வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 19 மே, 2010

எமது உற்பத்தியை ஐரோப்பிய நாடுகளில் சந்தைப்படுத்தக் கோரியுள்ளோம் : அமைச்சர் பீரிஸ்

சிறு கைத்தொழிலுக்காக இலங்கை மத்திய வங்கி வழங்கும் மூல வளங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஐரோப்பிய நாடுகளின் சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை நாம் கோரியுள்ளோம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்தார்.
இன்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
"எமது நாட்டில் மனித வளம் தாராளமாகவே உள்ளது. எனவே எமது உற்பத்திகளை தரம் வாய்ந்ததாக மாற்றி அமைக்க எம்மால் முடியும். சூழல் மாசடையாத வகையில், கைத்தொழிற்துறையை மேம்படுத்த முடியும். அது மட்டுமல்ல, சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வதே தமது நோக்கம் என ஜீ15 மாநாட்டில் பங்குகொண்ட 17 நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.

ஜி-15 மாநாட்டில் ஜனாதிபதி உரை

அதேவேளை, ஜி-15 மாநாட்டின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றுகையில்,
"புதிய தொழில்களை உருவாக்குதல், வறுமையை ஒழித்தல், பொருளாதார அநுகூலங்கள் பகிரப்படுவதில் நியாயத்தை உறுதிப்படுத்தல், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அபிவிருத்தியை ஏற்படுத்தல் போன்றன மஹிந்த சிந்தனையில் இடம்பெற்றுள்ளன.

பொருளாதார அபிவிருத்திக்காக கிராம மக்கள் நகரப் பிரதேசங்களை நோக்கி வரவேண்டியதில்லை. அந்தக் கொள்கையின் காரணமாக, தேர்தல்களில் பெரும்பான்மையானோர் எம்மை ஆதரித்தனர்.
எமது நாட்டு மனித வளத்தின் முக்கியத்துவம் தொடர்பில் ஜி15 நாடுகள் கவனம் செலுத்தவேண்டும். அபிவிருத்தியின் அனைத்துக் கட்டங்களிலும் நிர்மாண ரீதியான விடயங்களை உருவாக்க ஜி15 நாடுகள், ஜி 8 நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட வேண்டும் என்று யோசனையை முன்வைக்கின்றேன்.
ஜி15 நாடுகள் மற்றும் ஜி 8 நாடுகளுக்கு இடையிலான விடயங்ளை யதார்த்தமாக்குவதற்குத் தெளிவான பேச்சு முறைமை ஒன்று கட்டியெழுப்பப்பட வேண்டும். பொருளாதார நிதி, விஞ்ஞான மற்றும் கலாசாரம் போன்ற அனைத்து விடங்களிலும் நெருங்கிய உறவுகளைப் பேணுவதற்காக எமது அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையின் அனுபவம் மிக்க உறுப்பினர்களைக் கொண்ட செயலணி ஒன்றை உருவாக்கவேண்டும் என்ற யோசனையை முன்வைக்கின்றேன்" என்றார்.

ஜி-15 நாடுகள்
ஜி -15 நாடுகள், உலகின் மூன்றிலொரு சனத்தொகையைக் கொண்டுள்ளது. அத்துடன் இது உலகின் வெவ்வேறுபட்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது.
1989 செப்டெம்பர் மாதம் பெல்கிறேட்டில் 9ஆவது அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டின்போது ஜி-15 குழு ஸ்தாபிக்கப்பட்டது. வளர்முக நாடுகளிடையே வலுவானதும் பரஸ்பர நன்மை பயக்கக் கூடியதுமான மேம்பாட்டிற்கான குறிக்கோளை இது கொண்டுள்ளது
ஆஜென்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, ஈரானிய இஸ்லாமியக் குடியரசு, யமேக்கா, கென்யா, மலேசியா, மெக்சிக்கோ, நைஜீரியா, செனகல், இலங்கை, வெனிசூலா மற்றும் சிம்பாப்வே ஆகிய 17 வளர்முக நாடுகளை ஜி-15 அங்கத்துவமாகக் கொண்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’