வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 14 மே, 2010

இந்தியாவில் புலிகளுக்கான தடை நீடிப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்கப்படுவதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் போர் முடிவடைந்து ஒரு வருடத்தை தொடவுள்ள நிலையில் இந்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் நீடித்துள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை இன்று முதல் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தடை நீடிப்புக்கான காரணத்தை மத்திய அரசு அறிவிக்கவில்லை.
போர் முடிந்து விட்டது, பிரபாகரன் உள்ளிட்ட அனைத்துப் புலிகளின் தலைவர்களும் கொல்லப்பட்டு விட்டனர் என்று கடந்த ஆண்டு மே 18ஆம் திகதி இலங்கை அரசு அறிவித்தது.
பிரபாகரன், பொட்டு அம்மான் மரணங்கள் தொடர்பாக தொடர்ந்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதற்கேற்றபடி இந்த இருவரின் மரணச் சான்றிதழ்களையும் இதுவரை இலங்கை அரசு இந்தியாவிடம் கையளிக்காமல் உள்ளது.
அத்துடன், புலிகள் இயக்கத்திலிருந்து தப்பிச் சென்றவர்களால் தமிழ்நாட்டில் அவ்வமைப்பை புதுப்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவல்களையும் கருத்திற்கொண்டே அவ்வியக்கத்துக்கான தடை நீடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பின்னர் கடந்த 1992ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’