிதி சேகரிக்க பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற பொதுக்கருத்து காணப்படுகிறது.
இந்த கருத்தொற்றுமையின் ஒரு பகுதியாகவே, சில வருடங்களின் முன் எல்.ரீ.ரீ.ஈ. இன் நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஐக்கிய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகள், முக்கியமான புலித் தலைவர்கள் மீதும் நிதி சேகரிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுத்தன.
முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் அனர்த்தத்தின் பின் அநேகமான மேற்கத்தைய நாடுகள் இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீது அனுதாபம் கொண்ட காரணத்தால் நிதிசேகரிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சற்று ஓய்ந்திருந்தன.
இலங்கைத் தமிழ் மக்களின் துன்பநிலை பற்றி கவலை கொண்டவர்களாக காட்டிக் கொள்ளும் புலிகளும் புலி ஆதரவு அமைப்புகளும் இயன்றளவு உச்ச அளவில் நிதி சேகரித்து, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் போன்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு அதைப் பயன்படுத்துவர் என்பதே எதிர்பார்க்கப்பட்டது.
அது நடக்கவில்லை. பதிலாக புலிகளும் புலி ஆதரவு நிறுவனங்களும் இடம் பெயர்ந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு உதவுவதற்கு எதிராக நச்சுத்தனமான பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழ் மக்கள் மீதான அக்கறையின்மையின் அருவருப்பூட்டும் வெளிப்பாடு எனில் பல்வேறு அழிவு நோக்கத்துடன் நிதிதிரட்டுவது பற்றி கவலை தரும் தகவல்களும் தெரியவந்தன.
இது எச்சரிக்கை மணியை ஒலிக்கச் செய்தது. மீண்டும் எல்.ரீ.ரீ.ஈ. நிதி சேகரிப்பாளர்கள் மற்றும் முக்கிய தொழிற்படுநர்கள் மீது நடவடிக்கைகள் அண்மைய மாதங்களில் இடம்பெற்றன. நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் புலி செயற்படுநர்களை கைது செய்துள்ளது. வேறு நாடுகளிலும் எல்.ரீ.ரீ.ஈ.க்கு நிதி சேகரிப்பவர்கள் என சந்தேகிக்கப்படும் மேலும் சிலர், விரைவில் கைது செய்யப்படலாம் அல்லது தடுத்து வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மே 2009 இல் இடம்பெற்ற நிகழ்வுகளின் பின் எல்.ரீ.ரீ.ஈ.இன் நிதி சேகரிப்பு பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. இப்போது வைரித்த எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களிடமிருந்தும் செயற்பாட்டாளர்களிடமிருந்தும்தான் பிரதானமாக நிதி சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் நிதியின் அளவு, சில வருடங்களின் முன் சேகரிக்கப்பட்ட நிதியின் 10-15 வீத அளவுக்கு குறைந்துள்ளது. இவ்வளவு பாரிய வீழ்ச்சி காணப்பட்ட போதும் இந்த நிதியில் சில மறைக்கப்படும் காரணங்களுக்காக நிதி சேகரிக்கப்படுவது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கிலேசத்தை ஏற்படுத்துகின்றது.
ஒரு மட்டத்தில் ராஜபக்ஷ ஆட்சிக்கும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளுக்கும் எதிரான சட்ட நடவடிக்கைக்கு என்று கூறி நிதி சேகரிக்கப்படுகின்றது. ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை யுத்த குற்றமிழைத்தவர்கள் என குற்றஞ்சாட்டி சர்வதேச விசாரணை மன்றங்களுக்கு இழுக்கப் போவதுபற்றி பெரிதாகப் பேசப்படுகிறது. புரியப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றம், மனித இனத்துக்கு எதிரான குற்றம் என்பவற்றுக்கான சான்றுகளை, சாட்சியங்களை சேகரிப்பது பற்றியும் பேசப்படுகின்றது.
இப்படியான தேவைக்கான நிதி சேகரிப்பு தமிழ் புலம்பெயர்ந்த மக்களுள் ஒப்பீட்டளவில் முன்னேறிய பகுதியினரிடமிருந்து மேற்கொள்ளப்படுகிறது. உயர்கல்வி தகைமையுடன் கூடிய படித்த தமிழர்களுக்கு, ஜனாதிபதி ராஜபக்ஷ மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கம், எவ்வளவுதான் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்தப்போதும், ஆசைக்காட்டுவதாக உள்ளது. இது தொடர்பில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் பற்றிய கற்பனைகள் மனதை உருக்குவனவாக இருப்பதனால் கணிசமான புலம்பெயர்ந்த வாண்மையாளர்களும் புத்திஜீவிகளும் தாராளமாக நிதி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சில மேற்கத்தைய நிபுணர்களும் வழக்குரைஞர்களும் நம்பிக்கெடும் புலம்பெயர்ந்த இந்த ஏமாளிகளிடமிருந்து பெருந்தொகைப் பணத்தை கறந்துக்கொண்டிருக்கின்றனர்.
ஒரு பிரபல வழக்கறிஞர் ஒருவருக்கு முற்பணமாக நாளொன்றுக்கு 1000 அமெரிக்க டொலர்வீதம் , மூன்று மாதங்களுக்கு மேலாக அண்மைக் காலம்பவரை பணம் கொடுக்கப்பட்டுக்கொண்டு இருந்தது. 'அறப்படிச்ச பல்லி கூழ் பானையில் விழுந்ததாம்' என பழமொழி உண்டு. இந்த கோமாளிக் கூத்துகள் இந்த பழமொழியை ஞாபகப்படுத்துகிறது.
வடக்கு, கிழக்கிலுள்ள ஆயிரக் கணக்கான வறிதாக்கப்பட்ட மக்கள் துன்பத்தில் வாழும் நிலையில் இப்படியான விடயங்கள் கவலை தருவனவே. இப்படியான நிதிவளங்களை கிடைக்கப் போகாத நீதிக்காக வீணாக்காமல், இந்த மக்களுக்கு உதவப் பயன் படுத்தலாம். தமிழ் மக்களுக்கு உதவப் பயன்படுத்தலாம். தமிழ் மக்களுக்கு பெரும் துயரங்களை கொடுத்த போருக்கு நிதி வழங்கி, அதை தூண்டிய புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு தார் மீகக் கடமையொன்று உள்ளது.
இவர்கள் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்த வேண்டும், பிராயச்சித்தம் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செத்துப்போய் வாழும் மக்களை புறக்கணித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கும் பழைய வழியிலேயே செல்கின்றனர். இது எவ்வளவு தூரம் கோமாளித்தனமாக, யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டததாக இருப்பினும் சட்ட நடவடிக்கைக்காக நிதி சேகரிப்பதை மேற்கத்தைய சட்ட அமுலாக்கல் நிறுவனங்கள் கணக்கில் எடுக்க மாட்டா.
கவலையளிக்கும் விடயமாக இருப்பது என்னவெனில் புலம்பெயர்ந்தோரின் சில பகுதியினரிடம் இரகசியமாக மேற்கொள்ளப்படும் வேறொரு விதமான நிதி சேகரிக்கப்பாகும். இவை நேரடியாக புலிகளின் மீள்வருகையுடனும், வன்முறைக்கு திரும்புவதுடனும் தொடர்பானவை.
பொதுவான கதை
எல்.ரீ.ரீ.ஈ. நிதிசேகரிப்பாளர்களும், தொழிற்படுநர்களும் பல்வேறு மேற்கத்தைய நாடுகளில் பணம் சேகரிக்கச் செல்கின்றனர். இவர்கள் ஒரே கதையைத்தான் எல்லா இடத்திலும் கூறுகின்றனர். கதை சொல்லும் விதம், கதை கூறுபவர், கேட்பவர்களைப் பொறுத்து மாறுபடும். கதையின் சாராம்சம் இதைப்போலவே இருக்கும்:-
"எல்.ரீ.ரீ.ஈ. தலைவர் பிரபாகரனும் உளவுப்பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் அநுபவம் வாய்ந்த 2000 புலிப்போராளிகளுடன் இரகசியமான ஒரு இடத்தில் பாதுகாப்பாக உள்ளனர். முள்ளிவாய்க்கால் அனர்த்தத்திற்கு சில நாட்களுக்கு, முன் இவர்கள் இராணுவம், கடற்படை ஆகியவற்றின் முற்றுகை வளையத்தை உடைத்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு சென்றுவிட்டனர். இவர்கள் நல்ல காரணத்துக்காகவே வெளிப்படாமல் உள்ளனர். ஆனால் வடக்கு, கிழக்கில் நன்கு ஆயத்தம் செய்யப்பட்ட தாக்குதலை தொடக்கி ஆயுதப்படைகளை துரத்தி அல்லது அழித்தொழித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதிகளை கைப்பற்றும் திட்டங்கள் தயாராகிக் கொண்டுள்ளன.
'பல்வேறு தொகுதிகளாக வேறு இரகசிய இடங்களில் 10,000 போராளிகள் பயிற்றப்படுகின்றனர். பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரின் தலைமையில் ஒரே தடவையில் பெரும் தாக்குதலை தொடக்குவதே திட்டமாக உள்ளது.
'12,000 எல்.ரீ.ரீ.ஈ. போராளிகளும் இணைந்து தமிழ் ஈழத்தின் நிலப்பரப்பை மீட்டெடுப்பதுடன் தற்போது காணப்படும் இராணுவ நிலைமையை தலைகீழாக மாற்றுவர்
'இந்த இராணுவ தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக, சிங்களப் பெரும்பான்மை கொண்டுள்ள ஏழு மாகாணங்களிலும் நன்கு இணைக்கப்பட்ட நிலக்கண்ணி மற்றும் குண்டுத்தாக்குதல்கள் தொடராக நடத்த நாம் திட்டமிட்டுக்கொண்டிருக்கின்றோம். இதற்காக நாம், பெருமளவு, இலஞ்சம் கொடுத்து சிங்கள முன்னாள் படை வீரர்களை சேர்த்துக்கொண்டிருக்கின்றோம். சரியான நேரத்தில், எமது பிரதான தாக்குதலுடன் இவர்களும் சேர்ந்து செயற்படுவர்.
இந்த திட்டங்கள் நற்பயன்தர எமக்கு பணம் வேண்டும். நாம் கண்ட எல்லோரிடமும் கேட்கமுடியாத எம்மால் இது தொடர்பில் வெளிப்படையான வேண்டுகோளை விடுக்கவும் முடியாது. உங்களைப் போன்ற சில நம்பிக்கைக்கு பாத்திரமான, ஈடுபாடு காட்டிய ஆட்களில்தான் நாம் தங்கியிருக்க முடியும். எனவே உங்களால் முடிந்ததை தாருங்கள்."
இதுதான் பணம் சேகரிப்பதற்கு புலி நிதி சேகரிப்பாளர்கள் கூறிவரும் கதையின் சாரம் - சுருக்கம்.
முதலில் இந்தக் கதையை கேட்டப்போது நான் பெரிதாக சிரித்தேன். இருந்தாலும் இதைச் சொன்னவர், உண்மையாகவே இந்த கதையை நம்புகிறார், அவர் என்னையும் நம்பவைக்க முயற்சிக்கின்றார் என உணர்ந்தப்போது சிரிப்பதை நிறுத்திவிட்டேன். பின்னர் இதே கதை வேறு நபர்களால் வேறு பல நாடுகளிலும் திருப்பித் திருப்பி கூறப்படுவதாக நான் கேள்விப்பட்டேன்.
பின்னர் நான் 'பயங்கரவாதம்' பற்றி நிபுணத்துவம் பெற்றுவருபவரும், பல்வேறு தேசத்து பாதுகாப்பு, உளவு அதிகாரிகளுடன் நிறைய தொடர்புகளை உடையவருமான ஒரு மேற்கத்தைய பத்திரிகையாளருடனும் குறிப்புகளை பரிமாறிக்கொண்டேன். இந்த கதையை முதலில் கேட்டப்போது பாதுகாப்பு அதிகாரிகள் அதைக் கணக்கில் எடுக்கவில்லை என்றும் ஆனால் இதை உண்மையென நம்பும் விசுவாசத்தின் தீவிரத்தன்மை அவர்களுக்கு புதிராகக் காணப்படுவதாகவும், கூறினார். குறைந்தப்பட்சம் சிலராவது, இந்த 'சாத்தியமாகாத நோக்கத்திற்கு' நிதி வழங்குகின்றனர் என்பதையிட்டு அவர்களும் கிலேசமடைந்துள்ளனர்.
சாத்தியமின்மை
இந்த பத்தி எழுத்தாளர் பிரபாகரனும் பொட்டு அம்மானும் இறந்துவிட்டனர் என்றும் எல்.ரீ.ரீ.ஈ. இன் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டது எனவும் உறுதியாக நம்புகின்றனர். சரணடைந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு தொகுதி, தொகுதியாக விடுவிக்கப்படுகின்றனர். இதுவரை இலங்கையில் பிடிபடாது தப்பியுள்ள சில எல்.ரீ.ரீ.ஈ செயற்படுநர்களும், ஆதரவு வலையமைப்பின் அங்கத்தவர்களும் இருக்கக் கூடும். ஆனால் இவர்களும் திட்டமிட்ட வகையில் பிடிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது காணப்படும் உலக யதார்த்த நிலைமையின்படி 12,000 போராளிகளுக்கு இலங்கையை தாக்குவதற்கு இராணுவ பயிற்சியளிக்க புலிகளை எந்த நாடும் அனுமதிக்கப் போவதில்லை. மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு பின்தளமாக தென்னாசிய அல்லது தென்கிழக்காசிய பிரதேசங்களே இருக்கமுடியும். இந்தியாவின் அமைவிடத்தைப் பார்க்கும்போது இது சாத்தியமற்றது.
ஒருங்கிணைக்கப்பட்ட வகையில், முன்னாள் படை வீரர்களுக்கு பணங்கொடுத்து அவர்களைக்கொண்டு நிலக்கண்ணிகளை வைப்பது என்பதும் குண்டுகளை தொடர்ந்து வெடிக்க வைப்பது என்பதும் கற்பனைத் திறனின் உச்சப்பறப்பு ஆகும்.
புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் முன்னர் நாசவேலைகளில் ஈடுபட பாதுகாப்புப் படையை சேர்ந்த பலருக்கு பணங்கொடுத்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான முயற்சிகள் படுதோல்வியிலேயே முடிந்தன. படைவீரர்கள் அல்லது முன்னாள் படைவீரர்களிடம் உள்ள உண்மையான தேசப்பற்று இந்த முயற்சிகளை முறியடிக்கும். சரத்பொன்சேகா நடத்தப்படும் முறைப்பற்றி கோபங்கொண்டுள்ள எவரேனும் ஒரு முன்னாள் இராணுவ வீரர்கூட இந்த வேலையைச் செய்யமாட்டார்.
இதைவிட முக்கியமானது நாட்டின் பாதுகாப்பு நிலை உறுதியான கட்டுப்பாட்டில் உள்ளது என்பதாகும். பேரளவிலான நாசவேலை சாத்தியமில்லை. இந்த எச்சசொச்ச எல்.ரீ.ரீ.ஈ.யினரால் கற்பனை செய்யப்படும் கடல்வழி ஆக்கிரமிப்பும் சாத்தியமற்றதே. ஒரு சிறு தாக்குதல் படை தரையிரங்கி ஊடுருவினாலும் இது நீண்டகாலம் தப்பிப் பிழைத்திருக்காது. இதுவே தற்போதைய இராணுவ யதார்த்தம்
இந்த பின்னணயில் நோக்கும்போது இலங்கை மீது இராணுவ தாக்குதலை நடத்தவென வெளிநாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ தொழில்படுநர்கள் பணம் சேகரிக்க முயல்வது, புலம் பெயர்ந்த ஏமாளிகளிடமிருந்து பணத்தை தந்திரமாக பெறும் பெரும் ஏமாற்று வேலையின் ஒரு பகுதியேயாகும். புலம் பெயர்ந்தோரில் ஒரு பகுதியினரிடம் இலங்கை அரசாங்கத்தின் மீது காணப்படும் குருட்டுத்தனமான வெறுப்பும் கோபமும் காணப்படும் பின்னணியில் கற்பனை செய்யப்படும் இந்த திட்டத்துக் குறிப்பிட்ட ஒரு தொகையை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இந்த திட்டம் எழுச்சிபெறவோ அல்லது சாத்தியமாகவோ முடியாது.
எல்.ரீ.ரீ.ஈ. விரைவில் வன்முறையுடன் மீண்டும் வருமா என்ற கேள்விக்கு பதிலாக இல்லை என்றே அடித்துக் கூறமுடியும்.
இராணுவ தாக்குதல் பற்றிய பிரமாண்ட திட்டம் சாத்தியமில்லாவிடினும் புலிசார்பு புலம்பெயர்ந்தோர் தொடர்ந்தும் தொல்லை கொடுப்பவர்களாகவும் எரிச்சலூட்டுபவர்களாகவும் நிச்சயமாக இருக்க முடியும். எனவே அடுத்து வரவிருக்கும் கட்டுரை புலிகள் இயக்கம், புலிசார்பான புலம்பெயர்ந்தோர் பிரிவினர் பற்றி ஆழமாக பரிசீலனை செய்வது சுவாரஷ்யமாகவும் அறிவூட்டுவதாகவும் இருக்கும்.
(தொடரும்)
DBS Jexaraj can be reached at இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
தமிழில் : ந.கிருஷ்ணராசா
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’