ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தனக்குமிடையில் இன்று மாலை அவசர கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சற்று நேரத்துக்கு முன் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
இருப்பினும், ஜனாதிபதியுடனான இந்த கலந்துரையாடலின் போது எந்த விடயம் குறித்து பேசப்படவுள்ளது என்று தனக்குத் தெரியாது என்றும் இந்த கலந்துரையாடலுக்கான அழைப்பு அவசரமாகவே தனக்கு கிடைக்கப்பெற்றதாகவும் அமைச்சர் கூறினார்.
இணையதளமொன்றை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வொன்றில் சற்றுமுன் கலந்துகொண்ட வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதியுடனான சந்திப்பு காரணமாக நிகழ்வின் ஆரம்பத்திலேயே புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதிக்கும் வெளிவிவகார அமைச்சருக்கும் இடையிலான இந்த அவசர சந்திப்பானது, இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதொன்றாகவே தெரிவிக்கப்படுகின்றது.
வரையறுக்கப்பட்ட கால எல்லைக்கு இலங்கைக்கான ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை தொடர்ந்து வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய பேரவைக்கு ஆலோசனை வழங்கத் தயாராகவிருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று தெரிவித்தது.
அத்துடன், இலங்கை அரசாங்கம் சில நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டால் மட்டுமே சலுகைத் திட்டத்தை நீடிப்பது தொடர்பில் கவனம் செலுத்த முடியும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’