நடிகை என்ற வகையில், திரைப்படத்தை எடுப்பவர்களின் முடிவுகளை மீற முடியாது. இந்நிலையில் படப்பிடிப்புக்காக இலங்கை வந்துள்ள எனக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் நியாயமில்லை என்று இந்திய நடிகை அசின் தெரிவித்துள்ளார். இதேவேளை, தான் வெறும் நடிகை என்றும் அரசியல்வாதி அல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ள அசின், சினிமாவையும் விளையாட்டையும் அரசியலாக்க வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்படத் துறையினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சர்வதேச இந்திய திரைப்பட விழாவை சமீபத்தில் இலங்கையில் நடத்திய போது தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்படவிழாவுக்கு நடிகர், நடிகைகள் எவரும் செல்லக்கூடாது என்றும் தடை விதித்தன. ஆனால் அதையும் மீறி சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் போன்றோர் இலங்கை வந்தனர். இதனையடுத்து சென்னை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருந்த ஹிருத்திக் ரோஷனின் “கைட்ஸ்” திரைப்படம் ரத்து செய்யப்பட்டது.இதேவேளை, சல்மான்கானுக்கு இலங்கையில் செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் அவர் நடித்துக்கொண்டிருக்கும் “ரெடி” படத்தின் படப்பிடிப்பை இலங்கையில் நடத்துமாறும் அழைப்பும் விடுக்கப்பட்டது. சல்மான்கானும் அதை ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மொரிசீயஸில் நடந்த “ரெடி” படத்தின் படப்பிடிப்பு இலங்கைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் சல்மான் ஜோடியாக அசின் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக இலங்கை செல்ல வேண்டாம் என்று அசினிடம் திரைத்துறையினர் வற்புறுத்திய நிலையில், அதனையும் மீறி அவர் இலங்கை வந்தடைந்தார்.
தென்னிந்திய திரைப்படத்துறை கூட்டமைப்பின் கட்டுப்பாட்டை மீறி அசின் இலங்கை வந்தமை கண்டிக்கத்தக்கது என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி அறிவித்துள்ளார். அசினுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி கூட்டமைப்புடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்போம் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை அசின், "நான் ஒரு நடிகை. படப்பிடிப்பு அமைவிடத்தை முடிவு செய்யும் அதிகாரம் எனக்கு கிடையாது. தயாரிப்பாளரும், இயக்குனரும்தான் அதை முடிவு செய்கிறார்கள். ஆனாலும் தற்போதைய நிலைமைகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னேன் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்.
அத்துடன், “ரெடி” படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமாகிவிட்டேன். எனவே படம் எடுப்பவர்களின் முடிவுகளை என்னால் மீற முடியாது. நான் வெறும் நடிகை. அரசியல்வாதி அல்ல. என்னை பிரச்சினைகளுக்குள் சிக்க வைப்பது சரியல்ல என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் இலங்கை வந்து ஆசிய கோப்பைக்கான போட்டியில் விளையாடினார்கள். இந்திய கடற்படத் தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா ஐந்து நாள் சுற்றுப்பயணமாக இலங்கை வந்திருக்கிறார். தினமும் சென்னையில் இருந்து ஆறு விமானங்கள் இலங்கை செல்கின்றன. அவற்றில் நூற்றுக்கணக்கான இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கை வருகிறார்கள்.
என்னை மட்டும் தவறாக விமர்சிப்பது ஏன்? நடிப்பு என்பது எனது பணி. அதை செய்வதற்காகவே இலங்கை வந்துள்ளேன். சினிமாவையும் விளையாட்டையும் அரசியலாக்க வேண்டாம் என்று கோரிக்கை விடுத்துள்ள அசின், இலங்கைத் தமிழர்கள் தன்னை சந்தித்ததாகவும் தனது நடிப்பை பாராட்டி உற்சாகப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’