வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 23 ஜூன், 2010

எம்.பி. என்ற வகையில் சரத் கென்யா செல்ல அனுமதிக்க வேண்டும் : விஜித்த ஹேரத்

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கென்யாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது :
"விடுதலைப் புலிகளின் தலைவர்களில் ஒருவரான கேபி உட்பட 21 பேர் அரச விமானம் ஊடாக பலாலி முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். பின்னர் அவர்கள் கிளிநொச்சிக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர் கொழும்புக்கு திரும்பியுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.
ஜெனரல் சரத் பொன்சேகா இந்த நாட்டிலுள்ள எந்தவொரு நீதிமன்றத்திலும் குற்றவாளி என இனங்காணப்படவில்லை. சாதாரண குடிமகன் ஒருவர் அனுபவிக்கும் அனைத்து சலுகைகளையும் அவரால் அனுபவிக்க முடியும். அத்துடன் அவர் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர். மக்களின் பிரதிநிதி என்பதால் சில சிறப்பு சலுகைகளும் அவருக்கு உண்டு.
சர்வதேச ரீதியாக நடைபெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்வதற்கான உரிமை அவருக்கு உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் கென்யாவில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ள அவருக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. இந்த உரிமையை வழங்காது அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்கின்றது.

கெஹேலிய ரம்புக்வெலவின் கருத்து இதனையே எடுத்துக்காட்டுகின்றது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சிக்கு விஜயம் செய்யும் பொதுமக்கள் ஏ9 வீதிக்கு உள்ளே இருக்கும் கிராமங்களுக்கும் சென்று உண்மை நிலவரத்தைப் பார்வையிட வேண்டும்.
ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஷி கிராமங்களில் அவலப்படும் மக்களைப் பார்வையிடவில்லை. அவர் அவர்களைப் பார்த்திருந்தால் உண்மையான செய்தி உலகத்துக்குச் சென்றிருக்கும் என்பதை அறிந்தே அரசாங்கம் நல்லதை மட்டும் காண்பித்து உலகத்துக்கு வேறு மாதிரியான செய்தியை தெரிவித்து வருகிறது.
அகதிகளின் எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை. தமது கணவர், பிள்ளைகள் கைதுசெய்யப்பட்டு எந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றே பலருக்குத் தெரியவில்லை.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பட்டியலை வெளியிடுமாறு பலதடவை நாடாளுமன்றத்தில் கோரியபோதிலும் அதனை செய்யாமல் அரசாங்கம் தட்டிக் கழிக்கின்றது. யுத்தம் நிறைவடைந்து 13 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இந்த பெயர்ப் பட்டியலை இலகுவாக வெளியிட முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’