இன்றும் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். அதனை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ரணிலை விரட்ட வேண்டுமென்ற அடிப்படையில் ஒருபோதும் நாம் செயற்படவில்லை என அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பதவியைத் தட்டிப்பறிக்கும் எண்ணம் தன்னிடம் துளியளவும் கிடையாதெனவும் ரணிலின் தலைமைத்துவத்தை நூறு வீதம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை கட்சிக்குள் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடனேயே மேற்கொள்ளப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் 6 பேர் கொண்ட மறுசீரமைப்புக் குழுவின் சிபாரிசு அறிக்கை கட்சித் தலைமைத்துவத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதில் பல்வேறுபட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
அந்த சிபாரிசு அறிக்கை எதிர்வரும் 19 ஆம் திகதி கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவிருக்கின்றது. மேற்கொண்டு திருத்தங்கள் குறித்தும் செயற்குழு கவனத்தில் எடுக்கவுள்ளது.
ஊடகங்களின் தப்பபிப்பிராயம்
தனிப்பட்ட ரீதியில் தலைவரை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணமெதுவும் எம்மிடம் கிடையாது. அண்மைக் காலமாக ஊடகங்களில் தப்பபிப்பிராயங்களே வெளியாகி வந்தன.
தலைவர் பதவிக்கு மாத்திரம் இரகசிய வாக்கெடுப்பு நடத்தும் எண்ணம் கிடையாது. பிரதான பதவிகள் ஐந்துக்கும் ஜனநாயக அடிப்படையில் தெரிவுகள் இடம்பெற வேண்டுமென்பதே பெரும்பாலானோரின் நிலைப்பாடாகும்.
இன்றும் எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். அதனை நாம் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளோம். ரணிலை விரட்ட வேண்டுமென்ற அடிப்படையில் ஒருபோதும் நாம் செயற்படவில்லை. அவரின் தலைமைத்துவத்தை நான் நூறுவீதம் ஏற்றுக்கொண்டிருக்கின்றேன்.
கட்சிக்கோ, தலைமைத்துவத்திற்கோ நான் ஒருபோதும் துரோகமிழைக்க முற்படவில்லை. எப்போதும் நான் கூட்டுப்பொறுப்புடனேயே செயற்பட்டு வருகின்றேன்.
எனது கருத்துகள் சில ஊடகங்களில் திரிபுபடுத்தியும் தவறான முறையிலும் வெளியிடப்பட்டதன் காரணமாக மக்கள் மத்தியில் தப்பெண்ணங்கள் உருவாகக் காரணமானது. தலைமைத்துவத்துக்கு எதிராக நாம் எந்தவிதமான சதிகளிலும் ஈடுபடவில்லை" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’