காங்கிரஸ் முகாமிலிருந்து தொடர்ந்து சலசலப்பு. ஏதாவது ஒரு வகையில், யாராவது ஒருவர் மூலம் தொடர்ந்து சலசலப்பு கிளம்பிக் கொண்டே இருப்பது, திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து போக ஏதாவது ஒருகாரணம் கிடைக்காதா என்று காங்கிரஸ் அலை பாய்வதாக எண்ணத் தோன்றுகிறது.
மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி காங்கிரஸ் கூட்டணியில் முக்கியக் கட்சியாக திமுக உள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், மத்தியில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் திமுகவும் உள்ளன.
இங்குதான் முதல் சலசலப்பு ஏற்பட்டது. மத்தியில் திமுகவுக்கு ஆட்சியில் அதிகாரம் கொடுத்தோமே, மாநிலத்தில் ஏன் தரப்படவில்லை என்பது தமிழக காங்கிரஸ் காரர்களின் முதல் அதிருப்தி. அந்த அதிருப்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தபோதிலும், திமுகவின் சாணக்கியத்தனத்தாலும், காங்கிரஸ் காரர்களே முதலில் ஒற்றுமையில்லாமல் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டே இருப்பதாலும், வெற்றிகரமாக சமாளிக்கப்பட்டு வந்தது.
ஆனால் சமீப காலமாக தொடர்ந்து காங்கிரஸ் முகாமிலிருந்து திமுகவை விமர்சித்தபடியே உள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆரம்பித்து வைத்தார். அதை கார்த்தி சிதம்பரம் பிடித்துக் கொண்டார். இவர்கள் இருவரும் மாறி மாறி திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சித்தபடியே உள்ளனர்.
இதுகுறித்து திமுக தரப்பில் வெளிப்படையாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டதும், மேலிடத்திலிருந்து சமீபத்தில் ஒரு கண்டிப்பான உத்தரவு வந்தது. இதையடுத்து இந்த இரு தலைவர்களின் சுருதியும் சற்று குறைந்துள்ளது. ஆனாலும் தொடர்ந்து சத்தம் போட்டபடிதான் உள்ளனர்.
தற்போது திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க அவர்களுக்கு புதிய விஷயம் கிடைத்து விட்டது. அது திருமாவளவன் . அவர் பாட்டுக்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார் திருமாவளவன். ஈழத் தமிழர் விவகாரம் குறித்து அவர் பேசப் போக அதை வைத்து அவரை மிகக் கடுமையாக சாடினார் கார்த்தி சிதம்பம்.
இந்த இடத்தில் கார்த்தி குறித்தும் ஏதாவது சொல்லியாக வேண்டும். இதுவரை தமிழக மக்களுக்காகவும், தமிழக பிரச்சினைகளுக்காகவும், எள் முனை துரும்பைக் கூட கிள்ளிப் போடாத, போராட்டத்தில் கலந்து கொண்டு சட்டை கசங்காத, மக்களுக்காகப் போராடி வியர்த்து விறுக்காத ஒரே அரசியல் தலைவர் இவர் மட்டுமே. ஆனால் இவர் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் புள்ளிகளில் ஒருவர்.
இப்படிப்பட்ட கார்த்தி, தமிழகத்தில் தலித் மக்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்க முக்கியக் காரணமாக இருந்தவரும், தலித் சக்தியின் தனிப்பெரும் தலைவராகவும் திகழும் திருமாவளவனை மிகக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்குப் பதில் அளித்த திருமா, தமிழகத்தில் காங்கிரஸை வளர்த்தது நேற்று வந்த தலைவர்கள் அல்ல, ஏன் இந்திரா, நேருவே கூட காங்கிரஸை தமிழகத்தில் வளர்த்ததில்லை. எனது பாட்டன் கக்கனும், அவரது தலைவர் காமராஜரும்தான் காங்கிரஸை வளர்த்தவர்கள். அப்படிப்பட்ட கக்கனை கடைசிக்காலத்தில் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் காய விட்டுக் கொன்றவர்கள் இந்த காங்கிரஸார் என்று சற்று காட்டமாகவே கூறியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் ராஜீவ் காந்தி சிலை அவமதிக்கப்படவே அத்தனை பழியையும் தூக்கி திருமாவளவன் மேல் போட்டு விட்டனர். மேலும் இதை சாக்காக வைத்து திமுகவையும் சீண்ட ஆரம்பித்துள்ளனர்.
காங்கிரஸ் தரப்பிலிருந்து இப்படி திமுகவை நேரடியாகவும், மறைமுகமாகவும் சீண்டி வருவதைப் பார்க்கும்போது திமுக கூட்டணியிலிருந்து கழன்று செல்ல ஏதாவது ஒரு காரணம் கிடைக்கிறதா என்று முயல்வது போலவே தோன்றுகிறது.
நமது தொல்லை தாங்க முடியாமல், திமுக தரப்பிலிருந்து ஏதாவது கடுமையான கருத்து வரும், அப்படி வந்தால் அதைக் காரணம் காட்டி மேலிடத்தில் மூட்டி விட்டு கூட்டணியை விட்டு பிரிந்து போய் விடலாம் என்ற எண்ணத்தில் சில காங்கிரஸார் இருப்பது போலத் தோன்றுகிறது. இவர்களுக்கு மேலிடத்து ஆசியும் இருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
அதாவது பட்டென்று சட்டையைக் கழற்றினால் பட்டன்கள் உடைந்து போய் விடும். பின்னர் மீண்டும் சட்டையை அணிய முடியாது. எனவே ஒவ்வொரு பட்டனாக கழற்றி, கடைசியில் சட்டையை கழற்றுவது போல காங்கிரஸின் செயல்பாடுகள் தெரிகின்றன. தேவைப்பட்டால் மீண்டும் சட்டையை போட்டுக் கொள்ளலாமே.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’