சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் வருடாந்த மாநாடு நேற்று முன் தினம் சனிக்கிழமை வட மேற்கு லண்டன் ஹரோவில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
‘உலகமயமாதலில் ஊடகங்களும், தமிழ் மக்களின் பிரச்சினையும்’ என்ற கருப்பொருளுடன் காலை 10:00 மணி முதல் மாலைவரை நடைபெற்ற இந்த மாநாட்டில் தமிழ், சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்கள் இலங்கை, இந்தியா, கனடா, ஜேர்மனி, நோர்வே, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர்.
இலங்கையிலும், அனைத்துலகிலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான அக வணக்கத்துடன் ஆரம்பித்த நிகழ்வில், மங்கள விளக்கை செல்வராஜா மற்றும் சேகர் ஆகியோர் ஏற்றிவைக்க தொடர்ந்து சர்வதேச தமிழ்ச் செயதியாளர் ஒன்றியத்தின் இயக்குனர் கோபி இரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் மாநாட்டுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. ருத்ரகுமாரன் அனுப்பிய வாழ்த்துச் செய்தியை செல்வராஜா அவை முன்னிலையில் வாசித்தார்.
இதனைத் தொடர்ந்து கலாநிதி சுதாகரன் நடராஜா தலைமையில் நடைபெற்ற காலை அமர்வில், வீரகேசரி வார இதழின் தலைமை ஆசிரியர் வி.தேவராஜா, 'தமிழரின் தேசியப் பிரச்சினையும், ஊடக சவாலும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.
இவரையடுத்து சிங்கள ஊடகவியலாளர் றோஹித்த பாசன அபேயவர்த்தன மாநாட்டில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாத நிலையில், ஸ்கைப் வாயிலாக தமிழ் மக்களும், தமிழ் மற்றும் சிங்கள ஊடகங்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகள், தமிழ் மக்கள் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும் போன்ற விடயங்களை உள்ளடக்கி உரையாற்றி இருந்தார்.
அத்துடன், தமிழ் ஊடகங்கள் போரில் நடந்ததை மட்டும் மக்கள் மத்தியில் கொண்டு செல்வதுடன் நின்றுவிடாது, போரின் சாட்சியங்களை வெளிக்கொண்டு வருவதிலும் பாடுபட வேண்டும் எனக் கூறினார்.
இலங்கைத்தமிழர் மீது இந்திய ஊடகங்கள் கவனம்
டைம்ஸ் ஒஃப் இந்தியா ஆங்கிலப் பத்திரிகையின் தலைமைச் செய்தி ஆசிரியர்களில் ஒருவரான அமிரித்லால் உரையாற்றும்போது, இந்திய ஊடகங்கள் எவ்வாறு ஈழத்தமிழ் மக்களின் இனப் பிரச்சினையைப் பார்க்கின்றன எனவும், தமிழ் மக்களின் பிரச்சினையைத் தமிழ் மக்களின் பிரச்சினையாகப் பார்க்காது, விடுதலைப் புலிகளின் பிரச்சினையாக மட்டுமே பார்க்கப்பட்டது எனவும், தமிழ் மக்களின் புனர்வாழ்வு பற்றிப் பேசுபவர்கள் மனித உரிமை விடயங்கள் பற்றிப் பேசாது மௌனித்து இருப்பதனையும் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் போருக்குப் பின்னரான ஊடக சுதந்திரம் பற்றி உரையாற்றிய பிரான்சை தலைமையகமாகக் கொண்ட எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பின் பிரித்தானியக் கிளையின் இயக்குனர் ஹெதர் பிளேக், தொடரும் ஊடகத் தடை பற்றி விளக்கிய அதேவேளை, அது தொடரபில், ஏழு முக்கிய விடயங்களைத் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.
காலை அமர்வில் இறுதியாக உரையாற்றிய பி.பி.சி தமிழோசையில் முன்னர் பணியாற்றிய ஊடகவியலாளர் ரமேஸ் கோபாலகிருஷ்ணன், ஈழப்போராட்ட அமைப்புக்கள் இந்தியாவில் இயங்கியபோது, அதன் தலைவர்களைச் சந்தித்தது முதல் தற்பொழுது வரையுள்ள நிலமைகளை விளக்கியனார்.
தமிழர்களுக்கு தற்பொழுது உலகின் எந்த நாடும் நண்பனாக இல்லை எனவும், நாடுகளின் அரசுகள் மத்தியில் நட்பை ஏற்படுத்த தமிழ் மக்கள் பாடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
புலம்பெயர் தமிழ் அமைப்புகள், அரசியலுக்கு அப்பால், இந்திய குடிசார் சமூகத்துடனான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கேள்வி பதிலுடன் காலை அமர்வு நிறைவு பெற்றது.
சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் துணைத் தலைவர் தினேஸ் குமார் தலைமையில் நடைபெற்ற மாலை அமர்வின் ஆரம்பத்தில் இந்த அமைப்பின் இணைச் செயலாளர் யோகரட்ணம், மற்றும் செயலாளர் குகன் தம்பிப்பிள்ளை ஆகியோரின் ஒன்றியம் பற்றிய அறிவிப்பு மற்றும் உரைகளைத் தொடர்ந்து நோர்வே உத்ரொப் பல்கலாசார சஞ்சிகையின் ஆசிரியர் மயூரன் விவேகானந்தன் உரையாற்றினார்.
இதனையடுத்து, கனடா வின்சர் பல்கலைக்கழகத்தின் கலாநிதி சேரன், ஜனநாயகம், தொழில்நுட்பம், மாற்றுவழி ஊடகம் பற்றியும்,
தமிழ் கார்டியன் பத்திரிகையின் ஆசிரியர் வினோ கணபதிப்பிள்ளை தகவல் தொழில்நுட்பம் தொடர்பாகவும்,
தமிழ்நாடு குங்குமம் இதழின் ஆசியர் பீடத்தைச் சேர்ந்த தோமஸ் அருள் எழிலன் தமிழர் இனப்பிரச்சினையும், ஊடக நிலை என்ற தலைப்பிலும், வேல்ஸ் ஸ்வான்சீ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சேந்தன் செல்வராஜா புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் அரசியல் பலம் பற்றியும் உரையாற்றினர்.
தமிழர் தாமே முடிவெடுக்க வேண்டும்
அருள் எழிலன் தமதுரையில், தமது அரசியல் உரிமைப் போராட்ட விடயத்தில், ஈழத்தமிழர்கள் தாங்களே முடிவுகளை எடுக்கவேண்டும், இந்தியாவையோ வெறெந்த சக்திகளை தமக்காக முடிவெடுக்க அனுமதிக்கக்கூடாது என்பதனை வலியுறுத்தினார்.
இதனையடுத்து சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தின் தலைவர் ஆனந்தி சூரியப்பிரகாசம் நன்றியுரை வழங்கியதுடன், மீண்டும் கேள்வி, பதில்களுடன் இந்த ஆண்டிற்கான மாநாடு நிறைவு பெற்றது.
லண்டனைத் தலைமையகமாகக் கொண்டு 2006ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச தமிழ் செயதியாளர் ஒன்றியத்தில் 50இற்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் அங்கத்தவர்களாக இருப்பதுடன், இதேபோன்ற மாநாடுகள் ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஏற்கனவே நடைபெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’