தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை என்றார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.
கோவையில் 5 நாட்கள் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் இன்று தொடங்கி வைத்தார். அவர் தனது தொடக்கவுரையில் பேசியது:
"உலகெங்கிலும் இருந்தும், நமது நாட்டிலிருந்தும் பெருமளவில் அறிஞர்களும், கவிஞர்களும், கல்வியாளர்களும் பங்கேற்கும் முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் துவக்கி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். 2004-ம் ஆண்டில் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டது. இது இம்மொழியின் பழமைக்கும், வளத்திற்கும் கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்ல, உத்வேகமூட்டும் விஷயங்களை உள்ளடக்கிய சிறந்த கலாச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் இம்மொழியின் பங்குக்கு கிடைத்த அங்கீகாரமும் கூட.
தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து அறிவிக்கப்பட்டதிலும், இம்மாநாட்டை ஏற்பாடு செய்வதிலும், வழிகாட்டி நடத்திச் செல்லும் தமிழக முதல்வர் முகருணாநிதிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கவிஞர், பன்முகத்திறன் படைத்த எழுத்தாளர் மற்றும் ஆட்சி வல்லுநராகத் திகழும் முதல்வர் இம்மாநாட்டின் மையப்பாடலை தாமே எழுதியுள்ளார். முதல்வராக 19 வருடங்களும், தமிழகப் பேரவையின் உறுப்பினராக சுமார் 50 வருடங்களும் பணியாற்றி வரும் அயராத வாழ்வில் இலக்கியத்திலும் உன்னத இடத்தைப் பிடித்திருக்கும் அவரைப் பாராட்டுகிறேன்.
தமிழ்நாட்டுக்கு எனது இதயத்தில் சிறப்பான இடமுண்டு. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பிரச்சாரத்தை சென்னையில்தான் துவக்கினேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு, தில்லிக்கு வெளியே முதன்முதலாக தமிழ்நாட்டுக்குத்தான் சுற்றுப்பயணம் வந்தேன். இங்குள்ள இளைஞர் வளர்ச்சிக்கான ராஜீவ்காந்தி தேசிய நிறுவனத்தில் உரையாற்றினேன். ஆகையால், இந்த மாநிலத்துடனும், இங்குள்ள மக்களுடனும் தொடர்ந்து வரும் உறவின் ஒரு பகுதியாக இந்த மாநாட்டுக்கு வந்துள்ளேன்.
தமிழ் மக்கள், நமது நாட்டின் பன்முக கலாச்சாரத்தையும், உலகின் கலாச்சார வளத்தையும் பெருமளவு மேம்படுத்தியுள்ளனர். பன்மைத் தன்மை, சகிப்புத்தன்மை, மனிதநேய அணுகுமுறை ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள தமிழ் பண்புநலன்கள், பண்டைய காலம் முதல் தற்காலம் வரை நமது நாட்டின் முன்னேற்றத்தில் பல்வேறு வகையில் பங்காற்றியுள்ளன. கலை, இசை, கட்டிடத்திறன், இலக்கியம் ஆகியவற்றில் இந்தியாவை தனித்த அடையாளம் கொண்ட தேசமாக வடிவமைத்துள்ளதில் இவற்றுக்கு பங்குண்டு.
தமிழ்மொழி தனது உயிர்த் துடிப்பான தன்மையாலும், வளத்தாலும் இந்தியாவை பெருமைமிகு பன்மொழிச் சமூகமாக ஆக்கியுள்ளது.
தமது அறிவுத்திறன், கல்வியறிவு, பயிலும் திறன் ஆகியவற்றுக்காக மதிக்கப்படும் தமிழர்கள், துடிப்பாகவும், முன்னேற்றச் சிந்தனையுடனும் உள்ளனர். சில்க் ரூட் எனப்படும் பட்டு வழி கண்டறியப்படுவதற்கு பல காலம் முன்பே தமிழ் வணிகர்கள் இந்தியக் கடலோரத்திலிருந்து பாரசீக வளைகுடாவுக்கு பயணம் செய்துள்ளனர். கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய ஒன்றாம் நூற்றாண்டில் வணிக காற்றலைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியவர்கள் தமிழர்கள்தான். திரைகடலோடியும் திரவியம் தேடு என்ற தமிழ் கூற்றுக்கு ஏற்ப பொக்கிஷங்களைத் தேடி பெருங்கடல்களைக் கடந்தனர். வெற்றி பெற வேண்டும் என்ற தமிழர்களின் உணர்வுக்கு இது சான்று. இந்த உணர்வுடன், படைப்பாற்றலும் இணைந்து தமிழர்களை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றன. இது எங்கிருந்தாலும், எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அவர்களுக்கு தொடர்ந்து வெற்றிகளைக் கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன்.
தமிழர்களின் வரலாறு நமது தேசத்தின் பெருமை. இந்தியச் சமூகத்தின் ஊடாக உள்ள பல படிவங்களும், அரசியலுக்கு அடிப்படையாக உள்ள கருத்துக்களும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் காணப்பட்டன. எடுத்துக்காட்டாக, பிறரது சமயத்தை மதிக்க வேண்டும் என்ற குணநலம் நீண்டகாலமாக தமிழ் கலாச்சார பாரம்பரியத்தின் அங்கமாக உள்ளது. சைவ, வைணவ தத்துவங்களின் ஆதாரமாக தமிழகம் உள்ளது. சமணம், பௌத்தம், இசுலாம், கிறித்தவம் ஆகிய சமயங்கள் தொடர்பான கணிசமான படைப்புகள் இங்குள்ளன. சமுதாயத்தில் பல்வேறு சமய நம்பிக்கைகள் நிலவுவதற்கும், ஒன்றுக்கொன்று இணைந்து வளப்படுத்திக் கொள்வதற்கும் இது அருமையான சான்றாகும். அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும், பாரபட்சம் காட்டாத, சமத்துவமான ஓர் உலகம் தேவைப்படுகிறது.
சமூக பொருளாதார அரசியல் நீதியும், அனைவருக்கும் சம அந்தஸ்தும், வாய்ப்புகளும் அளிப்பதே நமது அரசியலமைப்பின் முதன்மை கூறாகும். வாக்குரிமையும், நமது ஜனநாயக கட்டமைப்பும் நாட்டின் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் அரசியலில் தமது கருத்தை தெரிவிப்பதற்கான உரிமையைத் தந்துள்ளன. அடிப்படை உரிமைகள் சமத்துவத்தை உறுதி செய்வதுடன், இனம், சாதி, சமய அடிப்படையிலான பாரபட்சத்தைத் தடுக்கின்றன. சமூக சீர்திருத்தத்திலும், சமுதாய பாகுபாடுக்கு எதிராகப் போராடுவதிலும், அனைத்து தரப்பு மக்களும் சம மரியாதையுடன் நடத்தப்பட உழைப்பதிலும் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது.
பொருளாதார ரீதியாக நமது நாடு முன்னேறி வருகையில், ஊரகப் பகுதிகள், ஏழை எளியோர், நலிந்தோர் என அனைத்துதரப்பு மக்களுக்கும் பலன்கள் சென்றடையக் கூடிய உள்ளடக்கிய வளர்ச்சியை நாம் கடைபிடிக்க வேண்டும். பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிக அதிகாரங்களை அளித்து பங்கேற்பினை அதிகரிப்பதற்கான வளர்ச்சி நடவடிக்கைகளை கூட்டியுள்ளோம். தமிழ்நாட்டில் கிராமப் பஞ்சாயத்துகள் பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியில் சுயசார்புடன் விளங்குவதற்கான ஆதாரங்கள் உள்ளன. இந்த கிராமப் பஞ்சாயத்துக்கள், உள்ளூர் தேவைகளுக்காக வரி வசூலிக்கும் அதிகாரத்துடன் தன்னாட்சி பெற்று விளங்குகின்றன. இவை சமூக வாழ்க்கை, கலாச்சாரத்தின் மையங்களாக உள்ளன. இந்த கிராமப்புற வளர்ச்சி மாதிரிதான் நமது கிராமங்களுக்கு முன்னேற்றத்தையும், வளத்தையும் அளிக்கும்.
சேர, சோழ, பாண்டிய பேரரசுகள் மக்கள் நலனுக்காகவும், கலை, கலாச்சார வளர்ச்சிக்காகவும் துடிப்பாகச் செயல்பட்டன. அவர்களது ஆட்சியில் தமிழ் கலாச்சாரம் கிழக்கிற்கும், மேற்கிற்கும் பரவியது.
பல்லவர்களின் கோவில் கட்டிடக் கலையும், சோழர்களின் வெண்கலச் சிற்பங்களும் சிறப்பானவை. பரதநாட்டியமும், கர்நாடக இசையும் இங்குதான் பிறந்தன. எல்லாவற்றையும்விட பரந்துபட்ட இலக்கிய வளம்தான் தமிழ் மொழியின் மிகச்சிறந்த பங்களிப்பு.
உலகின் மிகப்பழமையான, வாழும் மொழிகளில் தமிழும் ஒன்று. இது மிகச்சிறப்பான இலக்கிய, இலக்கண வளங்களைக் கொண்டது. மிகப்பழமையான நூலான தொல்காப்பியம் கிபி 200-ம் ஆண்டைச் சேர்ந்தது. பழந்தமிழ் படைப்புகளில் சில சங்ககாலத்தவை. சங்ககாலப் புலவர்கள், மண்பாண்டம் செய்வோர் விவசாயிகள் முதல் உயர்நிலையில் இருப்பவர் வரை பல தரப்பினர். பெண் புலவர்களும் இருந்தனர். இது தமிழ்ச் சமூகத்தின் சமத்துவத்தைக் காட்டுகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சங்கப்புலவர் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று மொத்த மனிதகுலத்தையும் அமைதியாலும், நல்லிணக்கத்தாலும் இணைத்துள்ளார்.
திருவள்ளுவரின் திருக்குறள் பண்புகளின் பெட்டகமாக விளங்குகிறது. தேசப்பிதா மகாத்மா காந்தி, வள்ளுவரின் திருக்குறளை அவரின் சொந்த மொழியில் படிப்பதற்காகவே தமிழ் கற்க விரும்புகிறேன், அது ஒரு அறிவுப் பெட்டகம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது. நமது நாட்டிலும். தென்னாப்பிரிக்காவிலும் காந்தியடிகளின் அஹிம்சை போராட்டத்தில் தமிழ்ச் சமூகம் கணிசமாக பங்கேற்றதை குறிப்பிட விரும்புகிறேன்.
சிலப்பதிகாரமும், மணிமேகலையும் உன்னத தமிழ் இலக்கியப் படைப்புகள். சீவக சிந்தாமணியும், கம்ப ராமாயணமும் அருங்காப்பியங்கள். நாயன்மார்கள், ஆழ்வார்களின் பாடல்கள் நெஞ்சை நெகிழ வைப்பவை. தமிழ் இலக்கியகர்த்தாக்கள் நமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் அரும்பங்காற்றியுள்ளனர். சுதந்திரப் போராட்ட காலத்தில், சுப்பிரமணிய பாரதியாரின் கவிதைகளும், பாடல்களும் இந்திய மக்களின் உள்ளங்களில் நாட்டுப்பற்று உணர்வுகளை ஊற்றெடுக்கச் செய்தன.
அடுத்த தலைமுறைத் தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், இலக்கியம், விழுமியங்கள் குறித்த அறிவினை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தருணத்தில் 1949-ல் பண்டித ஜவஹர்லால் நேரு தெரிவித்த கூற்றை நினைவு கூர்கிறேன். ஒரு மொழி இரண்டு விதமான பணிகளைச் செய்ய வேண்டும். அது பாரம்பரிய வேர்களில் காலூன்றி, அதேநேரத்தில், வளரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை விரிவுபடுத்திக் கொண்டு பரந்துபட்ட மக்களின் மொழியாகவும் திகழ வேண்டும். குறிப்பிட்ட சிலரின் மொழியாக மட்டுமே இருந்துவிடக் கூடாது.
வாழும் மொழியான தமிழ், மாறி வரும் உலகின் தேவைகளுக்கு ஏற்ப தன்னை உருவேற்றிக் கொள்ளும் என்று நம்புகிறேன். இந்த முயற்சியில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி தமிழுக்கான மைய நிறுவனம் முக்கியமான ஒன்று.
இன்று நடைபெறவிருக்கும், தமிழகத்தின் அடர்த்தியான கலாச்சார செறிவினை எடுத்துக்காட்டும் பிரம்மாண்டமான பேரணியைக் காண ஆவலாக உள்ளேன். முதல்வர் கருணாநிதி தமிழ்ச் செம்மொழி முதல் விருதினை பெற்றுள்ள டாக்டர் அஸ்கோ பர்போலாவுக்கு எனது வாழ்த்துக்கள். அறிஞர்கள் குவிந்துள்ள இந்த முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுச் சூழலில், கிளர்ச்சியான உணர்வும், அதிக எதிர்பார்ப்புகளும், நம்பிக்கையும் ததும்புகிறது. இந்த அறிஞர்கள், தமது கருத்துக்களை பரிமாறிக் கொண்டு, இந்த மாநாட்டை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிப்பார்கள் என்று நம்புகிறேன். இதனைக் காணும்போது, கல்வியாளர்கள் மிகுந்த மனமகிழ்வுடன் ஒருவரையருவர் சந்தித்து உரையாடுவது தொடர்பான வள்ளுவரின் சொற்கள்தான் நினைவுக்கு வருகின்றன.
சிறப்பான எதிர்காலத்திற்கான தமது பணிகளில் வெற்றியடைய வேண்டும் என்று இந்த மாநிலத்தையும், மக்களையும் வாழ்த்துகிறேன். இந்த மாநாடு வெற்றி பெறுவதற்கு எனது நல்வாழ்த்துகள். பிரம்மாண்டமான மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ள முதல்வருக்கும் எனது வாழ்த்துகள்," என்றார் பிரதிபா பாட்டீல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’