யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் கடத்தப்படுதல் மற்றும் பாலியல் வல்லுறவு, கப்பம் கோரிக் கடத்தல் போன்ற சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று யாழ். கோட்டை முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து கண்டனப் பேரணி ஒன்று நடைபெற உள்ளது.
மக்கள் சக்தி என்ற அமைப் பினால் இக் கண்டனப் பேரணி மேற்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து மக்கள் சக்தி அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுவர்கள் கடத்தப்படல், யுவதிகளைக் கடத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துதல் மற்றும் கப்பம் கோரி கடத்துதல் போன்ற சம்பவங்களை தமிழ் மக்களின் வாழ்வு உரிமையை பறிக்கும் செயல்களாகவே காண்கின்றோம். இச்செயலானது உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.
இது ஒரு வகையான மனித உரிமைமீறலும் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுகின்றமையாகும்.
இக் கண்டனப்பேரணியில் இந்து குருமார் ஒன்றியம், கிறிஸ்தவ குருமார் ஒன்றியம், யாழ் பல்கலைக்கழக சமூகம், அதிபர், ஆசியர்கள், அரச ஊழியர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், கிராம சேவையாளர்கள், மக்கள் பணித் தொண்டர்கள், இளைஞர்கள், யுவதிகள், வர்த்தகர்கள், கடற்தொழிலாளர்கள் சங்கங்கள், விவசாயிகள், பல நோக்கு கூட்டுறவுச் சங்க ஊழியர்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் உட்பட அனைவரையும் கலந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கண்டனப் பேரணி மனித உரிமைகள் ஆணைக்குழு, யாழ். செயலகம் மற்றும் யு.என். எச்.சி.ஆர். அலுவலகம் ஆகியவற்றுக்குச் சென்று அங்கு மகஜர்களும் கையளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’