மதுராந்தகம்: டாக்டர்களால் இறந்து விட்டதாக் கூறப்பட்டவரை சுடுகாட்டுக்குக் கொண்டு போனபோது அங்கு அவருக்கு உயிர் இருப்பது தெரிய வந்து மீண்டும் மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை சூறையாடினர்.
மதுராந்தகத்தை அடுத்த மோச்சேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த அங்கமுத்து-மணியம்மாளின் மகன் சுந்தரமூர்த்தி (25). மணியம்மாளுக்கும், சுந்தரமூர்த்திக்கும் திடீரென வாந்தி பேதி ஏற்பட்டது.இதையடுத்து இருவரையும் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக அவரது உறவினர்களிடம் டாக்டர்கள் கூறினர்.
இதையடுத்து சுந்தரமூர்த்தியின் உடலை உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது திடீரென சுந்தரமூர்த்தி கண் விழித்து தலையை உயர்த்திப் பார்த்துள்ளார். இதைப் பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கை, கால்களில் அசைவு தெரியவே அவர் உயிருடன் இருப்பதை உணர்ந்தனர்.
இதையடுத்து இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு சுந்தரமூர்த்தைய தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர். இந்த தகவல் பரவி மருத்துவமனையில் உறவினர்களும், கிராம மக்களும் குவிந்து விட்டனர்.
சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக கூறினீர்களே, இப்போது அவருடன் உயிருடன் இருக்கிறார். முறையாக மீண்டும் சிகிச்சை அளியுங்கள் என்று டாக்டர்களை வலியுறுத்தினர். இதையடுத்து டாக்டர்கள் மீண்டும் சிகிச்சையைத் தொடங்கினர்.
ஆனால் ஒரு மணி நேரம் கழித்து வந்த டாக்டர்கள், சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக மீண்டும் கூறினர். இதைக் கேட்ட உறவினர்களும், கிராமத்தினரும் கோபமடைந்தனர். போராட்டத்தில் குதித்தனர்.
டாக்டர்கள் முறையாக சிகிச்சை அளிக்காமல் அஜாக்கிரதையாக நடந்து கொண்டதால் தான் சுந்தரமூர்த்தி இறந்து விட்டதாக கூறி போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது அவர்கள் மருத்துவமனையின் கண்ணாடி ஜன்னல் கதவுகளை அடித்து நொறுக்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது. மேலும் சுந்தரமூர்த்தியின் உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளும் விரைந்து வந்தனர். அனைவரும், போராட்டம் நடத்தியவர்களை அமைதிப்படுத்தினர்.
பின்னர் டாக்டர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சுந்தரமூர்த்தியின் உடலை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் வற்புறுத்தினர். இதையடுத்து மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.அதன் பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’