வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 2 ஜூன், 2010

மருத்துவமனைக்காக வீட்டை தானமாக வழங்கினார் கருணாநிதி

மருத்துவமனையாக பயன்படுத்துவதற்காக, முதல்வர் கருணாநிதி தனது சென்னை - கோபாலபுரம் வீட்டை இன்று தானமாக வழங்கினார்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 'கலைஞர் காப்பீட்டு திட்டம்' தொடக்க விழா நடந்தபோது, கோபாலபுரம் வீட்டை மக்களுக்காக தானமாக வழங்க முதல்வர் கருணாநிதி விருப்பம் தெரிவித்திருந்தார்.

முதல்வர் கருணாநிதி நாளை (வியாழன்) தனது 87-வது பிறந்த தினத்தை கொண்டாடவுள்ளதையொட்டி கோபாலபுரம் வீட்டை முறைப்படி தானம் செய்ய தீர்மானித்தார். இதற்காக அவர், அன்னை அஞ்சுகம் அறக்கட்டளையை உருவாக்கினார்.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன், சி.கே.ரங்கநாதன், கவிஞர் வைரமுத்து, மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, எஸ்.ஜெகத்ரட்சகன் நியமனம் செய்யப்பட்டனர். அந்த அறக்கட்டளையிடம் கோபாலபுரம் வீட்டை ஒப்படைக்க இன்று பத்திரப்பதிவு செய்யப்பட்டது.

கோபாலபுரம் இல்லத்திலேயே பத்திரப்பதிவு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் கருணாநிதி காலை 9.45 மணிக்கு தானப்பத்திரத்தில் கையெழுத்திட்டார். இதன் மூலம் கோபாலபுரம் இல்லம் அதிகாரப்பூர்வமாக இன்று அன்னை அஞ்சுகம் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பத்திரப்பதிவு நிகழ்ச்சியில் தயாளு அம்மாள், துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, ஆ.ராசா, முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு, அமிர்தம், ஐகோர்ட் அட்கேட் ஜெனரல் ராமசாமி, வக்கீல்கள் சுதர்சனம், பழனியாண்டவன், பத்திரப் பதிவு உதவி இன்ஸ்பெக்டர் ஜெனரல் அரிகரன், ஆடிட்டர் சிவசுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அந்தப் பத்திரத்தின் விவரம்...

முதல்வர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தை 1955-ம் ஆண்டு சர்வேசுவர அய்யர் என்பவரிடம் இருந்து வாங்கினார். 1968-ம் ஆண்டு தன் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு ஆகிய 3 பேர் பெயரில் இந்த வீட்டை கருணாநிதி எழுதி வைத்தார்.

கடந்த ஆண்டு அவர் இந்த வீட்டை ஏழை- எளிய மக்கள் பயன்பெற மருத்துவமனையாக மாற்ற விரும்பினார். இதையடுத்து கடந்த ஆண்டு மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க.தமிழரசு மூவரும் இந்த வீட்டை மீண்டும் கருணாநிதியிடம் ஒப்படைத்தனர்.

தற்போது இன்று பத்திரப்பதிவு மூலம் இந்த வீடு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.

முதல்வர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு இந்த வீடு மருத்துவமனையாக மாறும். கலைஞர் கருணாநிதி மருத்துவமனை என்று அந்த மருத்துவமனை அழைக்கப்படும். அந்த மருத்துவமனையை அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கும் என்று அந்த பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

கருணாநிதி நெகிழ்ச்சி...

வீட்டை தானமாக வழங்கிய தருணம் குறித்து நெகிழ்ச்சியுடன் நிருபர்களிடம் கூறிய முதல்வர் கருணாநிதி, "நான் ஆஸ்திகனாக இருந்தால் ஆத்ம திருப்தி என்று சொல்லி இருப்பேன். நான் ஒரு நாத்திகன் என்பதால் மனநிறைவுடன் இருக்கிறேன்," என்றார்.

வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் மாற்றம் வருமா என்று கேட்டதற்கு, "மாற்றமும் இருக்காது, ஏமாற்றமும் இருக்காது," என்றார் கருணாநிதி.





0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’