நல்லூர் கந்தசுவாமி கோயில் உற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் அவரது அலுவலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தென்னிலங்கையிலிருந்து அதிக பக்தர்கள் இங்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் இவர்களுக்கான அடிப்படை வசதிகளான குடிநீர் மலசலகூடம் போன்றவற்றை மேற்கொள்வதுடன் வீதித் தடையானது 24 மணிநேரமும் அமுலில் இருக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதைவிட வீதித் தடைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வீதித் தடையானது பருத்தித்துறை வீதி நல்லூர்குறுக்கு வீதி சந்தி (மாநகர சபை முன்னால்) செட்டித்தெரு செட்டிஒழுங்கை சந்தி பிராமணக் கட்டுக்குளம் (யு.என்.எச்.சி.ஆர் அலுவலகம் அப்பால்) அரசடி வீதிச் சந்தி சங்கிலியன் வீதி கோவில் வீதிச்சந்தி போன்றவற்றில் ஏற்படுத்தப்படும். உள்வீதித் தடையானது மாநகரசபை அலுவலகத்திற்கு அருகாமையிலுள்ள புதிய இணைப்பு வீதி (சங்கிலியன் வீதியை இணைத்தல்) ஆலயத்திற்கண்மையில் துர்க்கா மணிமண்ட பத்திற்கு முன்னால் உள்ளவீதி, செட்டித்தெரு பருத்தித்துறை வீதிச்சந்தி நல்லை ஆதீனத்திற்கு முன்வீதி பின்புற வீதி யு.என். எச்.சி.ஆர் (கோவில்வீதி முன்பாக) ஆகிய இடங்களில் ஏற்படுத்தப்படும்.
பிரதான வீதிகளின் தடையில் இரண்டு பொலிசார் வீதம் வீதித்தடைகளில் காவலில் ஈடுபடுவர். பிரதான வீதித்தடைக்கு மாநகரசபை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொறுப்பாக இருப்பர். இதேவேளை இக் கலந்துரையாடலில் யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா உரையாற்றுகையில் நல்லூர்கந்தன் ஆலய திருவிழாவின் போது விசேடமாக தமிழர் கலாசாரத்தை பேணுதல் வேண்டும். குறிப்பாக பெண்கள் பாவாடை தாவணி அணிந்தும் நீளச் சட்டை அணிந்தும் வருதல் நன்று. பாதணிகளைக் கோவில் வளாகத்தில் பாவிக்கக் கூடாது. இம்முறை அங்கப் பிரதட்சணம் செய்வோரின் நலன் கருதி 100 கீப் மணல் உள் வீதியைச் சுற்றி போடப்படும்.
மக்கள் சேவை சங்கம் பிரதான வீதித் தடைக்கு பொறுப்பெடுக்கும் என்றும் ஒவ்வொரு நாளும் திருவிழா நடைபெற்று முடிந்தவுடன் அன்றைய நாளில் இடம்பெற்ற களவுகள் அசம்பாவிதங்கள் தொடர்பாக மாநகர சபை உத்தியோகத்தர் தலைமையில் ஆராயப்படும் என்றும் கோவிலைச் சுற்றி அயலில் உள்ளவர்களுக்கு தற்போது வீடு வீடாகச் சென்று பாஸ் வழங்கப்படுவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’