மட்டக்களப்பு மாவட்டத்தில் இலஞ்சம் பெறும் பொலிஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ள மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன இலஞ்சம் கொடுப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
களுவாஞ்சிகுடி ஆட்டோ உரிமையாளர் சங்கத்தினை நேற்று ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் சந்தித்துப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினர்.
இந்நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதி பொலிஸ் அத்தியட்சர் டி.விஜயபால, களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பி.ஆர் மானவடு, மேட்டார் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.பெரேரா மற்றும் களுவாஞ்சிகுடி ஆட்டோ சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன, ஆட்டோ உரிமையாளர்கள் சிங்களம் படிக்கவேண்டும் அதுபோல் நாங்கள் தமிழ் படிக்கவேண்டும் நீங்களும் நாங்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அன்னியோன்னியமாக பழகவேண்டும் பொலிஸார்கள்தான் பெரியவர்கள் என நினைக்கக் கூடாது .
நேற்று சனிக்கிழமை காத்தான்குடியில் கஞ்சா கடத்திய பெண் ஒருவரை கைது செய்தோம் அதற்கு எங்களது பொலிஸார் ஒருவர்தான் உதவிவந்துள்ளார்.
அவர் தொழில் செய்ய உதவியதற்காக மாதம் 10ஆயிரம் ரூபாவை அந்தபெண் பொலிஸாருக்கு வழங்கிவந்துள்ளார். அதனால் மாதம் ஒரு இலட்சம் ரூபாவை அந்த பெண் கஞ்சா விற்பனை மூலம் வருமானமாக பெற்றுவந்துள்ளார்.
இருவரையும் கைது செய்துள்ளோம் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களையிட்டு நான் கவலையடைகின்றேன். நீங்கள் ஒருசதம் கூட பொலிஸாருக்கு கொடுக்க வேண்டாம் அவ்வாறு கொடுத்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.
நான் பொலிஸ்மா அதிபருடன் கதைத்து களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு ஒரு போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரியை நியமித்துள்ளேன்.
அவர் நன்கு கற்றறிந்தவர் அவர் இவ்வாறான கெட்ட செயலில் ஈடுபட்டால் அவருக்கு எதிராக உரிய நடவடிககை எடுப்போம். இன்று ஒரு பயணப்பையுடன் கடமைக்கு வரும் இப்பொலிஸ் அதிகாரிகள் இங்கிருந்து செல்லும்போது லொறியில் சாமான்கள் ஏற்றிச் செல்லக் கூடாது அதற்கு மக்கள் இடமளிக்கக்கூடாது.
தீய செயல்களில் ஈடுபடும் பொலிஸார் யாராவது இருந்தால் எம்மிடம் கூறுங்கள் அவருக்கு எதிராக நாங்கள் உடன் நடவடிக்கை எடுப்போம். சமாதானக்காற்றைச் சுவாசிக்கும் இப்போது நீதியாக உழையுங்கள் சமாதானமாக இருங்கள் உங்கள் உறவுகளை குடும்பத்தினரையும் முறையாக கவனியுங்கள்.
இலங்கையிலேயே சுமார் நான்கு இலட்சம் ஆட்டோக்களும், அவற்றுள் கொழும்பில் 22 ஆயிரத்திற்கு மேலும் களுவாஞ்சிகுடிப் பிரதேசத்தில் 500 இற்கு மேற்பட்ட ஆட்டோக்களும் உள்ளதாக தெரியவருகின்றது.
நீங்கள் அக்களுக்கு ஓர் பாரிய சேவையை ஆற்றுகின்றீர்கள் மக்களின் இன்ப துன்ப நிகழ்வுகளுக்கு பெரிதும் உதவுகின்றீர்கள் கடந்த 2008 ஆம் ஆண்டின் பின் பல்வேறு விதங்களில் தற்கொலை செய்பவர்களின் வீதம் குறைந்துள்ளது இவற்றுக்குக் காரணம் அந்த அவசர வேளைகளில் ஆட்டோக்காரர்கள் உதவியதனால்தான்.
போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடித்து விபத்துக்களிலிருந்து தவிர்த்து செயற்பட வேண்டியது ஆட்டோ உரிமையாளர்களினது பெரிய பொறுப்பாகும். நேற்று மட்டும் மட்டக்களப்பில் மாலை 7.00 மணிமுதல் 9.00 மணிவரையில் 170 போக்குவரத்து சம்பந்தமான சம்பவங்கள் மட்டக்களப்பு பிரதேசத்தில் பதிவாகின.
நாம் மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் ஆட்டோ சங்கம் ஒன்றினை ஸ்தாபிக்கவுள்ளோம். அதுபோல் வீதி நடைமுறைகளை ஒழுங்காக பின்பற்றிய ஆட்டோ சாரதி ஒருவரை தெரிவு செய்து கௌரவிக்கவுள்ளோம்.
அதுபோல் அடிக்கடி வீதி நடைமுறைகளில் தவறுகள் விடும் சாரதி ஒருவரையும் தெரிவு செய்து அவருக்கு வழங்கப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பாக மற்றவர்களுக்கு விளக்கும் முகமாக அவ்வாறான ஒருவரைத் தெரிவு செய்து அவரை ஆலோசகராக ஒருவரையும் நியமிக்க தீர்மானித்துள்ளோம் என கூறினார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’