நாட்டில் நிலவிய பொருளாதார பின்னடைவு அன்றைய அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு செல்வதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அந்த உடன்படிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் அதற்கு செல்லவேண்டியேற்பட்டது. அக்காலப்பகுதியில் நாட்டின் பொரு ளாதார வளர்ச்சி மறைப் பெறுமானத்தில் இருந்தது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
போர் நிறுத்த உடன்படிக்கை வரைபின்போது பல்வேறு விடயங்களில் கவனம் செலுத்தியிருக்கலாம். பல்வேறு சிக்கல்களை தரக்கூடிய சில விடயங்கள் அதில் காணப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் அமைந்துள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தில் நேற்று நடைபெற்ற கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணை அமர்வில் கலந்துகொண்டு சாட்சியமளிக்கையிலேயே ஒஸ்டின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கற்றுக்கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சி.ஆர்.டி. சில்வா தலைமையில் பிற்பகல் 2.00 க்கு அமர்வு ஆரம்பமாகியது. ஆணைக்குழுவின் தலைவருடன் ஏனைய ஆறு உறுப்பினர்களும் அமர்வில் கலந்துகொண்டனர்.
ஒஸ்டின் பெர்னாண்டோ அங்கு மேலும் கூறியதாவது:
"வெற்றி மற்றும் தோல்வி என்ற இரண்டு விடயங்களை கருத்திற்கொண்டே நாம் போர் நிறுத்த உடன்படிக்கையை ஆராயவேண்டும். அவ்வாறான கண்ணோட்டத்தில் நாம் நோக்கவேண்டும். முக்கியமாக போர் நிறுத்த உடன்படிக்கையின் பல விதைப்புரைகள் சிக்கலுக்குள்ளவையாக இருந்தன.
மனித நேய விவகாரங்கள் மற்றும் இராணுவ ரீதியான விடயங்கள் என்பவற்றிலும் சிக்கல்கள் காணப்பட்டன. மேலும் நாட்டின் முஸ்லிம் மக்கள் தொடர்பில் உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் எந்த விடயமும் முறையாக இடம்பெறவில்லை. அவர்கள் இரண்டாம் மட்டத்திலேயே கணிக்கப்பட்டனர். இந்த விடயம் ஒரு பிரச்சினையாக காணப்பட்டது.
மிகப்பெரிய பிரச்சினையாக நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி ஒரு கட்சியிடமும் அரசாங்கத்தின் தலைமைத்துவம் மற்றுமொரு கட்சியிடமும் காணப்பட்டது. இந்த விடயமானது போர் நிறுத்த உடன்படிக்கைக்கு பாரிய பிரச்சினையாகவும் சிக்கலாகவும் அமைந்தது. எனவே இவ்வாறான நிலைமைகள் வரும்போது செயற்படுவது தொடர்பில் ஏற்பாடுகள் எமது நாட்டின் அரசியலமைப்புக்கு கொண்டுவரப்படவேண்டும்.
முக்கிய காரணியாக இரண்டு தரப்பினர் மத்தியிலும் அதிக சந்தேகம் காணப்பட்டது. புலிகள் தொடர்பில் இராணுவத்தினர் மத்தியிலும் இராணுவத்தினர் தொடர்பில் புலிகள் மத்தியிலும் கடும் சந்தேகம் நிலவியது. இந்த விடயமும் பாரிய பிரச்சினையாகவிருந்தது. அப்போது மேஜர் ஜெனரலாக பதவி வகித்த சரத் பொன்சேகா இது குறித்து பல தடவைகள் என்னுடன் கலந்துரையாடியுள்ளார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
மேலும் எதிர்க்கட்சிகள் கடுமையாக போர் நிறுத்த உடன்படிக்கையை விமர்சித்தன. அது தீவிரமான எதிர்ப்பாகவும் இருந்தது. ஊடகங்களும் விமர்சனங்களை முன்வைத்தன. அதாவது சமாதானம் என்ற எண்ணக்கருவை அரசியல் நிகழ்ச்சி நிரல் தாண்டி சென்றது என்று கூறலாம்.
நாட்டில் அப்போது நிலவிய பொருளாதார பின்னடைவு அன்றைய அரசாங்கம் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு செல்வதற்கான முக்கிய காரணமாகும். உடன்படிக்கையில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் அதற்கு செல்லவேண்டியேற்பட்டது.
கருணா அம்மான் எனப்படுபவர் புலிகளிடம் இருந்து பிரிந்தமைக்கு ஐக்கிய தேசிய கட்சியே காரணம் என்று அந்தக் கட்சியின் சில எம்.பி. க்கள் கூறிவருகின்றனர். ஆனால் அவ்விடயம் தொடர்பில் வித்தியாசமான பார்வையே என்னிடம் உள்ளது. அதாவது கருணா அம்மான் ஏன் புலிகளிடமிருந்து பிரிந்து வந்தார் என்ற உண்மையான காரணம் அவருக்கே தெரியும்.
போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நட்ட ஈடுகளை வழங்கவேண்டும். வடக்கு கிழக்கு என்று இல்லை நாட்டின் எப்பகுதியாக இருப்பினும் நட்ட ஈடு வழங்கப்படவேண்டும்.
அதியுயர் பாதுகாப்பு விடயங்கள் என்று வரும்போது அதில் ஆராய்வதற்கு பல விடயங்கள் உள்ளன. அதாவது சில அம்சங்கள் குறித்து ஆராய முடியும். பலாலி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை அகற்ற முடியாது. அவை அங்கு கட்டாயம் தேவை.
ஒரு கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்களின் எண்ணிக்கையை குறைக்கலாமா என்று நாங்கள் ஆராய்ந்தோம். ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது. நிர்வாகம் மாறிவிட்டது. அனைத்து விடயங்களிலும் மாற்றங்கள் உள்ளன. எனவே தற்போதைய நிலைமை குறித்து கூற முடியாது.
இடம்பெயர்ந்த மக்களை விரைவில் மீள்குடியேற்றுவது என்பது இலகுவான விடயமல்ல. அவற்றை மேற்கொள்ள காலம் எடுக்கலாம். மேலும் அனைத்து மக்களினம் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படவேண்டும். இந்த விடயத்தில் தேசிய ஒற்றுமை நல்லிணக்கம் என்பன மிகவும் முகிகயத்துவம் வாய்ந்ததாகும்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’