இலங்கை விவகாரங்களில் பான் கீ மூன் தலையீடு செய்ய முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். திவயின பத்திரிகைக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பிரச்சினைகளை விடவும் உலக நாடுகளில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான சில புலம்பெயர் சக்திகளே இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபான்ட் புலம்பெயர் தமிழர்களுடன் கூடுதல் தொடர்பினைப் பேணி வருவதாக அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
தனிப்பட்ட அதிகார ஆசை காரணமாக தமிழ் அரசியல் கட்சிகள் இன்று பிளவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், கடந்த ஒராண்டு காலப்பகுதியில் தாம் தமிழ் மக்களுக்கு பல்வேறு வழிகளில் சேவையாற்றி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அதிகளவு ஆதரவளிக்காத போதிலும், இம்முறை
நாடாளுமன்றத் தேர்தலில் நிலைமை மாற்றமடையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு பாரியளவு சேவைகளை ஏற்கனவே வழங்கி வருவதாகவும், எதிர்காலத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’