மத்திய அமைச்சர் முக அழகிரியின் ரவுடித்தனத்தால் மதுரை நகரம் தூக்கம் இழந்து தவிக்கிறது என்று கடுமையாக சாடினார் ஜெயலலிதா
.திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில், அதன் பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் பெரும் கண்டனக் கூட்டம் இன்று மதுரையில் நடந்தது.
இந்தக் கூட்டத்துக்கு பெரும் அளவிலான அதிமுகவினர் பங்கேற்றனர். பிற்பகல் 3 மணிக்குத் துவங்கியது கண்டனப் பேரணி மாலை 5 மணி வரை நடந்தது. பின்னர் பாண்டிகோவில் அருகே மஸ்தான்பட்டியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார் ஜெயலலிதா.
அங்கு பேசிய ஜெயலலிதா, மத்திய அமைச்சர் முக அழகிரி குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார் ஜெயலலிதா.
அவர் கூறுகையில், "மிரட்டல் கடிதங்கள் அனுப்பினால் பொதுமக்கள் வரமாட்டார்கள் என்று கணக்கு போட்ட அழகிரி, கடந்த சில நாட்களாக வேறு வேறு பெயர்களில் அந்த வேலையைச் செய்து வந்தார். இங்கு கூடியிருக்கும் கூட்டம் அழகிரியின் கணக்கை தவிடு பொடியாக்கிவிட்டது.
மதுரையை தூங்கா நகரம் என்பார்கள். மதுரை மக்கள் இரவு பகல் பாராமல் உழைக்கக் கூடிய மக்கள் நீங்கள் என்பதால் அப்படி சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ, அழகிரியின் கொடுமையால் இந்த நகரம் தூங்க முடியாமல் தவிக்கிறது.
மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா? இப்படிப்பட்டவர் விடுக்கும் மிரட்டல்களுக்கு நான் அஞ்சவில்லை.
அஞ்சா நெஞ்சன்! யார் கொடுத்தது இந்த பட்டம். இப்படிப்பட்ட பட்டத்தை யார் கொடுத்திருப்பார் என்று உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன். இப்படிப்பட்டவர் மிரட்டல்களூக்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். யார் அஞ்சுகிறார்கள், யார் அஞ்சவில்லை என்பது உங்களுக்கே தெரியும்.
உண்மையான அஞ்சா நெஞ்சம் யாருக்கு இருக்கிறது என்பது உங்களூக்கே புரியும்.
ஆட்சி இல்லாவிட்டாலும் நாங்கள் அஞ்சாத சிங்கங்கள். மரணம் ஒருமுறைதான் வரும். அது உங்களுக்காக வரும் என்றால் சந்தோசமாக ஏற்கிறேன்.அதனால்தான் துணிச்சலாய் வந்திருக்கிறேன்.
மதுரை மக்களுக்காகப் பாடுபட்ட மார்க்சிஸ்ட் தோழர் லீலாவதியை கொன்றது திமுகவினர்தான்.
அனைவராலும் மதிக்கக்கூடிய மென்மையான திமுக தலைவர் தா.கிருட்டினன். அவர் திமுக ரவுடிகளால் கொடூரமாக கொல்லப்பட்டார். அவரின் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இந்த வழக்கை விசாரிக்கக்கூடாது என்று அழகிரி மிரட்டி வருகிறார். இந்த வழக்கு சம்பந்தமாக ஜெயா டிவியில் பேட்டி ஒளிபரப்பினால் ஜெயா டிவி அலுவலகத்தை தரை மட்டமாக்குவோம் என்கிறார்.
அஞ்சா நெஞ்சன் ஏன் அஞ்சுகிறார். எதிர்கொள்கிற துணிச்சல் ஏன் இல்லை. இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்கிற பட்டப்பெயர் வேறு.
இந்த அஞ்சா நெஞ்சன் மதுரையைத் தாண்டி டெல்லிக்குப் போனால் அஞ்சி நடுங்குகிறார். பத்திரிக்கையாளர்களின் பேட்டி அஞ்சி ஓடுகிறார் இந்த அஞ்சா நெஞ்சன். நாடாளுமன்ற கூட்டம் என்றாலே ஓடி ஒளிந்துகொள்கிறார் இந்த அஞ்சா நெஞ்சன்.
அமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு வரியைத்தான் இவர் பேசியிருக்கிறார். இவருக்கு அஞ்சா நெஞ்சன் என்ற பட்டம் வேறு..." என்றார்
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’