வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அரசு செயலிழக்க செய்துள்ளது-ஜயலத் ஜயவர்த்தன

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் செயற்பாடுகளை அரசாங்கம் வேண்டுமென்றே செயலிழக்கச் செய்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் எமது நாட்டு மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் உத்தரவாதத்தை வழங்க முடியாத பயங்கரமான நிலை ஏற்பட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன எம்.பி. இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

1996 ஆம் ஆண்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விசேடமாக அரச நிறுவனங்களில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் உட்பட சிவில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இந்த ஆணைக்குழுவில் முறையிட முடிந்ததுடன் மக்களுக்கு நியாயமும் கிடைத்தது. யாழ்ப்பாணம், கண்டி, மட்டக்களப்பு உட்பட நாட்டின் பத்து நகரங்களில் இந்த ஆணைக்குழுவின் கிளைகள் இயங்கி வந்தன. ஒரு நாளைக்கு கொழும்பு உட்பட மற்றைய அலுவலகங்களுக்கு 500 முறைப்பாடுகள் கிடைத்து வந்தன.
மக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மீறப்படும்போது இந்த ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து நியாயத்தை பெற்றுக் கொள்ள வசதியிருந்தது. ஏனெனில் அனைத்து மக்களுக்கும் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாது. அதற்கு அதிகளவு பணம் தேவைப்படும். அவ்வாறானவர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை நாடினார்கள். இன்று அதனையும் அரசாங்கம் செயலிழக்கச் செய்து விட்டது.
இந்த ஆணைக்குழுவிற்கு தலைவரை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஆனால் இதுவரையில் எவரும் நியமிக்கப்படவில்லை. முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐந்து நீதிபதிகள் சேவை செய்தனர். ஆனால் அவர்களுக்குரிய வேதனங்கள் வழங்கப்படாததால் அவர்களும் வெளியேறி விட்டனர். இவ்வாறு திட்டம் போட்டு அரசாங்கம் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவை செயலிழக்கச் செய்து விட்டது. மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எமது மக்கள் எங்கு செல்வார்கள். நீதி நியாயத்தை பெற்றுக் கொள்ளக் கூடிய அனைத்து கதவுகளும் அரசாங்கத்தால் மூடப்படுகின்றன.
இதற்கெல்லாம் காரணம் 17 ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை அமைக்காததேயாகும். அரசு துறை, தேர்தல்கள், நீதித்துறை, சுயாதீன ஆணைக்குழுக்கள் எதுவும் அமைக்கப்படவில்லை. இன்று லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவும் செயலிழந்து போயுள்ளது. அரசியல்வாதிகளுக்கு எதிராக பெரும்பாலான முறைப்பாடுகள் இவ் ஆணைக்குழுவிற்கு கிடைத்திருந்தன.v இன்று அவை அனைத்தையும் குப்பை கூடைக்குள் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் எமது நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுமென்ற நம்பிக்கையை மக்கள் இழந்து விட்டனர் என்றார். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’