இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் போதிய மன நிறைவை அளிப்பதாக இல்லை. எனவே, இனியாவது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கைத் தமிழர்களுக்கு உரிய நிவாரணம் போய்ச்சேர நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தப்போவதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டு மெனவும் கேட்டுக்கொண்டார்.
தி.மு.கவின் உயர்நிலை கூட்டம் நேற்று முன்தினம் மாலை அண்ணா அறிவாலயத்திலுள்ள கூட்ட அரங்கில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் கூடியது. இந்தக் கூட்டத்தில் இரண்டு மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் இலங்கைத் தொடர்பாக நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்கள் வருமாறு:
இலங்கையில் யுத்தம் முடிந்து சுமார் ஓராண்டுக்கு மேலாகியும், இலங்கையில் தேர்தல் நடைபெற்று புதிய அரசு அமைத்த பின்னரும் கூட போரினால் பாதிக்கப்பட்ட சுமார் இரண்டரை லட்சம் தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்களது சொந்தப் பகுதிகளுக்குத் திரும்பியும், தங்கள் சொந்த வீடுகளில் வாழ முடியாத நிலை தொடர்ந்தும் நீடித்து வருகிறது.
ஏதாவது ஒரு காரணத்திற்காக தடுக்கப்பட்டு இன்னமும் முகாம்களில் வாழக்கூடிய சோகமான நிலைமை தொடர்ந்து கொண்டிருப்பது நம் அனைவருக்கும் மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இன்னமும் தற்காலிக முகாம்களில் உள்ள தமிழர்கள் உடனடியாக அங்கிருந்து விடுவிக்கப்பட்டு அவர்கள் தத்தமது சொந்த வீடுகளுக்குச் சென்று வாழ்வதற்கான வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும். சொந்தப் பகுதிகளுக்குச் சென்று இன்னமும் தவித்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு உடனடியாக அவர்களுக்குத் தேவையான வாழ்வாதõரங்கள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச பரிமாணம் அடைந்துள்ள இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டிய தேவை பற்றி இலங்கை அரசுக்கு பல்வேறு நிலைகளில் இந்திய அரசு நிர்ப்பந்தம் செலுத்தி வருகிறது. இலங்கைத் தமிழர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மத்திய அரசு 500 கோடி ரூபா ஒதுக்கீடு செய்துள்ளது. எனினும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாவை இலங்கைத் தமிழர்களுக்காக முறையாக பயன்படுத்தத்தக்க திட்ட வரைவுகளை இலங்கை அரசு செய்திட இன்னமும் முன்வரவில்லை என்பது வேதனையிலும், வேதனையான செய்தி.
எனவே இந்திய அரசு மனமுவந்து இலங்கைத் தமிழர்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ள 500 கோடி ரூபாவை உடனடியாக இலங்கைத் தமிழர்களுக்காக பயன்படுத்திட இலங்கை அரசாங்கத்தை இந்திய மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும் என்று இந்த உயர் நிலை செயற்றிட்ட குழு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
தமிழகத்தில் உள்ள முகாம்களில் தங்கியிருக்கும் 73,572 இலங்கைத் தமிழர்களை இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின் கீழ் மீள்குடியமர்த்தும் முயற்சியாக மத்திய அரசோடு கலந்து பேசி அவர்கள் அனைவரும் தமிழகத்திலே நிரந்தரமாகக் குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் தீர்மானித்து மத்திய அரசை ஏற்கனவே கேட்டுக் கொண்டும் இதுவரையில் மத்திய அரசு அது குறித்து தீவிரமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதை வருத்தத்தோடு சுட்டிக் காட்டுவதோடு இனியாவது இந்தப் பிரச்சினையில் ஆக்கபூர்வமான அணுகுமுறையை கையாண்டு துயருறும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
மலேசியாவில் தமிழ் அகதிகள்
இலங்கையிலிருந்து வெளியேறி மலேசியாவுக்கு அகதிகளாகச் சென்ற பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட 75 இலங்கைத் தமிழர்கள் மலேஷிய அரசினால் சிறைப்பிடிக்கப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலேஷியாவில் சிறைப்பட்டுள்ள 75 இலங்கை தமிழர்களை காப்பாற்றிட கருணை உள்ளத்தோடு முன்வரவேண்டுமென்று மத்திய அரசை கேட்டுக் கொள்கிறது என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இக் கூட்டம் முடிந்த பின் நிருபர்களுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டி கேள்வி:இலங்கை தமிழர் பிரச்சினை குறித்த தீர்மானத்தில் இனியாவது ஆக்கபூர்வமாக நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று சொல்லியிருக்கிறீர்கள். அப்படியென்றால் இதுவரை அவர்கள் செய்ததில் உங்களுக்கு திருப்தி இல்லை என்று சொல்லலாமா? பதில்: திருப்தியே இல்லை என்று சொல்ல முடியாது.போதுமான அளவுக்கு மனநிறைவு இல்லை. கேள்வி: இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? பதில்: அனுப்பப்பட்ட பொருட்கள் இன்னும் சரிவர அவர்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று புகார் இருக்கிறது. அது உண்மையாக இருந்தால் அதை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டுமென்பது எங்களுடைய வேண்டுகோள். _
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’