பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி யின் பொதுச் செயலாளரும் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் இக்கட்சி சார்பாகப் போட்டியிடும் முதன்மை வேட்பாளருமாகிய திருநாவுக்கரசு ஸ்ரீதரன் உதயன் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வி இது.
தமிழ்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் 30 வருட காலத்துக்கும் மேலாக போராடிவரும் அமைப்பே பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி. இது ஆரம்ப காலத்தில் ஒரு போராட்ட இயக்கமாகப் பரிணமித்துப் பின்னர் அரசியல் இயக்கமாகப் பரிணமித்துக் கொண்டிருக்கும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எவ் இம்முறை புளொட் அமைப்பினருடன் இணைந்து நாடாளு மன்றத் தேர்தலை எதிர் கொள்கின்றது.
கேள்வி: ஆரம்பகாலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தாங்கள் பின் அதனைக் கைவிட்டு ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்துகொண்டு செயற் படுகிறீர்கள்? இந்நிலையில் இத்தேர்தலை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறீர்கள்?
பதில்: 30 வருடகாலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் என்பதற்காகப் போராடி வருகின்றோம்.
கூட்டாட்சி முறை
எமது பிராந்திய நலன், புவிசார் அமைவிடம் என்பவற்றைக் கவனத்திற்கொண்டு இந்தியாவே எமது பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டிருப்பதுடன் அந்நாட்டுடன் நல்லுறவையும் பேணி வருகின்றோம்.
எமது பிரச்சினையின் தீர்வுக்கு இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி முறையே பொருத்தமானது என்றும் நம்புகின்றோம்.
வடக்கு, கிழக்கு தாயகத்தில் எமது சுய நிர்ணய உரிமையை வலியுறுத்துகின்றோம். நாம் படிப்படியாக எம் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்துவோம். இவற்றுக்காகவே நாம் புளொட் அமைப்பினருடன் இணைந்து இத் தேர்தலை எதிர்கொள்கின்றோம்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தங்களுடைய நிலைப்பாடு என்ன?
பதில்: எமது மக்களுக்கான தீர்வு விடயமாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து மக்களும் சுதந்திரமாக, சமத்துவமாக வாழ வேண்டும். இந்த நாடு சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் என அனைவருக்கும் பொதுவானது.
தனி ஓர் இனம் இதனைச் சொந்தம் கொண்டாட முடியாது. பல்லினங்களும் ஒற்றுமையாக வாழும் பல்லின நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
மாகாணசபைகள் பலப்படுத்தப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும். இதற்காக கிழக்கில் இருந்தும் பலமான குரல் ஒலிக்க வேண்டும்.
கேள்வி: அப்படியானால் நீங்கள் ஒஸ்லோ பிரகடனத்தை வலியுறுத்தவில்லையா?
பதில்: ஒஸ்லோ பிரகடனத்தின் அடிப்படையில் தீர்வு காணப்படுமாக இருந்தால் நாம் மகிழ்ச்சியடைவோம். ஆனால் சிங்களத் தலைமைகள் இதனைச் செய்ய முன் வருவார்களா என்பது சந்தேகமே. இன்றைய யதார்த்த களச் சூழலுக்கு எது பொருத்தமானதோ அதனை நாம் கவனத்தில் கொள்வதுடன் இந்தியாவின் அனுசரணையையும் பெற வேண்டும்.
கேள்வி: மாற்று அரசியல் தொடர்பாகத் தங்களுடைய நிலைப்பாடு அல்லது கருத்து என்ன?
பதில்: மாற்று அரசியல் என்பது எமது இனத்துக்கு இன்று கட்டாயம் தேவையானது. இம்மாற்று அரசியலில் வௌ;வேறு கருத்துக்கள் உடையவர்கள் பங்கேற்க வேண்டும். ஆனால் எமது சமூகத்தில் இன்று இந்நிலைமை இல்லை. வௌ;வேறு கருத்துக்களுடன் நாகரிகமான அரசியல் உறவு நிலை ஒன்று உருவாக வேண்டும்.
அரசில் தமிழர்கள் பங்காளிகளாக வேண்டும்
மக்களுக்கு அரசியல் போதை ஏற்றும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது. இலங்கை அரசில் தமிழ் மக்கள் பங்காளிகள் ஆக வேண்டும்.
கேள்வி: இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் அவர்களின் சொந்தக் காணிகளில் குடியமர்த்தப் படவேண்டும். அவர்களுக்கான உள்ளகக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
உயர்பாதுகாப்பு வலயங்கள் அனைத்தும் நீக்கப்படுவதுடன் 1980 ஆம் ஆண்டளவில் இராணுவ முகாம்கள் எந்நிலையில் இருந்தனவோ அந்நிலைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவை தவிர மே 18 இன் பின்னர் பயங்கரவாதச் சட்டம் தேவையில்லை எனவே அச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
கேள்வி: தமிழ் மக்களின் பிரச்சினை போன்று இணைந்த வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு. அவர்களுக்கு என்ன பதில் கூறுகிறீர்கள்?
பதில்: முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினைகள் உண்டு. அதனை நாம் மறுக்கவில்லை. முஸ்லிம் மக்களுடன் நாம் இணைந்து செயற்படுவோம். முஸ்லிம் மக்கள் தாம் பெரும்பான்மையாக வாழும் அம்பாறையை கேட்டால் அதனை நாம் வழங்கத்தயார். அவ்வாறு இல்லாது அம்பாறையை தலைமையகமாகக் கொண்டு பெரும்பான்மையாக வாழும் பகுதிகளை உதாரணமாக கல்முனை, யாழ்ப்பாணத்தின் சில பகுதிகள் போன்றவற்றின் அதிகாரங்களையும் நாம் வழங்கத் தயார்.
கேள்வி: எமது தாயகப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள்...?
சிங்களப் குடியேற்றத்தை தடுக்க இந்திய உதவி
பதில்: இது ஓர் உணர்வு பூர்வமான விடயம். நாம் தடுக்கக்கூடிய சில சந்தர்ப்பங்களை நாம் தவற விட்டுள்ளோம். இதனைத் தடுப்பதற்கு இந்தியாவின், சர்வ தேசத்தின் உதவியை நாம் பெறவேண்டும். இராணுவ மயப்படுத்தப்பட்ட இந்த சூழல் ஆபத்தானது. சிங்கள மக்கள் கிழக்கில் ஒரு சில இடங்களில் ஆரம்பத்தில் இருந்தனர். அதனை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் பெரும்பான்மையாக இருந்த தமிழினத்தை சிறுபான்மையாக்கும் செயல்களை நாம் தடுத்தாக வேண்டும்.
கேள்வி: வன்னியுத்தத்தின் பின் பெரும்பாலான தமிழ் மக்களிடம் இந்திய விரோதப் போக்கு அதிகமாக உள்ளது. ஆனால் தாங்கள் இந்தியாவின் நலனில் அக்கறை கொண்ட அமைப்பாக உள்ளீர்கள். இந்தியா தனது பிராந்திய நலனைக் கைவிட்டு இலங்கைப் பிரச்சினையில் உண்மையான அக்கறைகாட்டுமென நம்புகிறீர்களா?
பதில்: மக்களிடம் இந்திய விரோதப் போக்கு உள்ளது என்பதை எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது. தவிர, இந்தியாவின் பங்களிப்புடன் தான் எமது பிரச்சினையை நாம் தீர்க்க முடியும்.
இந்தியா சர்வதேச நாடுகளில் முக்கியத்துவம் பெற்ற நாடாக உள்ளது. இந்தியாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன.
எமது போராட்டம் பயங்கரவாதமாக நோக்கப்படுவதற்கு இந்தியாவின் இளம் தலைவர் அதுவும் பிரதமரை கொலை செய்ததால் தான் என்பதையும் நாம் உணர வேண்டும். அதற்கான பழிவாங்கல்தான் இவ் அழிப்பே தவிர தமிழ் மக்களுக்கு எதிரானதல்ல.
தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா சிரத்தையுடன் உள்ளது. இதனை இந்தியாவின் இராஜதந்திர உயர் அதிகாரிகள் எம்மிடம் கூறியுள்ளனர்.
கேள்வி: தமிழ் மக்களின் நம்பிக்கை யான தலைமையாக இருந்த விடுதலைப் புலிகளின் இயங்கு நிலை இன்று இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் தமிழ் மக்களை வழிநடத்திச் செல்லும் தலைமையாக யாரைக் கருதமுடியும்?
நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை
பதில்: வரலாற்றில் தலைமைகள் இல்லாமல் போனது கிடையாது. தலைவர்கள் பலரை விடுதலைப் புலிகள் அழித்து விட்டனர்.அவர்களில் அமிர்தலிங்கம், நீலன் திருச்செல்வம், பத்மநாபா போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இன்றைய அரசியலில் நேர்மையான இளம் அரசியல் தலைமைகள் தேவை. இதற்கு நாம் அரசியல் ரீதியான கற்பித்தல், எழுச்சி, போராட்டம் என்பவற்றின் ஊடாக இளம் சமுதாயத்தைக் கொண்டு புதிய தலைமை உருவாக்கப்பட வேண்டும். அத்தலைமை சமூகப்பிரக்ஞையுடையதும் நேர்மையானதாகவும் இருத்தல் வேண்டும். இன்று தாமே தலைமைகளாகவும், ஏகப்பிரதிநிதிகளாகவும் வேண்டும் எனும் நினைப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகிறது. இவர்கள் கபடத்தனமாக வந்தவர்கள். இவர்களை மக்கள் தூக்கி வெளியில் போடவேண்டும்.
பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பிரதிநிதிகளாக தெரிவாக வேண்டும். ஏகப் பிரதிநிதித்துவம் என்னும் சொல்லையே இல்லாது செய்யவேண்டும்.
கேள்வி: விகிதாசாரத் தேர்தல் சிறு பான்மை இன மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்றும் இம்முறையைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்படுகின்றதே....?
பதில்: யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரையில் இம்முறைமையினாலோ அல்லது தொகுதி ரீதியிலான தேர்தலைக் கொண்டு வருவதாலோ பாதிப்பு ஏற்படப் போவதில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்திலும் மலையகத்திலும் தொகுதி ரீதியான தேர்தல் முறைமை தமிழ்மக்களின் பிரதி நிதித்துவத்தை இல்லாது செய்துவிடும். இத்தேர்தல் முறைமையிலும் மாற்றம் அவசியம். இதற்காக ஜேர்மனியில் உள்ளது போன்று தொகுதியும் விகிதாசாரமும் கலந்த தேர்தல் முறைமையைக் கொண்டு வரவேண்டும்.
கேள்வி: ஈழத்தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வில் புலம்பெயர் சமூகம் தவிர்க்க முடியாத சக்தி. அவர்கள் தொடர்பில் என்ன கருதுகின்றீர்கள்.
புலம்பெயர்ந்தவர்கள் நாட்டுக்கு வரவேண்டும்
பதில்: நிச்சயமாக அவர்கள் தவிர்க்கப்பட முடியாதவர்கள். நாட்டைவிட்டு வெளியேறிய அவர்கள் மீண்டும் இங்கு வரவேண்டும். இங்கு முதலீடுகளைச் செய்யவேண்டும். ஆனால் அவர்களில் பலர் கனவுலகில் உள்ளனர். அவற்றிலிருந்து அவர்கள் விடுதலை பெறவேண்டும். இளம் தலைமுறைக்கும் இம் மண்ணுக்குமான உறவு விட்டுப் போய்க்கொண்டு இருக்கிறது. அந்த இடைவெளியை நாம் நிரப்பவேண்டும். புலம்பெயர் இலக்கியமே இன்று அழிந்துபோய்க் கொண்டுள்ளது. அங்குள்ள கலைச்செல்வங்கள் இங்கு கொண்டு வரப்படவேண்டும்.
கேள்வி: புலம்பெயர் சமூகத்துடன் தங்களுடைய உறவுநிலை எவ்வாறு உள்ளது?
பதில்: நாங்கள் அம்மக்களுடன் தொடர்ச்சியான உறவைப் பேணி வருகின்றோம். அங்குள்ள மாற்றுக் கருத்துடையவர்களையும் சந்திக்கின்றோம். அங்கு நடைபெறும் இலக்கியச் சந்திப்புக்கள், பெண்கள் வட்ட சந்திப்புக்கள் என்பவற்றில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். அங்கிருந்தும் புதிய தலைமைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.
வரதர் வருவாரா?
கேள்வி: தங்களுடைய தலைவர் வரதராஜப்பெருமாள் குறித்து தகவல்களை அறியமுடியவில்லையே? இலங்கையின் அரசியலில் அவர் மீண்டும் வருவாரா?
பதில்: அவர் இப்போது இந்தியாவில் உள்ளார். இணைந்த வடக்கு, கிழக்கின் முதலாவது முதல்வராக இருந்தவர். அவர் விரைவில் இங்கு வந்து அரசியல் பணிகளை முன்னெடுப்பார். அவரின் பொருளியல் அறிவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப துணைநிற்கும்.
கேள்வி: உதயன் ஊடாக மக்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்.
பதில்: மக்கள் தமது தலைமைகளைத் தேர்ந்தெடுப்பதில் தெளிவாக இருத்தல் வேண்டும். தவிர அனைவருமே தமது வாக்குரிமையைப் பயன்படுத்தவேண்டும். வெறுமனே வாய்ப்பந்தல் போட்டு மக்களை ஏமாற்றும் தலைமைகளை விரட்டியடிக்க வேண்டும். மக்கள் யதார்த்தபூர்வமான, நடைமுறைச் சாத்தியமான தீர்வு குறித்து சிந்திக்கவேண்டும். தாம் பழக்கப்பட்ட கட்சிக்குப் போடாது சிந்தித்துப் போடவேண்டும். ஒரே கட்சியில் பலரை அனுப்புவது மக்களுக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இம்முறை மக்கள் அனைத்துக் கட்சிகளில் இருந்து பிரதிநிதிகளைத் தேர்வு செய்யவேண்டும். அப்போதுதான் பிழைகள் விடமாட்டார்கள். வெளிநாடுகளுக்குச் செல்லாது தொகுதியிலேயே இருப்பார்கள்.
மக்களே! நீங்கள் எம்மை மாத்திரம் தெரிவு செய்யுமாறு நான் கூறவில்லை. எங்களிலும் சிலரைப் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யுங்கள். தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க எமக்கும் ஒரு சந்தர்ப்பம் தாருங்கள். இத்தேர்தலில் போட்டியிடும் பத்மநாபா ஈழமக்கள் புரட் சிகர விடுதலை முன்னணியின் சின்னமான மெழுகுதிரிக்கு உங்கள் வாக்கை இட்டு உங்கள் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’