அரசாங்கம் 60,000க்கும் மேற்பட்ட மக்களை மீளக் குடியேற்ற முடியாத நிலையில் உள்ளது என்றால் அதற்கு முக்கிய காரணமாக இருப்பது உயர் பாதுகாப்பு வலயமாகும். இன்று வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களில் மக்கள் அடிப்படை வசதிகள் எதுவுமின்றி மிகவும் இக்கட்டான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறு யாழ். மாவட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அ. விநாயகமூர்த்தி தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள தமது வீட்டில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "தற்போது கதிர்காமர் முகாமில் 3,425 குடும்பங்களைச் சேர்ந்த 10,009 பேரும், ஆனந்தக்குமாரசுவாமி முகாமில் 5,559 குடும்பங்களைச் சேர்ந்த 16,164 பேரும், இராமநாதன் முகாமில் 4,627 குடும்பங்களைச் சேர்ந்த 13,683 பேரும், அருணாசலம் முகாமில் 4,355 குடும்பங்களைச் சேர்ந்த 13,436 பேரும், வலயம் 02இல் 2,702 குடும்பங்களைச் சேர்ந்த 8,670 பேரும், வலயம் 06 முகாமில் 826 குடும்பங்களைச் சேர்ந்த 2,809 பேரும் நடைப்பிணங்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
வடக்குக் கிழக்கில் போர் இடம்பெறும் போது இருந்த படைத்துறையின் கட்டுப்பாடுகள் இன்றும் தொடர்ந்த வண்ணமே இருப்பதுடன், மேலும் படைகள் வடக்கு கிழக்கில் குவிக்கப்பட்டு வருகின்றார்கள். இன்றும் கூட ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகவே வடக்கு கிழக்கு மாகாணம் காணப்படுகின்றது.
இங்கு இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. சிவில் நிர்வாகம் என்று கூறப்பட்டாலும் கூட, இது வெறும் கண்துடைப்புத்தான்.
ஒருவர் தனது பகுதியில் மீளக்குடியேற வழிவகுக்க வேண்டியது அவசியமாகும். இதனைத் தடை செய்வது பாரிய மனித உரிமை மீறலாகும்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் உயர் பாதுகாப்பு வலயத்தில் மக்களைக் குடியேற அனுமதிக்கும்படி கூறப்பட்டு ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் குறிப்பிட்ட குழு, பத்தாயிரம் பேர் மீளக் குடியேற விணணப்பித்து ஒன்பதாயிரம் பேர் தமது காணி உறுதிகளைச் சமர்ப்பித்து, எட்டாயிரம் பேரின் காணி உறுதிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
தெல்லிப்பளைச் சந்தியிலுள்ள இராணுவ முகாம், காங்கேசன்துறைப் பகுதிக்கு மாற்றப்பட வேண்டும். கீரிமலையின் இருமருங்கிலும் இன்று பாரியளவில் கற்கள் அகழப்பட்டு வருகின்றன. இதனால் அந்தப் பகுதி வெகுவிரைவில் கடலாக மாறக் கூடிய அபாயம் காணப்படுவதுடன் அயலில் உள்ள கிணறுகளும் கூட உவர் நீராக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று தென்பகுதியிலிருந்து அழைத்து வரப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயர் பாதுகாப்பு வலயத்தில் பணிபுரிகின்றார்கள். இந்நிலையில் ஏன் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இயங்க நடவடிக்கை எடுக்கக் கூடாது?" எனக் கேட்டார்.
-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’