டெல்லி: இந்தியாவுக்குள் 140 அல் கொய்தா தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக அஸ்ஸாமிலிருந்து உளவுத்தகவல் மத்திய அரசு க்குப் போயுள்ளது. இதையடுத்தே டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் உஷாராக இருக்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவிரவாதிகள் பெரும் நாச வேலையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை தகவல் எச்சரித்துள்ளது. நாட்டின் மேற்குக் கடற்கரை வழியாக இவர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து வருவதாகவும் அது எச்சரித்துள்ளது.
ஏற்கனவே லஷ்கர் இ தொய்பாவும், பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத குழுக்களும் இந்தியாவில் பெரும் நாச வேலைகளில் ஈடுபடும் திட்டத்துடன் இருப்பதாக உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில் அல்கொய்தா தீவிரவாதிகள் பெருமளவில் ஊடுறுவியிருப்பதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து மத்திய உள்துறை தீவிரவாதிகளின் இலக்காக இருக்கலாம் என கருதப்படும் மாநிலங்களை எச்சரித்துள்ளது.
இந்தியாவுக்குள் ஊடுறுவியுள்ள அல்கொய்தா தீவிரவாதிகள் இலங்கை மீன் பிடி படகுகளைப் பயன்படுத்தியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் கடற்படையோ, இத்தனை பேர் கடல் மார்க்கமாக, அதுவும் வெளிநாட்டு மீன் பிடி படகுகள் மூலமாக ஊடுறுவ வாய்ப்பே இல்லை என்று கடற்படையினர் மறுத்துள்ளனர்.
ஆனால் அஸ்ஸாம் உளவுப்படையினர் இந்தஊடுறுவல் தொடர்பாக பல விரிவான தகவல்களை உள்துறைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குஜராத்- மகாராஷ்டிரா கடற்கரை வழியாகவே தீவிரவாதிகள் ஊடுறுவியிருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறியுள்ளனர். அங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் பிரிந்து போயிருப்பதாகவும் கூறியுள்ளனர்.
இவர்களில் 30 பேர் ராஜஸ்தானுக்கும், உ.பிக்கு 14 பேரும், 15 முதல் 20 பேர் ஹைதராபாத்துக்கும், 12 பேர் மகாராஷ்டிராவுக்கும் போயிருப்பதாகவும் அஸ்ஸாம் உளவுத் தகவல் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 40 பேர் தென்மாநிலங்களுக்கு ஊடுறுவியிருப்பதாகவும், ஐந்து பேர் டெல்லி, ஹரியாணாவுக்குப் போயிருப்பதாகவும் அத்தகவல் மேலும் கூறுகிறது.
இவர்களில் சிலர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடந்த மோதலில் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அந்த தகவல் தெரிவிக்கிறது.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’