
முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்ட அவரது செயலர் சேனக டி சில்வா தொடர்பாக பல திடுக்கிடும் தகவல்களை குற்றப்புலனாய்வு துறையினர் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பாக அரசின் உயர் மட்டத்திலும் சட்ட மா அதிபர் திணைக்கள மட்டத்திலும் தொடர்ச்சியான பேச்சுக்கள் நடைபெற்று வருவதாக உயர் அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அந்த வட்டாரங்கள் தெரிவித்திருப்பவை வருமாறு:-
சரத் பொன்சேகாவுடன் கைது செய்யப்பட்ட சேனக டி சில்வா இலங்கையில் 1980 களில் மேற்கொண்ட பாரிய கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடையவர். அக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்டு மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் நன்னடத்தை காரணமாக தண்டனைக்காலத்துக்கு முன்பாகவே விடுவிக்கப்பட்டார்.
இவர் பெல்ஜியத்தில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர். ஆனால், அங்கிருந்து தண்டனை அனுபவிக்காமலேயே இலங்கைக்கு தப்பிவந்துவிட்டார். இவரை தேடிக்கண்டுபிடிக்க முடியாமல் முயற்சியை கைவிட்ட பெல்ஜியம் பொலிஸார், தற்போது பொன்சேகாவின் கைது சம்பவத்துக்கு பின்னர் சேனக சில்வாவின் புகைப்படங்கள் மற்றும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்த பின்னர், பெல்ஜியம் பொலிஸார் இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை புலனாய்வு துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
ஆனால், இலங்கைக்கும் பெல்ஜியத்துக்கும் இடையில் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான ஒப்பந்தம் இல்லாததால், சேனக சில்வாவின் விடயத்தில் என்ன நடைமுறையை பின்பற்றுவது என்பது தொடர்பாக இலங்கையின் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இலங்கை புலனாய்வுத்துறையினர் ஆலோசனை கேட்டுள்ளனர்.
இதேவேளை, சரத் பொன்சேகா அரச தலைவராக வெற்றிபெற்றிருந்தால் சேனக சில்வாவே பாதுகாப்பு அமைச்சின் செயலராக நியமிக்கப்படவிருந்தார் என்ற தகவலும் தற்போது புலனாய்வு துறையினருக்கு தெரியவந்துள்ளது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’