எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள தேர்தல் முறையைப் பொறுத்தே இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி எவ்வாறு தேர்தலில் போட்டியிடுவது என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படுமென்று இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நுவரெலியா பணிமனையில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தின் போது எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ள பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எஸ்.சதாசிவம் தொடர்ந்து பேசுகையில்:
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலானது வட்டார முறையிலா தொகுதி முறையிலா விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலா என்பது குறித்து அரசாங்கம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த அறிவித்தல் வெளியாகிய பிறகே இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தனித்து போட்டியிடுவதா அல்லது ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிடுவதா என்பது குறித்துத் தீர்க்கமான முடிவினை எடுக்கும்.
மக்களுக்கு நேரடியாக சேவையாற்றுவதற்கான சந்தர்ப்பம் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களுக்கே அதிகமாகவுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டே எமது சமூகத்தின் சார்பான உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஆகவே இந்தத் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்கள் முனைப்புடன் மக்கள் தொடர்பில் ஈடுபட்டு தம்மைத் தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் இன்று நாட்டுக்குத் தேயிலைத் தொழிற் துறையின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கின்ற போதும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாத நிலைமையே காணப்படுகின்றது. இந்தத் தோட்டத் தொழிலாளர்களால் வருடாந்தம் கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளைக்கூட தமது உழைப்பு வருமானத்தினால் கொண்டாட முடியாத நிலைமையிலுள்ளனர். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக இம்முறை 6 ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு தோட்டக் கம்பணிகள் முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’