ஜெயலலிதா மதுரைக்கு வந்தால் அவரை தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தி படுகொலை செய்வோம் என்று தற்போது தொலைபேசி மூலம் மிரட்டல் விடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரைக்கு வரக் கூடாது என்று கூறி அடுத்தடுத்து 11 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இதுவரை இந்த மிரட்டலை விடுத்தது யார் என்பதை போலீஸாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. ரொம்ப திணறிக் கொண்டிருக்கிறார்கள். எங்கிருந்து கடிதம் வந்தது என்பதை போலீஸார் கண்டுபிடிக்கவே முடியவில்லையாம்.
இதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழகஅரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்குப் பின்னரும் கூட 2 மிரட்டல் கடிதங்கள் வந்து விட்டன.
இந்த நிலையில் போலீஸாருக்கு பகிரங்க சவால் விடும் வகையில் தொலைபேசி மூலம் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
சென்னை கிண்டி ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. நிலையத்துக்கு நேற்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் கூறியதாக ஜெயா டிவி அலுவலகம் சார்பில் கிண்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில்,
கர்னல் என்று தன்னைக் கூறிக்கொண்ட ஒருவர், ஜெயா டி.வி. அலுவலகம் விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, அது தற்கொலைப்படை மூலம் தகர்க்கப்படும். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா மதுரை சென்றால் அவருக்கும் அதே கதிதான் ஏற்படும் என்று மிரட்டினார் என்று கூறப்பட்டுள்ளது.
அவரது பேச்சு ஜெயா டி.வி. அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. ஏற்கனவே நேற்று அதிகாலை 4.45 மணி, 4.50 மணிக்கு தொலைபேசியில் ஜெயா டி.வி. அலுவலகத்துடன் தொடர்பு கொண்ட அவரது பேச்சை டி.வி. ஊழியர்கள் துண்டித்தனர். மீண்டும் 5 மணிக்கு அதே குரல் கேட்டதும் பேச்சை பதிவு செய்தனர். சம்பந்தப்பட்ட நபர் இலங்கைத் தமிழர்கள் போல பேசியதாக கூறப்படுகிறது.
கிண்டி போலீசாரிடம் புகார் மனுவுடன் டெலிபோனில் மிரட்டிய மர்ம மனிதன் குரல் பதிவு செய்யப்பட்ட கேசட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், சி.ஐ.டி. பிரிவு துணை ஆணையர் ஆகியோருக்கும் புகார் மனு கொடுப்பட்டுள்ளது.
மிரட்டல் குரலைப் பதிவு செய்தும், அது வந்த எண்ணைக் குறிப்பிட்டும் போலீஸாரிடம் அதிமுக தரப்பு தற்போது புகார் கொடுத்துள்ளது. இதையாவது தமிழக போலீஸார் தீவிரமாக விசாரித்து துப்பு துலக்குவார்களா, இந்தக் குழப்பத்திற்கு முடிவு கட்டுவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’