வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 1 ஜூன், 2010

கொழும்பு பட விழாவில் பங்கேற்போருக்கு எதிராக போராட்டம் தொடரும் : சீமான்

கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட அகாடெமி (IIFA) விருதுகள் வழங்கும் விழாவில் பங்கேற்க விரும்புவோருக்கு எதிராக போராட்டம் தொடரும் என தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மனிதாபிமான அடிப்படையில், இலங்கையில் நடக்கும் இந்தியத் திரைப்பட விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்த ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், கமல்ஹாஸன், மணிரத்னம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நன்றி.
மலையாளம், தெலுங்கு, கன்னடத் திரையுலகைச் சேர்ந்த மம்முட்டி, மோகன்லால், திலீப், வெங்கடேஷ், நாகார்ஜுன், புனித் ராஜ்குமார் போன்ற கலைஞர்களும் இந்த விழாவைப் புறக்கணித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
இவர்களெல்லாம் சக மனிதனாக தமிழர் உணர்வுகளை மதித்துள்ளார்கள். அந்த உணர்வுக்கு நன்றி செலுத்துகிறோம்.
அதேபோல இந்த விஷயத்தில் மிகத் தெளிவான முடிவை எடுத்துள்ள தென்னிந்திய திரைப்படத்துறை, கொழும்பு விழாவில் பங்கேற்கும் நடிகர்களுக்கு தடையை அறிவித்துள்ளது. இது மிகுந்த ஆறுதலைத் தருகிறது. தென்னிந்திய திரைப்படக் கூட்டமைப்புக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
எமது தொப்புள்கொடி உறவுகளின் ரத்தத்தால் நனைந்த இலங்கையில், தமிழர் படுகொலையைக் கொண்டாடும் வகையில் இரக்கமற்று நடத்தப்படும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்திய நடிகர் - நடிகையர் யாரும் பங்கேற்க வேண்டாம். மேற்குறிப்பிட்டவர்களைத் தவிர, மனித உணர்வற்று இலங்கை விழாவுக்கு போக விரும்புபவர்களுக்கு எதிரான போராட்டம் தொடரும்.
ஞாயிற்றுக்கிழமை காலையில் கூட இந்தியத் திரைப்பட விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கைதாகியிருக்கிறார்கள். இவர்களும் மற்ற நடிகர்களைப் போல இலங்கை செல்லமாட்டோம் என்று அறிவிப்பார்கள் என்று நம்புகிறோம்.
இந்தியத் திரைப்பட விழாவில் ஒரு இந்திய நட்சத்திரம் கூட பங்கேற்கவில்லை என்ற நிலை உருவாக வேண்டும். இனப் படுகொலை செய்த ஒரு நாடு சர்வதேச அரங்கில் அம்பலப்படுத்தப்பட வேண்டும். போர்க் குற்றங்களுக்கு உரிய தண்டனையை ராஜபக்சே அரசு அனுபவித்தே தீர வேண்டும். அதற்கு திரைத்துறையினரின் இந்தப் புறக்கணிப்பு பெருமளவு உதவும் என்பதை மனதில் கொண்டு, தமிழ் இனத்தின் உரிமைக்கும் விடிவுக்கும் குரல் கொடுக்க முன்வருமாறு, கேட்டுக்கொள்கிறேன்," என்று சீமான் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’